இரவில் படுத்த உடனேயே தூக்கத்தைப் பெற இயற்கை வழிகள்.
ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தூக்கத்தின் மூலம் தான் நாள் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்யும் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது. தூக்கம் சரியான அளவில் கிடைத்தால், உடல் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை, தொழில்நுட்பம், வேலைப்பளு போன்றவைகளால் ஏராளமானோர் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர். போதிய அளவு தூக்கம் கிடைக்காததால், எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல், எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் அவஸ்தைப்பட நேரிடும்.
அதுமட்டுமின்றி, தூக்கமின்மை நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்வதோடு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே தூக்கமின்மையின் தீவிர தாக்கத்தில் இருந்து விடுபட, தூக்க மாத்திரைகளை அதிகம் எடுக்காமல், ஒருசில எளிய இயற்கை வழிகளின் மூலம் தூக்கத்தைப் பெற முயலுங்கள்.
இக்கட்டுரையில் படுத்த உடனேயே தூக்கத்தைப் பெற ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.
வெங்காயம்
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கத்தை பெறலாம்
வான்கோழி அல்லது சிக்கன்
இரவில் படுக்கும் முன் சிறிது சிக்கன் அல்லது வான்கோழியை சாப்பிடுங்கள். இதில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம், தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் உற்பத்தியை தூண்டி, நிம்மதியான தூக்கத்தை கிடைக்கச் செய்யும்.
பாலில் தேன்
பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது மூளையில் மெலடோனின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்க வேண்டுமானால், வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலில் தேன் கலந்து குடியுங்கள்.
நறுமண எண்ணெய்
படுக்கும் முன் மணிக்கட்டுப் பகுதியில் சிறிது மல்லிகைப் பூ எண்ணெயை தடவிக் கொள்ளுங்கள். இது ஒருவித மயக்க உணர்வை ஏற்படுத்தி, நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற வழிவகுக்கும்.
செர்ரி ஜூஸ்
தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், செர்ரி ஜூஸை குடிப்பது நல்லது. ஏனென்றால் இதில் ட்ரிப்டோபேன் அதிகம் உள்ளது. எனவே நிம்மதியான தூக்கம் கிடைக்க செர்ரி ஜூஸ் குடியுங்கள்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ட்ரிப்டோபேன், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. எனவே இரவில் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் 1 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல தூக்கத்தைக் கிடைக்கச் செய்யும்.
கார்போஹைட்ரேட்
இரவில் படுப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன் பிரட் அல்லது செரில் போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதன் மூலமும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
அக்குபஞ்சர்
அக்குபஞ்சர் செயல்முறையை மேற்கொள்வதன் மூலம், ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் நியூரோஎண்டோகிரைன் என்னும் கெமிக்கல் வெளிவந்து, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
உடற்பயிற்சி
ஒருவர் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். அதற்காக தூங்கும் முன் உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. காலை அல்லது மாலை வேளையில் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். அதிலும் ஏரோபிக் உடற்பயிற்சியை தினமும் மேற்கொண்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
சுரைக்காய்
சுரைக்காயை சாறு எடுத்து, அத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி சிறிது மசாஜ் செய்வதன் மூலம், நல்ல தூக்கம் கிடைக்கும்.
கசகசா
இரவில் படுக்கும் முன் 1 டீஸ்பூன் கசகசாவை சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும். இல்லாவிட்டால், 1 டீஸ்பூன் தேங்காய் பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் கசகசாவை சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய் போட்டு, அதில் 1 சிட்டிகை சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி, கசகசா பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, இரவில் தூங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
தயிர்
தினமும் தயிரை சாப்பிடுவதன் மூலமோ அல்லது அவ்வப்போது தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலமோ, நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
சோம்பு
1 டீஸ்பூன் சோம்புவை 375 மிலி நீரில் போட்டு 12-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் பால் மற்றும் தேன் கலந்து இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும்.
குங்குமப்பூ
குங்குமப்பூவில் உள்ள மயக்க பண்புகள், நல்ல தூக்கத்தைத் தூண்டும். அதற்கு சிறிது குங்குமப்பூவை 1 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்து குடிக்க வேண்டும்.
க்ரீன் டீ
இரவில் தூங்குவதற்கு 1-2 மணிநேரத்திற்கு முன் 1 கப் க்ரீன் டீ குடிப்பதால், அதில் உள்ள அமினோ அமிலம் மற்றும் தியனைன், மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்து, நிம்மதியான தூக்கத்தைக் கிடைக்கச் செய்யும்