நான்கு இளைஞர், யுவதிகளை இத்தாலிக்கு சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்ல முற்பட்ட இலங்கை ராஜதந்திரியின் பதவியைப் பறிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 17ம் திகதி இத்தாலியில் உள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பெக்ஸ் செய்தியில், இலங்கையின் ராஜதந்திரியொருவர் இத்தாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் தற்போதைக்கு ராஜதந்திரப் பதவிகளில் இல்லை என்பதுடன் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரியாக கடமையாற்றுவதுடன், லெபனான் மற்றும் ஜோர்தான் நாடுகளில் அவர் பணியாற்றிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2012 தொடக்கம் 2015வரை அவர் ராஜதந்திரப் பதவியில் இருந்தபோது அவருக்கும் மனைவி, பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டின் மூலமாகவே அவர் இத்தாலிக்கு இரண்டு யுவதிகளையும் இரண்டு இளைஞர்களையும் சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்கள் மூலம் அழைத்துச் சென்றிருந்தார். எனினும் குறித்த பாஸ்போர்ட்டுகள் 2015ம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டு புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த அதிகாரியை சேவையில் இருந்து இடைநிறுத்த வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்மானித்துள்ளது. அத்துடன் செல்லுபடியற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியது, சட்டவிரோத ஆட்கடத்தல் ஆகிய பிரிவுகளிலும் அவர் மீது வழக்குப் பதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.