இந்தியா உணவுகளில் மசாலா பொருட்கள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு பிடித்த இந்திய உணவுகள் பலவற்றிலும் மசாலாக்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.
மசாலா பொருட்கள் தான் உணவின் சுவையை கூட்டி, நாவிற்கு விருந்தாக அமைகிறது. கிராம்பு, பட்டை, ஏலக்காய், இலவங்கம், அன்னாச்சி பூ போன்றவை தான் சமையலின் சுவையை பல மடங்கு கூட செய்கின்றன.
ஆனால், இதில் குறிப்பிட்டு சொல்ல போனால் உணவின் சுவையை அதிகரிக்க ஏலக்காய் பெரும்பாலும் உதவுகிறது. இவற்றின் நிறத்தை கொண்டு தான் உணவின் சுவையும் மாறுபடும். பச்சை நிறத்தில் இருக்கும் ஏலக்காயை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த கருப்பு நிற ஏலக்காயை நாம் கேள்விப்பட்டிருப்போமா?
இது அதிக ஆரோக்கிய தன்மை வாய்ந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றின் எதை உணவில் சேர்த்து கொண்டால் அதிக ஆரோக்கியமும் சுவையும் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
மசாலாக்களின் ராணி
ஏலக்காயின் மிக சிறந்த வாசனை தன்மைக்காக அதனை “மசாலாக்களின் ராணி” என்று அழைக்கின்றனர். மசாலா தன்மையோடு சேர்த்து இதில் பலவித ஆரோக்கியங்களும் உள்ளது. உணவில் சேர்த்து கொள்வதால் செரிமான கோளாறுகள் முதல் உடல் நல கோளாறுகள் வரை சீராகும்.
பச்சை ஏலக்காய்
பச்சை வகை ஏலக்காயை முதிர்ச்சி அடையும் நிலைக்கு வருவதற்கு முன்னரே அறுவடை செய்து விடுவர். இந்தியாவில் தான் இந்த வகை ஏலக்காய்கள் பெரும்பாலும் அறுவடை செய்யப்படுகின்றன. இதன் வியாபாரம் உலகம் முழுக்க பரவுவதற்கு முக்கிய காரணமே இவற்றின் வாசனையும், மசாலா தன்மையும் தான்.
கருப்பு ஏலக்காய்
முதிர்ச்சி அடைந்த ஏலக்காயை வெயிலில் காய வைத்து உற்பத்தி செய்வதே இந்த வகை கருப்பு ஏலக்காய். இவை பச்சை நிற ஏலக்காயை விட வேறு விதமான சுவையையும் மணத்தையும் தரும். ஒரு வித புகை கொண்ட சுவையை இது ஏற்படுத்தும். அத்துடன் குளிர்ச்சியையும் இது தர கூடிய விதத்தில் இருக்கும்.
மருத்துவ பயன்கள்
கருப்பு நிற ஏலக்காயை மருத்துவ பயன்பாட்டிற்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். செரிமான கோளாறுகள், மலச்சிக்கல், ஆஸ்துமா, வயிற்று போக்கு போன்ற உடல்நல குறைபாடுகளை தடுக்க இந்த கருப்பு ஏலக்காய் உதவும்.
சீன மருத்துவம்
சீன மருத்துவத்தில் இந்த வகை ஏலக்காய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய மருத்துவத்தில் எப்படி கருப்பு ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறதோ அதே போன்று இது சீன மருத்துவத்தில் இன்றியமையாததாகும். மேலும், இவர்களின் உணவிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
வேறுபாடுகள் இந்த இரு வகை ஏலக்காயிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. இவற்றின் சுவை முதல் மணம் வரை வேறுபாடுகளை கொண்டது. மேலும், இவற்றில் விலையும் வேறுபடும். கருப்பு ஏலக்காயை விட பச்சை ஏலக்காய் தான் விலை அதிகம் கொண்டது.
ஊட்டசத்துக்கள்
மசாலா பொருளாக இருந்தாலும் இதிலும் பல ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அதிக அளவில் இதில் நிறைந்துள்ளது. மேலும் ஒமேகா 3,6 கொழுப்பு அமிலங்களும் உள்ளது. இவை இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை தான்.