ஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்: மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

0

ஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று வங்கதேச அணியுடன் மோதுகிறது.

6 நாடுகள் கலந்து கொண்டுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்களின் முடிவில் ‘ஏ ’பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் ‘பி’

பிரிவில் இருந்து வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் ‘சூப்பர் 4’சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் ‘சூப்பர் 4’ சுற்று இன்று தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதே நேரத்தில் அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லீக் ஆட்டத்தில் இந்தியா தனதுமுதல் ஆட்டத்தில் கத்துக்குட்டியான ஹாங்காங் அணிக்கு எதிராக கடுமையாக போராடியே வெற்றி கண்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார செயல்திறனை வெளிப்படுத்தியது. புவனேஷ்வர் குமார், கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரது கட்டுக்கோப்பான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணியை 162 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியிருந்தது. பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் அபாரமாக விளையாடி சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுக்க அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக் கூட்டணி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தனர்.

‘சூப்பர் 4’ சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆயத்தமாக உள்ளது. முதல் இரு ஆட்டங்களிலும்பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டஷிகர் தவண், ரோஹித் சர்மா கூட்டணியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ஹர்திக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான தீபக் ஷகார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு உடனடியாக விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுவது சந்தேகம்தான். பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை கேதார் ஜாதவ் நிரப்பக்கூடும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர், 3 விக்கெட்களை வீழ்த்தி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். தட்டையான ஆடுகளத்தில் அவரது பந்து வீச்சு கைகொடுக்கும் என்பதால் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பேட்டிங் வரிசையில் தோனியை4-வது வீரராக களமிறக்குவது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கக்கூடும். முன்னதாக களமிறங்கும் பட்சத்தில் தோனியால் களத்தில் அதிக நேரம் செலவிட முடியும். இது அவர், தன்னை வலுவாக களத்தில் நிலைப்படுத்திக் கொள்ள உதவும் என கருதப்படுகிறது. இதற்கிடையே இந்திய அணியில் காயம் காரணமாக ஷர்துல் தாக்குர், அக்சர் படேல் ஆகியோரும் விலகி உள்ளனர். இவர்களுக்கு பதிலாக சித்தார்த் கவுல், ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச அணி லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியிருந்தது. மேலும் கடைசி ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தானுடன் அபுதாபியில் மோதிய நிலையில் இன்று துபையில் நடைபெறும் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியஅணியை சந்திக்கிறது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய முஸ்பிகுர் ரகிம், மொகமது மிதுன் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடும்.

காயம் காரணமாக தமிம் இக்பால் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத் உள்ளிட்ட வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு சவால் கொடுக்க முயற்சிக்கலாம். சூப்பர் 4 சுற்றின் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.

இந்த ஆட்டம் அபுதாபியில் நடைபெறுகிறது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானுக்கும் கடும் சவால் அளிக்கும் என கருதப்படுகிறது. பாபர் அசாம், இமாம் உல் ஹக், பஹர் ஸமான், ஷோயிப் மாலிக் உள்ளிட்டோரை கொண்ட பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான் கூட்டணி அச்சுறுத்தலாக விளங்கக்கூடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநாங்கள் என்ன நீங்கள் வைத்த உண்டியலா? – இந்தியா, சீனாவை திட்டித்தீர்த்த ட்ரம்ப்!
Next articleஆப்கானிஸ்தான் 255 ரன் குவிப்பு!