அர்ஜுனுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இரு பிரிவுகளாகத் திரண்ட கன்னட நடிகர்கள் சங்கம்!

0

மீ டூ பிரச்சினையில் அர்ஜுனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இருவேறு முனைகளில் கன்னட நடிகர்கள் சங்கம் செயல்படத் தொடங்கியுள்ளது.

தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவரும் ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்திருந்தார்.

நடிகை ஸ்ருதிக்கு ஆதரவாக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்த போதிலும், அவர் குற்றம் சாட்டிய நடிகர் அர்ஜுன் மீதான இக்குற்றச்சாட்டு ”பொருத்தமற்றது” என்றும் அவர் நடத்தை மீது பாலியல் வண்ணம் பூசப்படுவதாகவும் கன்னட திரைப்படத்துறையின் இன்னொரு பிரிவு கூறி வருகிறது.

குறிப்பாக கர்நாடகா திரைப்பட நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட சினிமா அமைப்புகள், அர்ஜுன் பின்னால் நிற்கின்றன.

சில மூத்த நடிகர்கள் அர்ஜுனுக்காக உறுதியளித்துள்ளனர். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன் இருமுறை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம், புதிய நடிகர்கள் ”பெண்களை யாராவது பாலியல் தொல்லைகள் செய்தால் அதைப் பார்த்துக்கொணடு அமைதியாக இருக்க வேண்டுமா” எனக் கேட்கிறார்கள்.

நடிகர் அர்ஜுனின் மாமனாரும் மூத்த கன்னட நடிகருமான ராஜேஷ், கர்நாடகா திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஏ.சின்னே கவுடாவைச் சந்தித்து நேற்று நடிகை ஸ்ருதிக்கு எதிராகப் புகார் ஒன்றை அளித்தார்.

மூத்த கன்னட நடிகர் ராஜேஷ்

கர்நாடக திரைப்படத் துறைக்கு ஒரு குடையாக இருந்து செயல்படும் கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் நேற்று இப்பிரச்சினையில் தலையிட்டு சமரசம் செய்ய முற்பட்டது.

அர்ஜுனின் மாமனாரும் கன்னடத்தின் மூத்த நடிகருமான ராஜேஷ் நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராகப் புகார் தெரிவித்தார். தனது மருமகனுக்கு எதிரான அவதூறுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கேஎக்சிசி தலைவர் எஸ்.ஏ.சின்னே கவுடா பேட்டி

மனவேதனையை அளிக்கும் இப்பிரச்சினைக்கு ஒரு இணக்கமான தீர்வு காண வேண்டுமென்று கேட்டுள்ள அர்ஜுன் மாமனாரின் புகாரை ஏற்றுக்கொண்ட கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் (KFCC) தலைவர் எஸ்.ஏ.சின்னே கவுடா, ‘தி இந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ’’நீண்ட விவாதத்துக்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், பொருத்தமற்ற நடத்தைகள் குறித்து விசாரிக்கும் கேந்திரா சந்தான சமிதியிடம் (மத்திய நல்லிணக்க குழு) புகார் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.

மூத்த நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட கேந்திரா சந்தான சமிதி எனப்படும் (Central Reconciliation Committee) மத்திய நல்லிணக்க குழுவுக்கு, திரைப்படத் துறையின் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட ஒரு வரலாறு உண்டு.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் சங்கங்கள் உள்ளிட்ட கன்னட திரைப்படத் துறையின் அனைத்துவிதமான அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களும் இதில் உள்ளடங்கியுள்ளன. நிச்சயம் இதன் மூலம் நல்ல தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம்” என்று சின்னே கவுடா தெரிவித்தார்.

முன்னாள் தலைவர் சா.ரா.கோவிந்து பேட்டி

கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சா.ரா.கோவிந்து, இது குறித்து தெரிவிக்கையில், ’’கேந்திரா சந்தான சமிதிக்கு கன்னடத் திரைப்படத் துறையில் உள்ள யார் வேண்டுமானாலும் பாலியல் தொல்லை உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினை குறித்தும் புகார் செய்யலாம். ஊடகங்களிடம் போவதற்கு முன்னால் இதுதான் சரியான முடிவு.

குழுவின் எல்லைக்கு வெளியே இப்பிரச்சினையில் தீர்வு காண முயல்பவர்களுக்கும் அவ்வாறு செய்ய எந்தத் தடையுமில்லை. கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் இதில் தலையிடாது” என்று தெரிவித்தார்.

#MeToo பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ராஜ்ய புருஷ ரக்ஷண சமிதி சில உறுப்பினர்கள் திரைப்பட சம்மேளன கட்டிடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழிவாங்கும் நடவடிக்கையே

இதற்கிடையில், நடிகை ஸ்ருதிக்கு ஆதரவு தெரிவித்துவரும் கேஎப்சிசி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, திரைப்படத் துறையில் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான (ஃபயர்) அமைப்பினர் சட்டப்பூர்வ (திரைப்பட) துறைசார் புகார் குழு ஒன்றை அமைத்துள்ளனர்.

இப்பிரச்சினையின் தொடர்ச்சியாக, பல பிரச்சினைகள் தோன்றுவதுண்டு, அவ்வகையில் அர்ஜுனுக்கு நெருக்கமாக உள்ள பிரசாந்த் சம்பார்கி, ஃபயர் அமைப்பின் செயலாளர் சேத்தன் அஹிம்சா மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அர்ஜுன் தயாரித்து நடித்த ’பிரேமா பிரபா’ திரைப்படத்திலிருந்து நீக்கியதாலேயே அர்ஜுனைப் பழிவாங்கும் நோக்கத்தோடு நடிகை ஸ்ருதிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெல்ஜியத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்! காமெடி செய்த திருடர்கள்!
Next article‘செங்கோல்’ கதையும் ‘சர்கார்’ கதையும் ஒன்றுதான்! கே.பாக்யராஜ் கடிதம்!