இப்படியொரு வரலாறா! நாம் தினமும் சாப்பிடுகிற இட்லி, தோசைக்குப் பின்னாடி!

0

“காலையில சாப்பிட எங்கே நேரம் இருக்கு”, “மதியம் கொஞ்சம்தான் சாப்பிட்டேன்”, “நைட் லேட்டா சாப்பிட்டுப் பழகிடுச்சு” போன்ற வசனங்களை ஒரு நாளில் ஒருதடவையாவது கேட்டிருப்போம், நாமேகூட சொல்லியிருப்போம். நம் உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்க உதவுவது உணவு. அதிலும், சரியான நேரத்துக்குச் சரியான உணவு உண்பதே உடலுக்கு நன்மை தரும்.

இந்த சரியான என்ற பதத்திற்கு பின்னால் ஆரோக்கியமான என்ற வார்த்தையும் ஒளிந்திருக்கிறது. எது ஆரோக்கியமான உணவு? இன்றைக்கு உடல் நலத்தின் மீதும் எடை குறைப்பின் மீதும் அதீத நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எதைப் பார்த்தாலும் தவிர்த்து வருவது சகஜமாகிவிட்டது.

பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இருப்பது இட்லி தோசை தான்.தினமும் இது தானா? என்று சலித்துக் கொள்கிறவர்கள் இக்கட்டுரையின் முடிவில் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள். ஆம், இட்லி தோசையிலிருந்து உங்களுக்கு என்னென்ன சத்துக்கள் கிடைக்கிறது தெரியுமா?

இட்டு அவி :
உளுந்தைப் பற்றிய குறிப்புக்கள் அகநாறு, புறப்பாடல், முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. ‘இட்டரிக’ என்று ஏழாம் நூற்றாண்டிலும் ‘இட்டு அவி’ என 12 ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட நிலையில் பின்பு ‘இட்டு அவி’ என்ற இரட்டைச் சொல் மருவி ‘இட்டலி’ என்ற ஒரு சொல்லாய் திரிந்து அதன் பின்னர் ‘இட்லி’ என்றாகிவிட்டது.

சர்ச்சைகள் :
இந்தியாவுக்கு கி.பி.800-க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலத்தில் வந்திருக்கலாம் என்கிறது ஒரு சாரார் வரலாறு.இந்தோனேஷியாவில் இதை `கெட்லி” (Kedli) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுதான் மருவி, `இட்லி’ ஆனது என்கிறார்கள்.

அதெல்லாம் இல்லை கன்னடத்தில் இதற்கு ஒரு வார்த்தை உண்டு… இட்டாலிகே (Iddalige). கி.பி.920-ம் ஆண்டிலேயே சிவகோட்டிஆச்சார்யா என்பவர் இதைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றும் இன்னொரு சாரார் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கி.பி.1130-ம் ஆண்டில் மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், மானசொல்லாசா (Manasollaasa) என்ற நூலில், இட்டாரிகா (Iddariga) என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.அது இட்லிதான் என்கிறார்கள்.

10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ (Idada) எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு.

கல்வெட்டு :
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிற் கல்வெட்டில், தோசை குறித்த சுவையான செய்தி ஒன்று இருக்கிறது. இந்த கல்வெட்டு கி.பி. 1542 ஆம் ஆண்டைச் சார்ந்தது.
அச்சுராயன் என்பவரது ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரத்தைச் சார்ந்த, திருவத்தியூர் அருளாளப்பெருமாள் கோவிலுக்குப் பக்தர் ஒருவர் அளித்த சிறு நிதி மூலம் அவர் செய்யச் சொன்ன நெய்வேத்தியம் பற்றிய செய்தியை தான் அந்த கல்வெட்டில் பொறித்திருக்கிறார்கள்.

தோசை :
பொதுவாகக் கோயில்களில் படைக்கப்படும் உணவானது, அங்கே பாரம்பரியமாக அவ்வூர் மக்கள் வழக்கமாக சாப்பிடும் உணவாகத்தான் இருக்கும். அதன்படி பார்த்தால் கிபி 15ஆம் நூற்றாண்டிலேயே தோசை அங்கே பழக்கப்பட்ட உணவாக இருந்திருக்கிறது.
இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள அந்த கல்வெட்டில் என்ன இருந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பெருமாள் கருட வாகனத்தில் கிராம உலா சென்று திரும்பும்போது அமுது படைக்க வேண்டும் எனவும், அதற்கு ஆகும் செலவாக, 250 பணமளிக்கப்பட்டது. அதைக்கொண்டு 35 தோசைகளை, 24 ஏகாதசிகளுக்குக் கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருக்கிறது.

தோசை பெயர்க்காரணம் :
‘தோசை’ இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், (கல்லில்) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் தோய் + செய் என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல், நாளடைவில் தோசை என்று ஆனது என்று சொல்லப்படுகிறது.
மிகவும் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் நிச்சயமாக நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி தோசை இடம் பெறும். ஆவியில் வேக வைத்த இதனை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
அரிசி மற்றும் உளுந்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டு சில வேதியியல் மாற்றங்களுக்கு பிறகு சமைக்கப்படும் இதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமானம் :
அரிசியையும், உளுந்தையும் ஊறவைத்து, பின்னர் அதனை அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைப்பார்கள். நன்றாக அந்த மாவு பொங்கியதும் மறு நாள் நமக்கு விரும்பிய வடிவத்தில் தட்டில் இருக்கும்.

இதில் கலப்படம் ஏதும் சேர்க்கப்படுவதில்லை என்பதால் தைரியமாக சாப்பிடலாம் . இது எளிதாக செரிமானம் ஆகிடும் என்பதால் குழந்தைகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தாரளமாக கொடுக்கலாம்.

எனர்ஜி :
இதில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது . இதனை எடுத்துக் கொள்வதால் உடனடி எனர்ஜி கிடைக்கும். இதனை சாப்பிடுவதால் அதிகப்படியான கொழுப்பு சேராது என்பதால் இட்லி /தோசை சாப்பிடுவதில் தயக்கம் வேண்டாம்.
உடல் எடை குறைக்க வேண்டும் என்றும் நினைப்பவர்கள் தாரளமாக இட்லி சாப்பிடலாம்.

ப்ரோட்டீன் :
உடலின் தசை வலிமைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் ப்ரோட்டீன் சத்து மிகவும் அவசியமானது. தினமும் காலை உணவாக இதனை எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு தேவையான ப்ரோட்டீன் சத்து கிடைத்திடும்.

கலோரி :
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள்.
இட்லி,தோசையில் குறைவான கலோரியே இருக்கிறது. இது சாப்பிட்டவுடனேயே நிறைவான உணர்வைத் தருவதால் அடிக்கடி நிறைய உணவுகளை சாப்பிட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது.

மினரல்ஸ் :
இவற்றில் இரும்புச்சத்து, கால்சியம் உட்பட பல்வேறு மினரல்ஸ் இருக்கிறது. இதிலிருக்கும் இரும்புச் சத்தினால் ஹீமோக்ளோபின் மற்றும் மையோக்ளோபின் ஆகியவை உடலில் அதிகமாக சுரக்கச் செய்திடும்.

விட்டமின்ஸ் :
நம் உடலில் உள்ள செல்களின் வளர்ச்சிக்கு விட்டமின்ஸ் என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். ரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் விட்டமின்ஸ் அத்தியாவசியமானதாக இருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா! 10 நிமிடத்தில் அத போக்க இதோ ஓர் வழி!
Next articleநரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத மூலிகை கற்பூர வல்லி! ட்ரை பண்ணுங்க! அப்றம் சொல்லுங்க!