அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞருக்கு எதிர்ப்பு தெரிவித்த யுவதியின் 10 மாத குழந்தையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிஃபோர்னியா மாகாணத்தின் ஃப்ரெஸ்னோ என்ற பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
விருந்து ஒன்றில் கலந்துகொண்ட 18 வயது டிசேரி மேனாக் என்ற யுவதியை, அதே விருந்தில் பங்கேற்ற 23 வயது மார்கோஸ் எச்சார்டியா என்ற இளைஞர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அவரை வலுக்கட்டாயமாக தமது மடி மீது உட்கார வைக்கவும், மார்கோஸ் பலமுறை முயன்றுள்ளார்.
பல முறை அவரை பாலியல் ரீதியாகவும் சீண்டியுள்ளார். மட்டுமின்றி, மேனாக் தமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும்போதும் மார்கோஸ் தொல்லை கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் மார்கோஸின் தொல்லை எல்லைமீறவே, அவரை எட்டித்தள்ளிவிட்டு, நண்பரில் காரில் ஏறி மேனாக் கிளம்பியுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த மார்கோஸ், அந்த காரை தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் மேனாக்கின் 10 மாத குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்தது.
மட்டுமின்றி அவர் சென்ற காரின் கண்ணாடியும் உடைந்தது. இதனையடுத்து மேனாக்கின் நண்பர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தொடர்ந்து குழந்தையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். மருத்துவர்கள் எடுத்த முயற்சியின் முடிவில் குழந்தையின் தலையில் இருந்து தோட்டாவை வெளியே எடுத்துள்ளனர்.
இருப்பினும் குழந்தை ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என்றே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே தலைமறைவான மார்கோஸை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த மேய் 27 ஆம் திகதி இன்னொரு யுவதி மீது துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.