நீங்கள் உங்களை தாண்டியிருக்கும் எதிரிகளை வெல்வதை விட உங்களுக்குள்ளிருக்கும் சத்ருக்களை ஜெயிப்பது முக்கியம். கோபம் எல்லாவற்றிற்குமான சத்ரு. அதனை வென்றால் உங்களுக்கு எங்கேயும் நிம்மதிதான்.
கோபத்தால் பல விளைவுகளை சந்தித்தாலும் அதனை எப்படி கையாள்வது என்று தெரியாமல் எதற்காக கோபப்படுகிறோம் என்று புரியாமல் தன்னிலை மறந்து தன்னையும் தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்துபவர்களுக்காக சில பயனுள்ள டிப்ஸ் இங்கே சொல்கிறோம். கேளுங்கள்.
கேள்வி கேளுங்கள் :
உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள். கோபத்திற்கான காரணம் என்ன? காரணம் நியாயமானது தானா ? இச்சம்பவத்தால் பெரும் பாதகம் நமக்கு நேரப்போகிறதா? இச்சூழலை சமாளிக்கவே முடியாதா? என்று கேட்டு விடை தெரிந்து கொள்ளுங்கள்
அவசரம் வேண்டாம்:
எல்லாவற்றிற்கும் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும். அவசர அவசரமாக வேலையை முடிக்க வேண்டும் என்று நினைப்பதை தவிருங்கள் உங்களுடைய சோம்பேறித்தனத்தை இதில் காட்டுங்கள். கோபப்படுவதற்கு முன்னால் அந்த எண்ணத்தை தள்ளிப்போடுங்கள். அதை செயல்படுத்த தாமதப்படுத்துங்கள்
திசைதிருப்புங்கள் :
உங்களின் கவனத்தை திசைதிருப்பப்பாருங்கள். சிறிய புதிர் கணக்கை அவிழ்க்க முயற்சிக்கலாம். மிகப்பிடித்தமான உணவு,பாடல்,திரைப்படம் நோக்கி சிந்தனையை மாற்றுங்கள். என்றோ சாப்பிட்ட உணவின் ருசி எப்படியிருந்தது, பிடித்த பாடலின் வரிகள், நண்பர்களுடன் ரசித்த திரைப்பட காட்சிகள் எல்லாம் நம் கவனத்தை நிச்சயம் திசை திருப்பும்.
எதிர்பார்ப்பதை தவிருங்கள் :
உங்களுக்கு வேண்டியதை கேட்டுப் பழகுங்கள், அவை கிடைக்க தேவையான உழைப்பை கொடுங்கள். என் தேவையை உணர்ந்து பிறர் செய்ய வேண்டும் எல்லாம் தானாக நடக்க வேண்டும் என்ற நினைப்பை கைவிடுங்கள்
உற்சாகமாக்கிக்கொள்ளுங்கள் :
எந்த சூழ்நிலையும் கடந்து போகக்கூடியது என்பதை உணருங்கள். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி,ஆழ்ந்த தூக்கம் எப்போதும் கடைபிடியுங்கள். மிக முக்கியமாக உங்களை நீங்களே தாழ்வாக எண்ணாதீர்கள். யோகா, தியானம் போன்ற மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடலாம்.
டேக் இட் ஈஸி :
எதையும் உணர்வுப்பூர்வமாக அணுகுவதை தவிருங்கள். காலையில் அலுவலகம் செல்லும் போது தாமதமாகிவிட்டால் அன்றைய தினம் முழுக்க கோபத்துடன் சிடுசிடுவென எரிந்து விழ வேண்டுமா என்ன? ஒரு நாள் தாமதமாகிவிட்டதா இச்சூழலை எப்படி சமாளிக்கலாம் நாளையிருந்து இன்னும் முன்னேற்பாடாக என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்.