இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமா? தனிக் குடித்தனமா? ஒரு தெளிவான பதிவு!

0

முற்காலங்களில் கூட்டு குடும்பங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்தது. தாத்தா, பாட்டி, மகன், மருமகள், மற்றும் பேரன், பேத்தி என்ற வகையில்தான் குடும்ப அமைப்பு இருந்தது.

கூட்டு குடும்பங்களில், கணவன்–மனைவி தங்களுக்கு இடையே அன்பை பரிமாறிக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தது. ஆனால், ஒருவருக்கு ஒருவரான அன்பும், ஆதரவும் அதிகமாக இருந்தது. அதிலும் குறிப்பாக குழந்தை வளர்ப்பை பெரியவர்கள் பார்த்துக் கொண்டார்கள். காலப்போக்கில் மகனுக்கு திருமணம் முடிந்தால், அவரையும், அவரது மனைவியையும் தனிக்குடித்தனம் வைக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.

இன்று கூட்டுக்குடும்பம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. மேலும் கணவன்—மனைவி இருவருமே இப்போது நல்ல கல்வித்தகுதியுடன் இருக்கிறார்கள். அவர்களே, தங்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்களாகவும், இருவருமே வேலைக்கு செல்வோராகவும் இருக்கிறார்கள். இதனால் முந்திய கால கூட்டுக் குடும்பங்களை விட, இப்போதைய தனிக் குடித்தனமே பெரும்பாலான இளைய சமுதாயத்தினரால் விரும்பப்படுகிறது.

இப்போதுள்ள குடும்பங்கள் எல்லாம் சிறிய எண்ணிக்கையில் சின்ன சின்னதாக மாறி விட்டது. கூட்டு குடும்பத்தில் வாழ்வதில் சில ஆதாயங்கள் இருக்கிறது. ஆனாலும் அதில் பல குறைகளும் இருக்கத் தான் செய்கிறது.

கூட்டு குடும்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டவர் என்றால் அவைகளை பற்றி உங்களுக்கு நன்றாகவே புரிந்து கொள்ள முடியும். கூட்டு குடும்பம் என்று வந்து விட்டால் வீட்டின் மூத்தவரே அந்த குடும்பத்தின் தலைவராக இருப்பார். அவர் வயதானவராகவும் கண்டிப்பு தன்மையுடனும் விளங்குவார்.

இவ்வகை குடும்ப அமைப்பில் தான் ஆச்சாரமும், பழமையான கலாச்சாரங்களும், கடைப்பிடிக்க பட்டன. இது அங்கு வாழும் பலருக்கும் எதிர்மறையான மனநிலையை உண்டாக்கி விடும். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக இது விளங்குகிறது. எப்போதுமே வயதில் குறைந்தவர்களே, குடும்ப மூத்த உறுப்பினர்கள் மற்றும் குடும்ப தலைவருக்காக விட்டு கொடுத்து வாழ வேண்டியிருக்கும்.

மேலும், கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பெரும்பாலும் பாதிப்படைவது அங்குள்ள பெண்களே. அந்த கூட்டு குடும்ப அமைப்பில் பொதுவாக பெண்கள் எல்லாம் அடுப்பங்கறையில் அடைபட்டு கிடந்ததால் அவர்களின் திறமைகள் எல்லாம் வீணாய் போனது.

இப்படிபட்ட பிரச்சனைகளை அவர்கள் சந்திப்பதால் பொதுவாக கூட்டு குடும்பத்தில் வசிக்கும் பெண்கள் அந்த சூழலை விட்டு வெளியேற விரும்புவதுண்டு. மேலும் கூட்டு குடும்ப சூழலோடு ஒத்துப் போய் வாழ்வதிலும் பெண்கள் சிரமப்பட்டனர்.

இள வயது தம்பதிகளுக்கு கூட்டு குடும்பத்தில் உள்ள பெரிய பிரச்சனையே, அவர்களுக்கு போதிய தனிமை கிடைப்பதில்லை. கூட்டு குடும்பத்தில் எப்போதுமே பல பேருடன் சேர்ந்து இருப்பதால் அன்பு என்பது எப்போதுமே வெளிப்படுத்த முடியாத ஒன்றாகி விடுகிறது. கூட்டு குடும்பத்தில் இருந்தாலும் கூட உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது செலவிட தவற விடாதீர்கள்.

கூட்டு குடும்பத்தில் குடும்பத்தின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் அனைவருக்குமே பொறுப்பு உள்ளது. ஆனால் இப்படி பகிரும் நிலை இருப்பதால், ஒரு சிலர் ஒழுங்காக கை கொடுக்காமல் சும்மா இருப்பார்கள். இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். அவரவர் கடமை மற்றும் பொறுப்புகளை ஒழுங்காக செய்யாமல் ஒவ்வொருவரும் மற்றவர்களை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள் இது போன்ற நிலை, தனிக்குடித்தனத்தில் ஏற்படுவதில்லை.

இதனால் இன்றைய சமுதாயத்தில் தனிக்குடித்தனமே மேலோங்கி இருக்கிறது. இந்த காலத்தில் வயதுக்கு வந்த ஆண்- பெண் இருவருக்கும், பெரியவர்கள் திருமணம் செய்து வைத்த பின், அவர்களை தனிக்குடித்தனம் வைத்து விடுகிறார்கள்.

அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் அல்லது உதவிகள் அல்லது ஆலோசனைகள் தேவைப்பட்டால் மட்டுமே பெரியவர்கள் தலையிடுகிறார்கள். இல்லையெனில் இளம் தலைமுறையினர் நடத்தும் இல்லற வாழ்க்கையை மூத்தவர்கள், முதியவர்கள் தூரத்தில் இருந்தே பார்த்து மகிழ பழகிக்கொள்கிறார்கள். இதுவே இக்காலத்துக்கு சிறந்ததாக உள்ளது.

மங்கையரே, தனிக்குடித்தனத்தில் இப்போது வாழ்ந்து வந்தால், உன் பொறுப்பும் அதிகம். நீயும் ஒரு வேலைக்கு சென்று வரும் பெண்ணாக இருந்தால், வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும், வீட்டு வேலைகளை பார்க்க வேண்டிய கட்டாயமும் உனக்கு ஏற்படுகிறது. அப்போது, நீ உன் கணவருடன் அன்பாக பேசி, அவரையும் உனக்கு உதவியாக சில வேலைகளை செய்ய பழகிக் கொள்.

அத்துடன் மட்டும் இன்றி, நீ உனது குழந்தைகளையும் சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கிறது. எனவே உன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டியது உனது கடமையும், உனது கணவரின் கடமையாக இருக்கிறது. எனவே, முதியோரை மதித்து, உன் கணவர் கூறும் ஆலோசனைகளை கேட்டு,அதன் படியே உன் குழந்தைகளையும் வளர்த்து, நல்ல குடும்ப பெண்ணாக திகழ வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் மனைவியிடம் உள்ள சிறப்புகள். அனைத்து கணவன்களும் இதை கட்டாயம் படிக்கவும். பகிரவும்!
Next articleநாட்டுச்செக்கு எண்ணைகளின் மகத்துவங்கள் பற்றிய அரிய தகவல்கள். அனைவருக்கும் பகிருங்கள்!