”திராட்சை, ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்தக் குழாய்ச் சுவரைத் தளர்வாக்கி, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்களை, போதுமான அளவு கிடைக்கச் செய்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும்… மலச்சிக்கலைப் போக்குவதற்கும் அருமருந்து!
செல் அளவில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் வீக்கங்கள்தான் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம். திராட்சையில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வேதிப்பொருட்கள், ஒரு புற்றுநோய்த் தடுப்பாக மாறுகிறது. மார்பகப் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிரான ஆற்றல் திராட்சையில் உள்ளதாக, பல ஆய்வுகள் கூறுகின்றன. உலர் திராட்சையிலும் கூட அதிக மருத்துவப் பலன்கள் உண்டு.
திராட்சையை, சூரிய ஒளியில் உலர்த்தித் தயாரிக்கப்படும் உலர் திராட்சையை, நெஞ்சில் சளி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். பழத்தைப் போலவே இதுவும் மலமிளக்கியாகச் செயல்படும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றும் பணியை உலர் திராட்சை செய்கிறது. குழந்தைகளுக்கு இதைச் சிற்றுண்டியாகக் கொடுக்கலாம். இதனால் பற்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. மேலும் பற்சிதைவும் தடுக்கப்படும். இதில் அதிகப்படியான இரும்புச் சத்து உள்ளதால், ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிட்டுவந்தால் நல்ல நிவாரணம் பெறலாம்.
தேர்வு நேரங்களில் மாணவர்கள், சிறிது உலர் திராட்சைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் சோர்வு, மறதி ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
திராட்சை இளமையை தக்க வைத்து முதுமையை அண்டவிடாமல் பாதுகாக்கக்கூடிய அருமையான பழமாகும். குறிப்பாக, உலர்ந்த தோலுடன் எடை குறைவாக உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். சத்து நிறைந்த திராட்சை பத்திய உணவுக்கு ஏற்றது. பசியைத் தூண்டி புத்துணர்ச்சியூட்டக் கூடியது. தாகத்தை தணித்து வயிற்றெரிச்சலை கட்டுப்படுத்தக்கூடியது. செரிமானத்தை சீராக்கி வாயுப்பொருமலை போக்கக்கூடியது.
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.
கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.
மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
தினந்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. திராட்சைப்பழத்தில் மாலிக், சிட்ரிக், டர்டாரிக் போன்ற அமிலங்கள் இருப்பதால் இவை ரத்தத்தில் உள்ள நச்சை சுத்திகரித்து மலம் கழிவதற்கான பெருங்குடல் தூண்டுதலுக்கு உதவுகின்றன. இதுதவிர சிறுநீரகங்களுக்கும் பக்கபலமாக இருக்கக்கூடியது. குடல் புண் உள்ளவர்கள் தினமும் திராட்சைச்சாறு அருந்தி வந்தால், குடல்புண் குணமாவதுடன் குடல் வலிமை பெறும். மூல நோய்களை போக்கக்கூடியது.
சில நேரங்களில் சிலருக்கு உடல் முழுவதும் எரிவதுபோன்ற உணர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், உண்மையாகவே உடம்பில் எரிச்சல் உண்டாகும். இப்படிப்பட்ட பாதிப்பு உள்ளவர்கள் தினமும் திராட்சைச்சாறு அருந்தி வந்தால் நிச்சயம் குணம் கிடைக்கும். ரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகளை வெளியேற்றி உடம்புக்கு குளிர்ச்சி தரும் இந்த திராட்சை, வயிற்றுக்கடுப்புக்கு அருமையான மருந்தாகும். புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவக்குணங்கள் திராட்சைப்பழத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
திராட்சையை பன்னீரில் ஊற வைத்து அதன் சாற்றை அருந்தி வந்தால் இதயம் வலிமை பெறும். பன்னீர் திராட்சையை பாலுடன் சாப்பிட தாது பலம் பெறும். கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய வாந்தி, குமட்டல், வாய்க்கசப்பு போன்றவற்றுக்கு திராட்சை நல்லதொரு மருந்தாகிறது.