வித்தியா கொலை வழக்கு தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் கூறிய வார்த்தைகள்.

0
1132

வித்தியா கொலை வழக்கு தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் கூறிய வார்த்தைகள்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு நேற்று தீர்ப்பாயத்தினால் வழங்கப்பட்டது.

Vijayakala
Vijayakala

மாணவியைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் 7 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பிரதான எதிரியான சுவிஸ்குமார் மற்றும் 02, 03, 04, 05, 06, 08 ஆம் இலக்க பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பாயத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவு, கூட்டு வன்புணர்வு, கொலை, கூட்டு எண்ணம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பு, ஐ.நாவின் தீர்ப்பாயங்கள் மற்றும் உள்ளுரின் முக்கியமான பல தீர்புகள் தொடர்பில் ஆராய்ந்து இந்தத் தீர்ப்பை வழங்கியதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

வழக்கில் அரச தரப்பு சாட்சியாளராக மாறியுள்ள உதயசூரியன் சுரேஷ்கரனின் சாட்சியம் முக்கியமானது எனவும் நீதிபதி கூறினார்.

சிசிரிவி காணொளிகள் ஊடாக குற்றச்செயல்கள் உடன் தாம் தொடர்புபடாதவர்கள் என வெளிப்படுத்துவதற்கு குற்றவாளிகளால் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகவும் நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா யாரென்று தெரியதென்று கூறியயுள்ள சந்தேகநபர்கள் சடலம் மீட்கப்பட்ட மறுநாள் புங்குடுதீவு ஏன் சென்றனர் எனவும் நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பினார்.

இந்த கொலைச் சம்பவத்தின் கதாநாயகனாக சுவிஸ் குமார் இருந்துள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ் குமாரை கட்டிவைத்து மக்கள் தாக்குதல் நடத்திய போது, இரவு 11 மணியளவில் அங்கு சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ”நீங்கள் சசியின் சகோதரனா” என சுவிஸ் குமாரிடம் வினவியதும், பின்னர் அவரை விடுவிக்குமாறு கூறியதும் நல்ல விடயம் என நீதிபதி இளஞ்செழியன் நகைப்பாகக் கூறியுள்ளார்.

பின்னர் ராஜாங்க அமைச்சர் அங்கு இரண்டு மணித்தியாலங்கள் நின்றதாகவும் விஜயகலா மகேஸ்வரன் வருகை தந்து தன்னைக் காப்பாற்றியமை தொடர்பில் சுவிஸ் குமார் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளமையையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சசி என்பவர் வழக்கில் கைது செய்யப்பட்டு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் என்றும் பாரதூரமான வழக்கில் அவரின் பெயரை கூறி சுவிஸ் குமார் காப்பாற்றியுள்ளமை தொடர்பில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்குமாரை அடிக்க வேண்டும் அவிழ்ந்து விடுமாறு கூறிய ராஜாங்க அமைச்சர், சுவிஸ் குமாரை சட்டத்தின் பிடியில் கையளிக்கவோ பொலிஸாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை எனவும் நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டினார்.

சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ் மாறனுடன் சுவிஸ் குமார் சென்று பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன் முன்னிலையில் ஆஜராகியதாகவும் பின்னர் பொலிஸாரின் துர்நடத்தையால் அவர் விடுவிக்கப்பட்டமையும் சாட்சியங்கள் ஊடாக தெரியவந்துள்ளதாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமக்கு எதிரான மென்பொருள் பொறியியலாளரின் சாட்சியத்தை சுவிஸ் குமார் மறுதலிக்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சுவிஸ் குமாரின் மனைவியின் சாட்சியங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், முதலாம் மற்றும் ஏழாம் இலக்க சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தமையையும் நீதிபதி நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளிக்கொணர்ந்த போது, 10 மாதம் இருண்டு கிடந்த வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் விசாரணை அதிகாரியான நிசாந்த சில்வா எனவும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி குயிண்டஸ் பெரேரா உள்ளிட்ட சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளே வழக்கின் இழுத்தடிப்பிற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் 7 குற்றவாளிகளுக்கும் தலா 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 02, 03, 05, 06, 08 ஆம் இலக்க குற்றவாளிகள் தலா 40,000 ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக நான்கு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வித்தியாவின் குடும்பத்தினருக்கு, குற்றவாளிகள் தலா ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

இதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தீர்பாயத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: