ஏன் தமிழரோடு கைகோர்த்தார் மோடி! வெளிவிவகார அமைச்சராக மிரட்டுவாரா ஜெய்சங்கர்!

0

பெரும் பரபரப்பு கட்டத்தையடைந்திருந்த இந்திய தேர்தல் களத்தில் மீண்டும் வெற்றி வாகை சூடிய மோடியின் காய் நகர்த்தல்கள் இம்முறை பலமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்தல், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் இருக்கும் சிக்கல்களை களைதல், உள்நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் பொருளாதாரச் சிக்கல்கள் என்று பெரும் சவால்கள் காத்திருக்கின்றன மோடி தலைமையிலான அரசுக்கு.

இந்த நிலையில் புதிய அமைச்சரவையில், தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட முன்னாள் வெளியுறத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சுப்ரமணியம் (64), வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், முன்னாள் வெளியுறத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சுப்ரமணியம் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டது பரபரப்பை மட்டுமல்ல, எதிர்பார்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கான முழுமையான காரணங்களில் சிலவற்றை அணுகலாம், குறிப்பாக இந்திய வரலாற்றில் வெளியுறவுத் துறை செயலராக பணியாற்றிய ஒருவர், வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளது இதுவே முதல்முறை என்கின்றன இந்திய அரசியல் தகவல்கள்.

கடந்த 1977ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவு அதிகாரியான ஜெய்சங்கர், அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டப்படிப்பும், சர்வதேச நாடுகளுடனான உறவுகள் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.

கடந்த 2015-2018 ஆண்டுகளில் வெளியுறவுச் செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட டோக்காலாம் விவகாரத்தில் சுமூகமான தீர்வு காணப்பட்டதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. அதையடுத்து டாடா குழுமத்தின் சர்வதேச விவகாரங்கள் துறை தலைவராகவும் பணியாற்றியிருப்பதும் சுட்டிக்காட்டத்தக்க விடையமாக இருக்கிறது.

வெளியுறவு செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற 16 மாதங்களில் அவரை அமைச்சராக மோடி நியமித்திருப்பதும் கூடுதல் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சீனா, அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது, ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு ஜெய்சங்கர் தலைமையிலான வெளியுறவு அமைச்சகம் முக்கியத்துவம் அளிக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கவாய்ப்பில்லை.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படாத ஜெய்சங்கர், பதவியேற்று 6 மாதத்துக்குள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பாரதிய ஜனதா கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறக் கொள்கைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த அதேவேளை, இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் வெகுவாக அதிகரித்தது.

ஆசியாவில் தன்னுடைய பட்டுப்பாதைத் திட்டத்தை சீன மிக இலாபகமாக கையாண்டு தன்னுடைய இருப்பை நிலை நிறுத்தியிருந்தது.

குறிப்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு அதிகளவான நிதியினைக் கடனாகக் கொடுத்தும், குறித்த நாடு அக்கடனை மீளக் கையளிக்க முடியாத நிலையிலிருப்பதை உணர்ந்தும் சீனா தன்னுடைய கடன் உதவித் திட்டத்தினூடாக தன் நிலைத்தலை அந்நாட்டில் உறுதிப்படுத்திக் கொள்ளும்.

இலங்கை போருக்குப் பின்னர் அதிகளவான அபிவிருத்திகளுக்கு இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி சீனா தன்னை வலுவாக இலங்கையில் நிலை நிறுத்திக் கொண்டது. அதேபோன்று, பாகிஸ்தான், நேபாளம், மாலைதீவுகளிலும் தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவைச் சுற்றி சீனா வகுக்கும் திட்டங்களை உண்மையில் மத்திய அரசாங்கமும் வெளிவிவகார அமைச்சும் சரியாக கையாளவில்லை என்னும் குற்றச்சாட்டுக்கள் அதிகளவில் எழுந்தன.

வல்லரசுக் கனவோடு காய் நகர்த்தும் இந்திய அரசின் திட்டங்களுக்கு மிகப் பெரும் தலையிடியாக அமைந்திருந்தது சீனாவின் இப்பட்டுப்பாதைத் திட்டம். இந்நிலையில் அண்டை நாடுகளை மீட்க வேண்டிய அதிபெரும் சிரத்தை மோடி தலைமையிலான அரசுக்கு இருக்கிறது. அதற்கு அதிதிறன் வாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளும், அமைச்சரும் தேவைப்பட்டிருக்கிறார்.

அதற்கு ஜெய்சங்கர் பொருத்தமான நபரா என்கிறார் கேள்விக்கு சந்தேகமேயில்லை. அவர் அதற்கு ஏற்ற தலைவர் என்கிறார்கள் இந்திய அரசியல் வல்லுநர்கள். காரணம், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, பிரதமராக இருந்த மன்மோகன், இவரைத்தான் வெளியுறவுத்துறைச் செயலராக நியமிக்க ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், சோனியா காந்தி தடுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவராக அன்று செயற்பட்ட சோனியாவின் நெருக்கடி காரணமாக சுஜாதா சிங் வெளியுறவுத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். மோடி பிரதமரான பிறகு, சுஜாதா சிங்குக்கு 2015-ம் ஆண்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அந்த இடத்துக்கு ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டவர் என்கின்றன தகவல்கள்.

ஆக, மன்மோகன் சிங்கின் ஆசையும் அதுவாகவே இருந்திருக்கிறது. பிரதமராகச் செயல்பட்ட மன்மோகன் சிறந்த பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர் என்று பெயர் பெற்றவர். இந்நிலையில், தன்னுடைய வெளிவிவகாரக் கொள்கைக்கு ஜெய்சங்கர் சுப்ரமணியம் சரியானவர் என்று கணித்திருக்கிறார்.

மன்மோகனின் கணிப்பை பிரதமராக மீண்டும் தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட மோடி ஜெய்சங்கர் சுப்ரமணியத்தை தன்னுடைய பக்கத்தில் அரவணைத்துக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய அடுத்த ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ள மோடியின் முதல் திட்டமே இலங்கை மாலைதீவு போன்ற நாடுகளுக்கான பயணம் என்றும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையில், இந்தப் பயணம் மிகச் சாதாரணமானதாக கருதிவிட முடியாது. இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சீனாவின் ஆதிக்கம், அமெரிக்காவின் ஆசியப்பார்வை என்று அதிகளவான தாக்கத்தை இந்தியா அண்மைய நாட்களாகவே அடைந்திருக்கிறது. இவற்றை சமாளிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு பொருத்தமானவராக மோடி ஜெய்சங்கரை கருதியிருக்கிறார்.

ஏனெனில். கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் முதல்நிலைச் செயலராகவும், இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராகவும் செயற்பட்ட ஒருவரை வெளிவிவகார அமைச்சராக நியமித்திருக்கிறார் மோடி.

ஆக, பெரும் அரசியல் காய்நகர்தத்தல்களை அடுத்தடுத்த நாட்களில் இந்திய வெளியுறவுத்துறை செய்யும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இலங்கை மீதான சீனாவின் தாக்கத்தை, ஆதிக்கத்தை மோடி எவ்வாறு தணிப்பார்? கடந்த முறை பிரதமராக பொறுப்பேற்ற போதும் இலங்கை நோக்கி வந்திருக்கிறார். இந்தியப் பிரதமர்களில் இலங்கைக்கு அதிகளவில் பயணம் செய்தவர்களில் மோடி முதன்மையானவராக இருக்கிறார்.

ஆனாலும், சீனாவின் தாக்கத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் ஜெய்சங்கர் என்னும் திறன்வாய்ந்த அதிகாரியை அமைச்சராக்கியதன் மூலம் மோடி சாதிப்பாரா? தன்னுடைய திட்டத்தின் மூலம் மோடியி தான் ஒரு கில்லாடி என்பதை நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுகவின் சில உறுப்பினர்கள் சொல்வதைப் போன்று மோடி இந்தியாவின் டாடியாக தன்னை அடையாளப்படுத்தி இவ்வாட்சியில் வெற்றி நடைபோடுவாரா என்பதை நகர்த்தப்படும் அரசியல் காய்நகர்த்தல்களே சாட்சியாகும்.

தன்னுடன் கைகோர்த்திருக்கும் தமிழரான ஜெய்சங்கரின் துணையோடு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் எப்படி விளையாடப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்ச்சைக்குரிய வைத்தியர் சிஹாப்தீனின் மனைவியும் சிக்கினார்!
Next article20 ஆண்டுகால சாதனை! நியூசிலாந்திடம் தோற்றாலும் கெத்து காட்டிய இலங்கை அணி தலைவர் கருணாரத்னே!