பொதுவாக, வீட்டில் மீதமாகும் உணவுகளை எல்லாம் ‘அய்யோ காசு போட்டு வாங்கி, கஷ்டப்பட்டு சமைச்சு, எல்லாம் வீணாப்போகுதே…’ என்பதற்காகவே சாப்பிடும் பெண்கள் இங்கு பலர். ‘‘அப்படி வீட்டினர் வீணாக்கும் உணவுகளை, வீணாக்காமல் சாப்பிடுவதாக எண்ணி தேவைக்கும் அதிகமாகச் சாப்பிடுவதால் அது உங்கள் உடம்புக்குச் செய்யும் கெடுதல்கள் பல!’’ .
ஊட்டச்சத்து அதிகமானால் ஊளைச்சதை!
‘‘ஊட்டச்சத்துகளை பொதுவாக மைக்ரோ மற்றும் மேக்ரோ என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எந்த வகையை அதிகமாக உட்கொண்டாலும், பக்கவிளைவுகள் பரிசாகக் கிடைக்கும்.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை மேக்ரோ ஊட்டச்சத்துகள். வீட்டில் மீதமாகும் உணவுகளில் முதல் இடம் பிடிப்பது, சாதம் மற்றும் அரிசி சார்ந்த உணவுகள்தான்.
கார்போஹைட்ரேட் உணவுகளான இவற்றை தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், உடலின் தேவைக்கும் அதிகமான கார்போஹைட்ரேட் கொழுப்பாக உடலில் சேர்ந்துக்கொண்டே இருக்கும். இன்னொருபுறம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாகிக்கொண்டே போய் சர்க்கரை நோயில் முடியும்.
ஒரு நாளில் கல்லீரலில் 400 கிராம் வரைதான் கார்போஹைட்ரேட் சேர வேண்டும். அதற்கும் அதிகமாக சேரும்போது அது கொழுப்பாக மாறி, `ஒபிசிட்டி’யை ஏற்படுத்தும். இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
ஃப்ரிட்ஜில் உணவுகள் கொண்டுவரும் பிரச்னைகள்!
ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் தவறு. ஜில் உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது, அதிலுள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துகள் வெளியேறிவிடும். மேலும், ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகளவு கூடிவிடும். இப்படியான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது ஒபிசிட்டி, இதயநோய் என்று விளைவுகள் தீவிரமாக இருக்கும்.
காரக் குழம்பு வகைகளை மீண்டும் மீண்டும் சூடுசெய்து சாப்பிடும்போது அதில் இருக்கும் சோடியம் அளவு அதிகமாகி, ரத்தக்கொதிப்பை வரவழைக்கும்.
அசைவ உணவு வகைகளைச் சூடுசெய்து சாப்பிடும்போது, அதில் இருக்கும் கொழுப்புகள் எல்லாம் கெட்ட கொழுப்பாக மாறி உடலில் சேர்ந்து உடற்பருமனுக்கு வழிவகுக்கும்.
பழங்களும் அளவாகவே..!
மைக்ரோ ஊட்டச்சத்து வகையில் விட்டமின் `ஏ’, `சி’, `இ’, `டி’, இரும்புச் சத்து போன்றவை அடங்கும். இந்தச் சத்துகள் எல்லாம் பழங்கள், கீரை வகைகள், தயிர், காய்கறிகள் போன்றவற்றில் அதிகம் உள்ளன. குழந்தை சாப்பிடவில்லை, மீதமாகிவிட்டது என ஏதோ ஒரு காரணத்தால் தேவையான அளவுக்கும் ‘எக்ஸ்ட்ரா’வாக இவற்றைச் சாப்பிடுவது அன்றாடம்தான்.
இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது வாந்தி, மயங்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு தலைவலி, ஓய்வின்மை, பதற்றம் போன்ற உடனடிக் கோளாறுகளை உடலில் உண்டு பண்ணும். மைக்ரோ சத்துக்களை சமமாகச் சாப்பிடும் போதுதான், உடலில் மெட்டபாலிஸம் சரியாக இருக்கும்.
தொடர்ந்து ஒரே வகை பழம், காய் என்று அதிகளவில் சாப்பிடும்போது, இவற்றில் ஏதாவது ஒரு சத்து மட்டும் அதிகமானால், உடலில் மற்ற சத்துகளை வேலை செய்ய விடாமலும், புதிதாக ஒரு பிரச்னையையும் உண்டுபண்ணி, ஒரு குறைபாடாக மாற்றிவிடும்.
உதாரணமாக, கால்சியம் சத்தை உடல் கிரகிக்க விட்டமின் `டி’ தேவை. ஆனால், கால்சியம் மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கால்சியமானது… விட்டமின் `டி’ தேவையை உடலில் ஈடுசெய்ய விடாது, அந்த நேரம் கால்சியமும் உடலில் தங்காது. இது புதிதாக ஒரு பிரச்னையை உண்டுபண்ணி, கால்சியம் குறைபாடாக மாற்றிவிடும்.
நீர்ச்சத்து உணவுகளை அதிகளவு சாப்பிடும் போது அவை உடலில் தங்காமல், சிறுநீர் மூலம் வெளியேறிவிடும். எனினும், சிறுநீரகத்துக்கு அது அதிகப்படியான வேலையாக இருக்கும் என்பதால், தவிர்க்க வேண்டும்.
மனதளவிலும் பிரச்னைகள்.
உடற்செயல்பாட்டுப் பிரச்னைகள் தவிரவும், மனதளவில் இது ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. உணவு வீணாவது பற்றிய கவலை முதலில் மனதை சோர்வுற வைக்கும். வீணாக்காமல் அதைச் சாப்பிட்ட பிறகு, தேவைக்கும் அதிகமாக உள்ளே தள்ளியதைப் பற்றிய எண்ணமும் உறுத்திக் கொண்டே இருக்கும்.
இதெல்லாம் மனரீதியாக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதேபோல, குடும்பம், குழந்தை, வேலைச்சுமை போன்ற காரணங்களால் பசிக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருந்துவிட்டு, பசி அடங்கிய பிறகு வலுக்கட்டாயமாக சாப்பிடுவதும் கெடுதல்களையே தரும்.
இதற்கெல்லாம் சிம்பிள் தீர்வு.
வீணாகாத அளவுக்கு திட்டமிட்டுச் சமைப்பது. அப்படியே எதிர்பாராத காரணங்களால் உணவு மிகுந்து போனாலும், வீட்டில் வேலை பார்க்கும் பெண், தெருமுனையில் அமர்ந்திருக்கும் ஆதரவற்ற முதியவர் என்று தேவை இருப்பவர்களுக்கு அதைக் கொடுங்கள். அல்லது அதை எந்த மனச் சலனமும் இல்லாமல் குப்பையில் கொட்டுங்கள். ஏனெனில், வீணாகும் உணவைவிட, உங்கள் ஆரோக்கியம் முக்கியம். கிச்சனில் வேஸ்ட்டாவதைப் பற்றிக் கவலைப்பட்டு, மருத்துவச் செலவுகளை இழுத்துக் கொள்ளாதீர்கள்!’’.