ஓமன் வளைகுடாவில் மர்மமான முறையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் நோர்வேக்கு சொந்தமான பிராண்ட ஆல்டேர் டேங்கர் கப்பலில் மூன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது என நோர்வே கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பலான Kokuka Courageous மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை அடுத்து இரண்டு கப்பல்களிலும் இருந்து குழுவினர் வெளியேற்றப்பட்டு பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். முதலில் தாக்குதலில் சிக்கிய பிராண்ட் ஆல்டேர் கப்பல் கடலில் மூழ்கியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே பகுதியில் கடந்த மே மாதம் நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மே மாத தாக்குதலை அடுத்து உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்தது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து செய்தி தங்களுக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேகத்திற்குரிய தாக்குதல் குறித்து பிராந்திய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியா தரப்பிலும் இத்தாக்குதல் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.