இந்தியாவில் தோன்றிய மிகவும் பழமையான மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தின் படி, ஒருவர் இரவு நேரத்தில் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த உணவுகள் உண்பதற்கு எளிதாக இருப்பதோடு, சிரமமின்றி எளிதில் செரிமானமாகக்கூடும். காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை இரவு நேரத்தில் உட்கொண்டால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டால், ஓய்வின்மை, தூங்குவதில் சிரமம், உடல் வறட்சி, வாய்வுத் தொல்லை, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை இரவு நேரத்தில் உண்பதால், உடல் லேசாக இருப்பது போல் உணர்வதோடு, மறுநாள் காலையில் சுறுசுறுப்பாக இருப்போது போன்று உடலில் ஒரு நல்ல மாற்றங்களையும் உணரலாம்.
இக்கட்டுரையில் ஒருவர் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்க, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் எவையென்று ஆயுர்வேதம் கூறுவது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அந்த உணவுகளைத் தவிர்த்திடுங்கள்.
தயிர் உணவுகளை செரிமானப்படுத்த உதவும் சிறப்பான உணவுப் பொருள். ஆனால் இரவு நேரத்தில் தயிரை அறவே தொடக்கூடாது. இரவு நேரத்தில் தயிரை உண்பதற்கு பதிலாக, மோராக உட்கொள்ளலாம். ஏனென்றால் தயிர் உடலில் சளியை அதிகரிக்கும். மேலும் இது உடலில் சமநிலையை உண்டாக்கி, சுவாச பாதைகளில் அதிகளவு சளியை உருவாக்கி பிரச்சனையை சந்திக்க வைக்கும்.
மெதுவாக மற்றும் அளவாக சாப்பிடவும்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவராயின், ஒருசில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
* இரவு நேரத்தில் குறைவாக சாப்பிடவும்
* உணவை நன்கு மென்று விழுங்க வேண்டும்.
இப்படி செய்வதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும். பொதுவாக இரவு நேரத்தில் செரிமான மண்டலம் செயலற்று இருப்பதால், இந்நேரத்தில் கடினமான உணவுகளை உண்டால், உடலால் உணவுகளை செரிக்க முடியாமல் போகும். இதன் விளைவாக அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
புரோட்டீன் உணவுகளை அதிகம் உண்ணவும்
ஒருவரது உயரம் மற்றும் உடல் எடைக்கு ஏற்ப சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டியது அவசியம். குறிப்பாக இரவு நேரத்தில் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். அதுவும் புரோட்டீன் உணவுகளை உண்பது நல்லது. எனவே பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.
பால் குடிப்பதைத் தவிர்க்கவும்
இரவு நேரத்தில் பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டவராயின், கொழுப்பு குறைவான பாலைக் குடியுங்கள். அதே சமயம் குளிர்ச்சியான பாலை எப்போதும் குடிக்காதீர்கள். எப்போதும் சூடான பாலைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். ஒருவர் இரவு நேரத்தில் கொழுப்பு குறைவான சூடான பாலைக் குடித்தால், செரிமானமாவது எளிதாக இருக்கும். அதேப் போல் பாலில் சிறிது இஞ்சி அல்லது ஏலக்காய் சேர்த்துக் குடிப்பது மிகவும் நல்லது.
காரமான உணவுகள் கூடாது
மசாலாப் பொருட்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இரவு நேரங்களில் இம்மாதிரியான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் சில மசாலா பொருட்களை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மிளகாய் சேர்த்துள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
அதுவே ஆரோக்கியமான மசாலாப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து இரவு நேரத்தில் உட்கொண்டால், உடலின் வெப்பத்தைப் பராமரிக்கும் மற்றும் பசியும் பராமரிக்கப்படும். எனவே இரவு நேரத்தில் பட்டை, சோம்பு, வெந்தயம், ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களை வேண்டுமானால் இரவு சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.