1.கண் எரிச்சல்: கோடைகாலத்தில் கண் தொடர்புடைய நோய்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. கண்கள் சிவப்பது, எரிச்சல், அரிப்பு போன்றவையும், கண்களில் வீக்கமும் தோன்றுவதால் அதிக சிரமம் ஏற்படும். கணினியில் பணிபுரிபவர்களுக்கு கண் பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் கோடையில் அந்த பாதிப்பு அதிகமாகவே இருக்கும். எனவே கண்களை பராமரிக்க மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.
2.அதிக நேரம் வெயிலில் அலைபவர்களுக்கு: சூரிய ஒளியின் தீவிரம் கண்களையும் விட்டு வைப்பதில்லை. எனவே வெயிலில் போகும் போது சன் கிளாஸ் அணிந்து கொள்வது அவசியம். அதிகம் வெயிலில் செல்லாதவர்களுக்கு என்றாவது ஒருநாள் படும் சூரிய வெளிச்சம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள் கட்டாயம் கண்களுக்குக் கண்ணாடி அணிய வேண்டும். கண்களில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்கள் அதற்கேற்ற கண்ணாடிகளை அணிய வேண்டும்.
3.கண்ணாடி அணிய வேண்டும்: வாகனங்களில் சென்றாலோ, நடந்து செல்லும் போதோ சூரிய ஒளியின் கதிர்களில் இருந்து பாதுகாக்கக் கூடிய கண்ணாடி அணிந்து செல்வது கண்களுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும்.
4.தலைக்கு குளிக்கவும்: தலை சுத்தமாக இல்லையென்றாலும் கண் நோய்கள் வரும் எனவே கோடை காலத்தில் வாரம் மூன்றுநாள் தலைக்கு தண்ணீர் ஊற்றலாம். இந்த கண்நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்தமான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந்து விட்டு சுகாதாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது.
5.தொற்று நோய்கள்: வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். கண் நோய் ஏற்பட்டால் தலைவலி உண்டாகும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும்.
6.கண்கள் சோர்வு: கணினியில் பணியாற்றுபவர்களுக்கு , கண்களில் சோர்வு ஏற்படுவது இயல்பு. இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் கழுவவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
7.இளம் சூடு ஒத்தடம் கொடுக்கவும்: அவ்வப்போது உள்ளங்கைகளை இணைத்து இணைத்துத் தேய்த்து இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் மூடி உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும். பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அலுவலகம் விட்டு வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.
8.ஊட்டச்சத்துணவு: கண்களை பாதுகாக்க ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ளவேண்டும். அலுவலகம் செல்லும் போது கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும். கோடைகால நோய்களில் இருந்து தப்பிக்கலாம். கோடை காலத்தில் தினசரி 6 முதல் 8 மணிநேரம் உறங்குவது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.