அதிரடி சோதனையில் சிக்கிய நிர்மலா தேவியின் ரகசிய டைரி… அம்பலமாகிவரும் பல உண்மைகள்!

0

விருதுநகர் ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை மூளைச்சலவை செய்து தவறான செயலுக்கு அழைத்த விவகாரத்தில் விசாரணை சூடுபிடித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று 3-வது நாளாக விசாரணை தொடர்கிறது.

நிர்மலாதேவியை பொலிஸ் காவலில் எடுப்பதற்கு முன்னர் அவரால் பாலியல் அழைப்புக்குள்ளான 4 மாணவிகளிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேவாங்கர் கல்லூரியில் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் 4 பேரும் நிர்மலாதேவியின் பாலியல் தொல்லை குறித்து பரபரப்பு தகவல்களை கூறியுள்ளனர்.

இதனை அடிப்படையாக வைத்தே பொலிஸ் காவலில் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தினர்.

நிர்மலா தேவியை அவரது சகோதரர் ரவி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அதன் பின்பு சி.பி.சி.ஐ.டி. பொலிசார் ரவியை அழைத்துக் கொண்டு நிர்மலாதேவி வீட்டுக்கு சென்றனர். அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவ்யா நகரில் உள்ள அவரது வீட்டில் மாலை 4 மணி முதல் சோதனை நடத்தப்பட்டது. 6 மணி நேரம் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

வீட்டில் இருந்த கம்ப்யூட்டரை ஆய்வு செய்த சி.பி.சி.ஐ.டி. பொலிசார் அதிலிருந்த சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். கம்ப்யூட்டர், பென்டிரைவ் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர். இந்த சோதனை வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நிர்மலாதேவியின் காரிலும் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் சோதனை போட்டனர். அப்போது ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அதில் நிர்மலாதேவியின் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பெயர், டெலிபோன் எண்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சோதனைக்கு பின்னர் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றிய பின்பு நிர்மலா தேவியின் வீட்டுக்கு “சீல்” வைக்கப்பட்டது.

நிர்மலாதேவியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாகவும், பல்கலைக் கழகத்துடன் அவருக்கு இருந்த தொடர்பு குறித்தும் முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளன. கம்யூட்டரிலும் பல்வேறு தகவல்களை அவர் பதிவு செய்து வைத்திருந்தார். இவைகளையும் போலீசார் கைப்பற்றினர். காரில் இருந்த ரகசிய டைரியிலும் நிர்மலாதேவி பல்வேறு தகவல்களை எழுதி வைத்துள்ளார்.

அனைத்தையும் பொலிசார் முக்கிய ஆதாரங்களாக கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர். வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நிர்மலா தேவியிடம் இன்று 3-வது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் சி.பி.சி.ஐ.டி. பொலிசாரின் மற்றொரு தனிப்படை தேவாங்கர் கல்லூரியின் முன்னாள் செயலாளர் சவுண்டையாவிடம் விசாரணை நடத்தியுள்ளது. இவர்தான் பேராசிரியை நிர்மலாதேவி பணிக்கு சேர்ந்தபோது பொறுப்பில் இருந்துள்ளார்.

நிர்மலாதேவி எப்படி பணியில் சேர்ந்தார்? என்பது குறித்து சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நிர்மலாதேவியின் மாமனார் பாண்டியனிடமும் சி.பி.சி.ஐ.டி. பொலிசார் விசாரணை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிரியாவுக்கு ரசாயன ஆயுதங்களை வழங்குவது இந்த நாடு தான்: வெளியான தகவல்!
Next articleகணவரை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் மனைவி: நேர்ந்த விபரீதம்!