ஏடிஎம்மில் 10 லட்ச ரூபாய் கொள்ளை: 2 நைஜீரிய இளைஞர்கள் கைது!

0

சென்னை போருர் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவரை கத்தியால் வெட்டி ரூ.10 லட்சம் பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் ஒரு மாதம் கழித்து இரண்டு நைஜீரியர்கள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.

சென்னை வடபழனியில் வங்கிகளின் ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி மதியம் 35 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக தேவராஜ், முரளி என்ற இரண்டு ஊழியர்கள் சென்றனர்.

வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், காட்டுப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பிய பின் ரூ. 14 லட்சம் பணத்தை மூவேந்தர் நகர் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

பணத்தை நிரப்பும்போது ஏடிஎம் மையத்தின் ஷட்டரை அடைக்காமல் கவனக்குறைவாக இருந்தனர். உடன் துப்பாக்கி ஏந்திய காவலாளியும் இல்லை. ரூ.4 லட்சத்தை ஏடிஎம் இயந்திரத்திற்குள் வைத்த நிலையில் ஏடிஎம் மையத்திற்குள் வந்த இருவர் அவர்களைத் தாக்கினர்.

ஹெல்மெட் அணிந்து, கையுறை அணிந்து பணத்தைத் தரும்படி மிரட்டிய அவர்கள் பணம் தர மறுத்த ஊழியர் தேவராஜின் கையைக் கத்தியால் வெட்டி விட்டு ரூ.10 லட்சம் பணப்பெட்டியைப் பறித்துச் சென்றனர். இந்தக் காட்சிகள் அனைத்து அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தன.

கொள்ளை குறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர். பணம் நிரப்பிய ஊழியர்களையும் போலீஸார் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து விசாரித்தனர்.

மதுரவாயல் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். எஸ்.ஐ. செல்லதுரை, காவலர் வினோத் தலைமையிலான தனிப்படை பல்வேறு விசாரணைகளை நடத்தினர். அதில் அருகிலுள்ள கடைக்காரர்கள் சொன்ன தகவல் நல்ல பலனைத் தந்தது.

கொள்ளையடிக்க வந்தவர்கள் ஆங்கிலத்தில் பேசினர். அது நமது வழக்கமான ஆங்கிலம் போல் இல்லை. அவர்கள் தோற்றம், கொள்ளையடித்த ஸ்டைல் ஆங்கிலப் படத்தின் காட்சி போல் இருந்தது எனத் தெரிவித்தனர்.

கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. ஆனால் வாகன எண்ணைச் சோதித்தபோது அது அப்பகுதியில் உள்ள ஒருவரின் மோட்டார் சைக்கிள் எனத் தெரியவந்தது. அவர் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.

கொள்ளையர்கள் இருவரும் அவரிடம் வாடகைக்கு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த அகோமி என்கிற நைஜீரியர் எனத் தெரியவந்தது.

அங்கு அதிரடியாக போலீஸார் நுழைந்து சோதனையிட அகோமி தான் கொள்ளையடிக்கவில்லை தனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்றும் சாதித்தார். அப்போது அங்கிருந்த பைகள், ஹெல்மெட் உள்ளிட்டவற்றைக் காட்டி போலீஸார் விசாரிக்க அது தனது நண்பனுடையது அவர் கர்நாடக மாநிலம் ஹசாரேவில் தங்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அகோமியை போலீஸ் பிடியில் வைத்த போலீஸார், நண்பன் பெரைலைத் தேடி போலீஸார் மைசூர் சென்றனர். ஆனால் மைசூரில் அந்த விலாசத்தில் பெரைல் இல்லை. பின்னர் அவரது போன் காலை வைத்து ட்ரேஸ் செய்ததில் ஹசாரே எனும் இடத்தில் தனது காதலியுடன் பெரைல் தங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தானும் தனது நண்பர் அகோமியும் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டோம் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப் பயன்படுத்திய பொருட்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடித்த பணம் ரூ 10 லட்சத்தை செலவழித்துவிட்டதாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர். நைஜீரியாவைச் சேர்ந்த அகோமி இண்டர்நேஷனல் மெரைன்டைனில் படித்து வேலையில்லாமல் சுற்றிவருகிறார். பெரைல் நைஜீரியாவைச் சேர்ந்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிஎஸ்கேவின் பயிற்சி ஆட்டத்தைக் காண இவ்வளவு கூட்டமா? ஆச்சர்யத்தில் மூழ்கிய வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்!
Next articleஆண் வாரிசு சிங்கக் குட்டி என்று மார்தட்டிக் கொண்ட தந்தையரே.. அவன் அன்னையை, தங்கையை, ஆசிரியையை, தோழியை சமமாகப் பாவிப்பதை உறுதி செய்ய என்ன செய்தீர்கள்?