அமேசான் காட்டை பூர்வீகமாக கொண்ட குவாரனா, கொடி வகையைச் சேர்ந்த தாவரமாகும். மேப்பிள் தாவர குடும்பத்தை சேர்ந்த இதன் அறிவியல் பெயர் பாலினியா குபானா ஆகும்.
குவாரனா செடியின் பழம், மனித கண்ணின் தோற்றத்தை ஒத்திருக்கும். கறுப்பான விதையை வெள்ளை உறை மூடியிருக்கும்.
அதன் மீது சிவப்பு நிற கூடு காணப்படும். அளவில் சிறியதாக காணப்படும் குவாரனா, ஏனைய பெர்ரி வகை பழங்களைக் காட்டிலும் வித்தியாசமானது.
நம் உடலுக்கு பலவித நன்மைகளைச் செய்யக்கூடிய இயல்பு இதற்கு உள்ளது. பானங்களை தயாரிப்பதற்கு மட்டுமல்ல, மருத்துவ பயன்பாட்டுக்கும் குவாரனாவின் கனி உபயோகப்படுத்தப்படுகிறது.
அமேசான் மூலிகை
அமேசான் பகுதியை சேர்ந்த பழங்குடியினர் வேட்டைக்குச் செல்லும் காலங்களில் இதை சத்து பானமாக பருகி வந்துள்ளனர்.
இதில் காஃபின் அதிக அளவும், தியோபிலின், தியோபுரோமின் ஆகியவை மிகக்குறைந்த அளவும் காணப்படுவதால், இதிலிருந்து தயாரிக்கப்படும் பானம் உற்சாகத்தையும் ஆற்றலையும் அளிக்கிறது.
உடல் நலத்தில் ஆர்வம் மிகுந்திருக்கும் இந்த நவீன காலகட்டத்தில் மருத்துவ குணங்களுக்காக குவாரனா தாவரம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பிரேசில் நாட்டில் அதிகமாக காணப்பட்டாலும், இதன் விதை பராகுவே நாட்டின் பல பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
உடல் எடை குறைக்க
உடல் எடையை குறைப்பதில் காஃபின் பெரும்பங்கு வகிக்கிறது.
குவரனாவில் காஃபின் அதிக அளவில் உள்ளதால் உடல் எடையை குறைப்பதோடு, அதை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.
கொழுப்பு மற்றும் லிப்பிடுகளை உடைத்து கொழுப்பு அமிலங்களாக மாற்றும் செயல்பாட்டுக்கு காரணமான நரம்பு மண்டலத்தில் குவாரனா விதைகள் தாக்கத்தை ஏற்படுத்துவதால், உடற்பயிற்சியின்போது வெளிப்படுத்தப்படும் கொப்பு சத்தினை ஆற்றலாக மாற்றுவதில் இடைப்பட்டு உடல் எடையை சீராக பராமரிக்க இது உதவுகிறது.
பசி உணர்வை குவாரனா மட்டுப்படுத்துவதால், நாம் சாப்பிடும் உணவின் அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது.




