உட்காருமிடத்தில் இப்படி கட்டி இருக்கிறதா? வலி உயிர் போகிறதா? என்ன பண்ணலாம்?

0
1297

உடலின் பின்பக்கம் உட்காருமிடத்தில், புட்ட பிளவின் மேல்பகுதியில் தோலில் ஏற்படும் சிறு துளை அல்லது திறப்பு பிலோனிடல் புழையழற்சி (சைனஸ்) எனப்படுகிறது. இத்துளையில் சீழ் அல்லது திரவம் சேர்வது நீர்கோத்த கட்டி அல்லது கொப்புளம் உருவாகும்.

இந்த நீர் கோத்த கட்டியினுள் அழுக்கு, முடி, கழிவுகள் இருக்கும். இதன் காரணமாக அதிக வலி ஏற்படக்கூடும். சில நேரங்களில் இதில் தொற்று ஏற்பட்டு சீழ் அல்லது இரத்தம் வெளியேறக்கூடும். துர்நாற்றமும் வீசும். பொதுவாக ஆண்கள், வாலிபர்களுக்கு இந்தப் பாதிப்பு நேரக்கூடும்.

புழையழற்சி ஏன் ஏற்படுகிறது?

இப்பாதிப்பு நேருவதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஹார்மோன் என்னும் இயக்குநீர் மாற்றங்கள், முடி வளருதல், ஆடை உராய்தல் மற்றும் நீண்ட நேரம் அமர்ந்திருத்தல் ஆகியவற்றின் காரணமாக இப்பிரச்னை வரக்கூடும் என கருதப்படுகிறது.

ஆடையினால் ஏற்படும் உராய்வு, அதிக நேரம் அமர்ந்திருத்தல் ஆகியவற்றால் பாதிப்பு நேரக்கூடிய இடத்தில் வளரும் முடிகளை, தோலின் உள்பக்கமாக வளரச் செய்கிறது. உடல், உள்பக்கமாக வளரும் முடிகளை அந்நிய பொருளாக கருதி, அதை தடுப்பதற்கு நோய் தடுப்பாற்றலை தூண்டுகிறது. நோய் தடுப்பாற்றல் வினை புரிந்து வளரும் முடியைச் சுற்றி நீருள்ள கட்டியை உருவாக்குகிறது.

அறிகுறிகள்

தோலின் மேற்பரப்பில் சிறிய குழிபோன்று காணப்படும். இந்தக் குழி, கட்டியாக மாறி, தொற்று ஏற்படும்போது வீக்கமும் நிற்கும்போதும் நடக்கும்போதும் வலியும் உருவாகும். சீழ், இரத்தம் ஆகியவையும் அவற்றோடு முடியும் சேர்ந்து வெளியேறக்கூடும்.

விளைவுகள்

அதிகப்படியான வலி, தோலில் வீக்கம் மற்றும் அழற்சி, பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுதல், 100.4 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உடல் வெப்பநிலை அதிகரித்தல் ஆகியவை புட்டத்தில் ஏற்படும் கட்டியினால் ஏற்படும் விளைவுகளாகும்.

சிகிச்சை முறைகள்

பிலோனிடல் சைனஸ் பாதிப்பின் அறிகுறிகள், பாதிப்பின் அளவு, அது மீண்டும் வரக்கூடிய சாத்தியம் ஆகியவற்றை பொறுத்து சிகிச்சை தீர்மானிக்கப்படும்.

ஆன்டிபயாடிக்ஸ் என்னும் எதிர் மருந்து

பாதிப்பு இருக்கிறது ஆனால் அதிக வலியோ, அழற்சியோ ஏற்படவில்லையெனில் பல்வேறு பாக்டீரியாக்களுக்கான சிகிச்சை முறையான எதிர்மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். சைனஸ் ஏற்படும் இடத்தை இது குணப்படுத்தாவிட்டாலும், தொற்று உருவாகாமல், உங்கள் சிரமத்தை சற்று தணிக்கும்.

ரண சிகிச்சை

மருத்துவர், பாதிக்கப்பட்ட பகுதி மட்டும் மரத்துப்போகும்படியான மருந்தினை செலுத்தி, அறுவை சிகிச்சைக்கான கத்தியை கொண்டு கட்டியை கீறி, உள்ளே இருக்கும் சீழ், இரத்தம் மற்றும் முடியினை அகற்றுவார். காயம் உள்ளிருந்து ஆறும்படி கட்டு போடுவார். இது குணமாக நான்கு வாரங்கள் ஆகும்.

ஊசி மூலம் மருந்து

இச்சிகிச்சைக்கும் மரத்துப் போவதற்கான மருந்து செலுத்தப்படும். பின்னர், கட்டி அழுகிவிடாமல் தடுப்பதற்கான மருந்தை ஊசி மூலம் செலுத்துவர். ஏற்பட்ட புண் காய்ந்து மூடும்வரைக்கும் பல முறை இச்சிகிச்சை வழங்கப்படும்.

அறுவை சிகிச்சை

ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் இருந்தால் அல்லது பாதிப்பு மறுபடியும் மறுபடியும் ஏற்பட்டால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். பாதிக்கப்பட்ட இடம் மரத்துப்போவதற்கான மருந்து செலுத்தப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் சீழ், முடி மற்றும் சேர்ந்திருக்கும் கழிவுகள் அகற்றப்படும். பின்னர் காயம் ஆறுவதற்காக தையல் போடப்படும்.

தடுக்க முடியுமா?

பாதிப்பு நேரிடக்கூடிய புட்டத்தின் மேல் புறத்தை தினமும் மிருதுவான சோப்பு கொண்டு சுத்தம் செய்யவேண்டும். அந்த இடத்தில் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்வதோடு, அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதை தவிர்த்தால் பிலோனிடல் சைனஸ் ஏற்படாமல் தடுக்கலாம்.

Previous articleகொத்தமல்லியின் உடல் நல நன்மைகள் !
Next articleஇந்த செடியும் விதையும் பார்த்திருக்கீங்களா? இவ்ளோ அற்புதத்த செய்யும்.