உலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2 பற்றிய சுவாரஷ்ய தகவல் இதோ…!

0

உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சந்திரயான்-2 வின் பற்றிய சுவார்ஸ்யமான தகவல் தான் இது..

ஒரு கால கட்டத்தில் இந்தியாவை கேலி செய்த நாடுகளே இன்று இந்தியாவை புகழ்ந்து பாராட்டும் அளவுக்கு விண்வெளித்துறையில் இஸ்ரோ பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

சந்திரயான் -1, மங்கள்யான் ஆகியவற்றைத் தொடர்ந்து விண்வெளித் துறையில் இந்தியாவின் அடுத்த முக்கியமான மைல் கல்லாக சந்திரயான் -2 பார்க்கப்பட்டது. இது முழு வெற்றி இல்லையென்றாலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு விண்வெளித்துறையில் சாதனை படைக்க முயற்சித்த நான்காவது நாடு என்ற பெருமையை இஸ்ரோ பெற்றுள்ளது.

சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா? அந்த கணத்தில் இருந்து அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து என உலக நாடுகள், விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அத்தனை நாடுகளின் பார்வையும் சந்திரயான்-2 மீது பதிந்து விட்டது.

சாதனைகள்

விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதே ஒரு சாதனை.

பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதும் சாதனை.

நிலவை நோக்கிய சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தை ஆகஸ்டு 14-ந்தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கி வைத்தது சாதனை.

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் ஆகஸ்டு 20-ந்தேதி சந்திரயான்-2 நுழைந்தது சாதனை.

இந்த சாதனைகளைத் தொடர்ந்து புரிந்த மகத்தான சாதனைதான், சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த 2-ந்தேதி பிரிந்த செயல்.

சந்திரயான்-2 என பேசி வந்தவர்கள் திடீரென ஆர்பிட்டர் என்கிறார்கள், லேண்டர் என்கிறார்கள், ரோவர் என்கிறார்கள் ஒன்றுமே புரியவில்லையே என்று சாமானியர்கள் நினைக்கக்கூடும். இப்படி நினைத்தால் அதில் தப்பே இல்லை. சந்திரயான் 2 விற்கு மூன்று கலன்கள் முக்கிய பகிதியாக கருதப்படுகிறது.

அதில் ஒன்று, ஆர்பிட்டர். இதுதான் சுற்றுவட்டக்கலன். இதுதான் நிலவை ஓராண்டு காலம் சுற்றக்கூடிய கலன். ஆங்கிலத்தில் இது ஆர்பிட்டர். இதன் எடை 2,379 கிலோ. இதுதான் பெங்களூரு அருகே பைலாலுவில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடியது.

இரண்டாவது கலன்தான் லேண்டர். இதன் எடை 1,471 கிலோ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பெயரைத்தான் இந்த லேண்டருக்கு விக்ரம் என சூட்டி இருக்கிறார்கள். இது ஒரு சந்திர நாள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஒரு சந்திர நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம். இதுவும் இஸ்ரோ மையத்துடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

மூன்றாவது கலன்தான் ரோவர். இதன் எடை 27 கிலோ. இதற்கு பிரக்யான் என பெயர் சூட்டப்பட்டது. பிரக்யான் என்றால் சமஸ்கிருதத்தில் ஞானம் அல்லது அறிவு என பொருள். இது 6 சக்கரங்களைக் கொண்ட ரோபோ வாகனம். ரோவரைப் பொறுத்தமட்டில் அது விக்ரம் லேண்டருடன் மட்டுமே தகவல் தொடர்பு பரிமாற முடியும்.

தென் துருவப்பகுதியில் விக்ரம் லேண்டரின் ‘சாப்ட் லேண்டிங்’ தான் மிகப்பெரும் சவாலான பணி ஆகும்.

அப்படி என்ன பெரிய சவால் என மனித மனங்கள் கேட்பது இயல்பு.

பூமியைப் போன்று நிலவில் காற்று மண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை தரை இறக்க பாராசூட்டைப் பயன்படுத்த முடியாது. எரிபொருளைப் பயன்படுத்தி, சம நிலையில் மெல்ல மெல்ல தரை இறங்கச்செய்வதுதான் ஒரே வழி.

லேண்டர்தான் தனது சொந்த ராக்கெட் என்ஜினைக் கொண்டு, அதன் வேகத்தை சீராக குறைத்துக்கொள்ளும்.

நிலவின் தென் துருவத்தின் மேற்பகுதியை நெருங்க நெருங்க லேண்டரும் நகர்வது இயல்பான நிகழ்வு.

நிலவின் தென் துருவப்பகுதியில் லேண்டர் தரை இறங்கும் தருணத்தில், அதன் ராக்கெட் என்ஜின் தனது நகர்வை நிறுத்துவதும், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்துவதும்தான் சவாலோ சவால். இதைத்தான் விண்வெளி விஞ்ஞானிகள் ‘சாப்ட் லேண்டிங்’ என்று சொல்கிறார்கள்.

இந்த லேண்டருக்குள்தான் பிரக்யான் என்னும் ரோவர் ரோபோவும் அடக்கம். ரோபோவால் நிலவின் மேற்பரப்பில் அரை கி.மீ. தொலைவுக்கு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல முடியும்.

மொத்தத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் 14 கருவிகள் உள்ளடக்கம். அவற்றில் 13, இந்தியாவினுடையது. எஞ்சிய ஒன்று, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு உரியது.

“இது உண்மையிலேயே இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அறிவியல், தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து விண்வெளி பயண நாடுகளும் முன்னேறுவதற்கு உதவக்கூடியதாகும். நிலவுக்கான எங்கள் ஆய்வு மற்றும் நிலவில் மனிதனின் நிரந்தர இருப்பை ஏற்படுத்த இன்னும் சொல்வதானால் நிலவின் மனிதனை இருக்கச்செய்வதற்கும்கூட உதவும்”.

வெறும் ரூ.978 கோடியில், ஹாலிவுட் வெற்றிப்படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்-ஐ விட குறைந்த பட்ஜெட்டில், சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் தீட்டி செயல்படுத்தியதைக் கண்டு நாசா விஞ்ஞானி ஜெர்ரி லினெங்கர் வியக்கிறார்.

“இதில் இருந்து உலகம் கற்றுக்கொள்ள முடியும். மலிவான செலவில் விண்வெளி திட்டங்களை தீட்ட இயலும். இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தி கற்றுக்கொள்ள முடியும். இது மனித குலத்தின் அறிவு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்”.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதயிரையும் மாம்பழத்தையும் ஒன்னா சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா?.. சுவாரஷியமான தகவல்..!
Next articleதீய சக்திகளை அலண்டு தலை தெறிக்க ஓட செய்யும் ஒற்றை வரி மந்திரம்! 12 ராசிக்காரர்களும் உடனே படிக்கவும் !