ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்! உடலிலுள்ள எல்லா மூட்டுகளிலும் வலியும் வீக்கமும்!

0
2016

என் வயது 38. உடலிலுள்ள எல்லா மூட்டுகளிலும் வலியும் வீக்கமும் ஏற்பட்டு, நீட்டவும் மடக்கவும் முடியாமல் மிகுந்த வேதனையுடன் வாழ்கிறேன். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகு, தோள்பட்டை எலும்பு மூட்டுகள் அதிகம் குத்து வலியுடன் வீக்கமும் கொண்டுள்ளதால் அசைக்கக் கூட முடியாத இந்த உபாதை எதனால் ஏற்படுகிறது? இதற்கு ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளனவா?

ஸுச்ருதர் எனும் முனிவர், தான் இயற்றிய ஸுச்ருத ஸம்ஹிதை எனும் நூலில்- கேடுற்ற வாயு மூட்டுகளை அடைந்து அவற்றின் செயல்களைக் கெடுத்து, வலிகளையும் வீக்கத்தையும் உண்டாக்குகிறது என்று உபதேசித்துள்ளார். ஆனால் தனிப்பட்ட வாயுவிற்குக் கீல்களில் வீக்கத்தைச் செய்யும் இயல்பு கிடையாது. பித்தம், கபம் இரு தோஷங்களுடன் சேர்ந்துதான் ரஸரக்தாதி தாதுக்களைக் கெடுத்து வியாதியை ஏற்படுத்துகிறது.

செரிமான சக்திக்கு மீறி அதிக அளவில் எளிதில் செரிக்காத தயிர், நெய், எண்ணெய்கள், மீன், முட்டை, மாமிசங்கள், கிழங்குகள், உளுந்து, மொச்சை முதலிய தானியங்கள், வெல்லம் முதலிய இனிப்புகள், மாவுப் பண்டங்கள், பிஸ்கட் போன்றவை சாப்பிடுதல், எளிதில் செரிக்கக் கூடிய உணவாக இருந்தாலும் உணவு செரிமானம் ஆகாமல், பசி வராமல் அடிக்கடி சாப்பிடுதல், உடற்பயிற்சியே செய்யாமல், சாப்பாடு, தூக்கம் இரண்டு மட்டும் செய்து கொண்டிருத்தல் ஆகியவற்றால், ரஸ தாதுவிலுள்ள செரிமான நெருப்பானது அணைந்து உணவின் சத்தான பகுதியில் ஆமம் எனும் மப்பு அதிகம் சேருகின்றது.

இதனால் வயிற்றிலுள்ள க்லேதகம் எனும் கபதோஷத்தின் பசை அம்சம் அதிகமாகிறது. குடலில் வாயுவின் நகரும் தன்மை தடைப்படுகிறது. வாயு, ஆமரஸங்களுடன் சேர்ந்துள்ள கபம், ரத்தக் குழாய்களில் ஸஞ்சாரம் செய்கின்றது. மூட்டுகளில் அங்கங்கு தங்கி உபாதைகளைத் தோற்றுவிக்கிறது. இதனால் நீங்கள் குறிப்பிடும் வீக்கம், குத்துவலி, அசைக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும்.அசைவுள்ள எலும்புப் பூட்டுகளில் எல்லாவற்றிலும் உட்புறத்திலும் சுற்றிலும் சுத்தமான ஸ்லேஷகம் எனும் கப தாது இருக்கிறது. இதிலிருந்து கசியும் நெய்ப்பான பொருள், மூட்டுகளின் பலவித அசைவுகளில் உராய்வு ஏற்படாமல், சீராக நடக்க உதவுகின்றது. போஷணையும் அளிக்கிறது.

கெட்டுப் போன ஆமரஸம் மூட்டுகளிலிருக்கும் இந்தத் தாதுவின் அளவை இயற்கையான அளவை விட, மிகவும் அதிகரிக்கச் செய்கிறது. ரஸ தாதுவின் செரிமான நெருப்பு அணைவதால் கபத்தைக் கெடுத்து, தடைபட்டுள்ள வாயுவுடன் சேர்ந்து மூட்டுகளில் வீக்கத்தையும் குத்து வலியையும் உண்டாக்குகிறது. இதற்கு ஆம வாதம் என்று பெயர்.

பசித்தீ கெடுவதால் ஏற்பட்ட இந்த உபாதையைக் குணப்படுத்த, முதலில் உபவாசம் எனும் பட்டினியிருத்தல் அவசியமாகும். உபவாசத்தின் நேர அளவு, ஆமத்தின் உக்கிரத்தன்மையையும் மற்றும் அவரவரின் உடல்வாகு, வயது, காலம் ஆகியவற்றை அனுசரித்தும் நிச்சயிக்கப்பட வேண்டும். பசி நன்றாக ஏற்படும் வரை உபவாசமிருக்கலாம்.

பலஹீனம் ஏற்பட்டுவிடாமல் இருக்க சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்துக் காய்ச்சிய வெந்நீரில் புழுங்கலரிசி அல்லது வறுத்த பழைய வாற்கோதுமை அல்லது கேழ்வரகு மால்ட் மாவு, கலந்து கஞ்சி தயாரித்துக் குடிக்கலாம். இதன் மூலம் பசி நன்றாக எடுக்கத் தொடங்கினாலும், ரஸ தாதுவிலுள்ள நெருப்பானது சீராவதற்கு தாமதம் ஏற்படலாம் என்பதால், எளிதில் செரிக்கக் கூடிய உணவைதான் தொடர வேண்டும்.

ரஸதாதுவின் ஆமம் ஓரளவு போன பின்பும் பூட்டுகளிலுள்ள வீக்கம் வலி போக அதிக நாளாகிறது. இது இந்த உபாதையின் இயல்பு. அதனால் வாயு மற்றும் கபதோஷங்களைக் குறைப்பதும், தாதுவிலுள்ள செரிமான நெருப்பானது செம்மையாகக் கூடியதுமான உணவுத் திட்டம் பல நாட்கள் தொடர வேண்டும். உள்ளிப் பூண்டு, முள்ளங்கி, கேரட், இஞ்சி, முருங்கை மற்றும் வல்லாரைக்கீரை, பிரண்டைக் கொடியின் இளங்குருத்து உபகாரமான உணவு வகைகளாகும்.

கொட்டஞ்சுக்காதி எனும் சூரண மருந்தை புளித்த மோர் அல்லது பசுவின் சிறுநீருடன் கலந்து சூடாக்கி வீக்கம் வலி உள்ள பகுதியில் சுமார் மூன்று வாரம் வரை பற்று இடலாம். கபம் ஆமம் ஓரளவு நன்றாய் குறைந்த பிறகு, வேப்பெண்ணெய்யை இளஞ்சூடாகித்தடவி, ஆமணக்கு, நொச்சி இலை, முருங்கப்பட்டை, எருக்கு இலை போட்டுக் காய்ச்சிய வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

ராஸ்நாஸப்தகம் கஷாயம், வைச்வாநர சூர்ணம், ஹிங்குத்ரிகுண தைலம் போன்றவை ஆமவாதத்தின் ஆரம்பத்தில் ஆமத்தையும் கபத்தையும் போக்கும். தீவிரமான பசித்தீயைத் தூண்டும். குடல் உப்புசம், வாயு, அஜீரணம் போன்றவற்றில் கை கண்ட மருந்துகளாகிய இவற்றைச் சாப்பிட, மருத்துவரின் ஆலோசனை தேவை.

Previous articleநரம்பு பிரச்சனையா! நரம்புகளை வலுப் பெறச் செய்ய இவற்றை கடைப்பிடியுங்கள்!
Next articleஆயுள் காக்கும் ஆயுர்வேதம்! கல்லீரல் பழுதடைந்து தீராத மலச்சிக்கல் தீர!