‘காயகல்பம்’ என்பது ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வாழ சித்தர்கள் வகுத்தளித்துள்ள ஓர் பயிற்சி முறை. காயம் என்றால் உடல். கல்பம் என்பது நீண்ட கால அளவை குறிக்கும் சொல். கற்பம் என்றால் உடலை நோயுராது நல்ல நிலையில் வைத்துக்கொள்வது என்றுபொருள். அதனால் இதற்கு கற்பம், கல்பம் என இரண்டு வகையிலும் பொருள் கொள்ளலாம்.
மூலிகைகள், உணவு, உடற்பயிற்சி மற்றும் யோக முறைகளின் மூலம் உடலை பிணி, மூப்பு, திரை, நரை ஏற்படாமல் கற்ப தேகமாக மாற்றும் வழிமுறைகளை நம்நாட்டு சித்தர்கள் பலர் அறிந்துவைத் திருந்தார்கள்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
… என்கிறார் திருமூலர். இது நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வலியுறுத்தும் பாடல்.
நமது உடலில் இருக்கிற உயிர் ஆற்றல் மூலமே நமக்கான வேலைகளை திறம்பட செய்ய முடியும். அந்த உயிர் ஆற்றல் நம் உடலில் தங்கி வேலை செய்வதற்கு நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். அதைதான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’ என கூறுகிறார். உடலின் மூலம் உயிரை வளர்த்து அதன் மூலம் சித்தர்கள் மெய்ஞானத்தை அடைய பயன்படுத்திய ஒரு வழிமுறையே காயகல்பம்.
அனைவருமே தங்கள் உடல்நலனில் முழுகவனம் செலுத்தவேண்டும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவு, மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றின் காரணமாக தற்போது இளமையிலேயே உடல் ஆரோக்கியம் கெட்டுவிடுகிறது. அதனால் இதயம் சார்ந்த நோய்கள், உயர் ரத்த அழுத்தம் அதனைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், மூளைபாதிப்புகள், அல்சைமர் என்ற மறதி நோய், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய நோய்கள் வந்த பின்பு மருத்துவம் செய்வதைவிட, தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தகூடிய ஆற்றல் வாய்ந்த மருத்துவ முறையே காயகல்பம். இதை பொதுகல்பம், சிறப்பு கல்பம் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
பொது கல்பம்
ஆரோக்கிய வாழ்விற்காக நாம் அவ்வப்போது இஞ்சி, சுக்கு, கடுக்காய் போன்ற சில காயகல்ப மருந்துகளை பயன்படுத்திவருகிறோம். நோயில்லா காலத்தில் அவைகளை சில உணவு கட்டுப்பாடுகளுடன் ஒரு மண்டலம் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் சாப்பிட்டுவந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும சுருக்கம், முடி நரைப்பது, முடி உதிர்வது போன்றவற்றை தடுக்க முடியும். வயோதிகத்தைத் தள்ளிப்போட வகைசெய்யும் செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச் செய்யக் கூடிய தாவர நுண்கூறுகள் இந்த மூலிகைகளில் அதிகம் உள்ளது.
“காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் தின்றால்
கோலை ஊன்றி குறுகி நடப்பவன்
கோலை வீசி குலுக்கி நடப்பனே! “
என்கிறது ஒரு சித்த மருத்துவ பாடல்.
காலை நேரத்தில் இஞ்சி, மதிய வேளையில் சுக்கு, இரவில் கடுக்காய் போன்றவற்றை ஒரு மண்டல காலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் உட்கொண்டுவந்தால் திடகாத்திரமான உடல் நலம் கிடைக்கும் என்பதே இதன் பொருளாகும்.
காலையில் இஞ்சி
இஞ்சிச் சாறு உடலின் வளர்சிதை மாற்றத்தின் அளவை அதிகரிக்கும். உணவின் சத்துக்கள் கிரக்கப்படுவதால் உடல் எடை அதிகரிக்காது. பசியின்மை, செரியாமை, வயிற்றுப்பொருமல், தொண்டை கம்மல் உள்ளிட்ட கோளாறுகளும் நீங்கும். பசியைத் தூண்டுவதோடு, உமிழ்நீரையும் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவையும் நீக்கும். ஜீரணம் சரியாக நடந்து உணவு முழுமையாக உறிஞ்சி உட்கிரகிக்கப்பட்டு விட்டாலே நோய் தோன்றாது.
5 மில்லி இஞ்சி சாற்றை தேனுடன் கலந்து பருக வேண்டும். சிறிதளவு இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டு களாக்கி தேனுடன் கலந்தும் சாப்பிடலாம்.
மதியம் சுக்கு
உணவு நன்கு ஜீரணமாகாவிட்டால், குடல் புண்கள் ஏற்படும். மலச்சிக்கல் தோன்றும். வயிற்று உப்புசம், தலைவலியோடு ரத்தக்கொதிப்பும் ஏற்படும். உளவியல் சிக்கலையும் ஏற்படுத்தும். சுக்குத்தூள் இத்தகைய பிரச்சினைகளை தீர்க்க உதவும். வாதம், பித்தம், கபத்தையும் சுக்கு சமன்படுத்தும்.
மதியம் சாப்பிட்டவுடன் அரை தேக்கரண்டி சுக்கு தூளை சிறிது தேன் அல்லது வெல்லத்தில் கலந்து சாப்பிடலாம். அல்லது ஒரு தேக்கரண்டி சுக்குத்தூளை 200 மில்லி நீரில் கொதிக்கவைத்து வடிகட்டியும் பருகி வரலாம். இதனால் உணவு நன்கு ஜீரணமாகும்.
மாலையில் கடுக்காய்
“கடுக்காய் தாய்க்கு அதிகம் காண் நீ – கடுக்காய் நோய்
ஓட்டி உடல் தேற்றும் உற்ற அன்னையே சுவைகள்
ஊட்டி உடல் தேற்றும் உவந்து’
.. என்கிற சித்தமருத்துவ பாடல், கடுக்காயை தாய்க்கு இணையாக போற்றுகிறது.
ஒரு தேக்கரண்டி கடுக்காய்த்தூளை 200 மி.லி தண்ணீரில் கொட்டி கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்த வேண்டும். இதை பருகினால் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கி விடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும். கபம் சம நிலைப்படும்.
சித்தர்களின் கூற்றுப்படி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நீண்ட ஆயுளைத் தரக்கூடியவை. உடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையை நிலைக்கச் செய்யும்.