யாழ். குடா நாட்டில் புதிய அச்சுறுத்தல்! தாய், மகன் மீது இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்குதல்!

0
263

யாழ். நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கிற்கு உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டை – சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணுக்கும், அவரது 6 வயது மகன் மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத கும்பல் அவர்களை வழி மறித்து இரும்பு கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் குடும்ப பெண் தலையில் படுகாயமடைந்ததுடன், மகனுக்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது மகனும் கோட்டைக்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பெண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

யாழ். நாவற்குழியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பிலான வழக்கில் முன்னிலையாகும் பாதிக்கப்பட்டவர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு குறித்த பெண் உதவியாளராக செயற்பட்டு வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு சென்றுள்ளனர்.

அப்போது குறித்த பெண் வீதியால் செல்லும் போது தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்திசாலை பொலிஸாரே குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கி விசாரணைளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: