மோடியால் சென்னை விமான நிலையத்தில் பதற்றம்! தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு..

0
378

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 2 எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் இராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைர விழா கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார்.

சென்னை வரும் மோடிக்கு கறுப்புக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும், விமான நிலையம் முற்றுகையிடப்படும் என பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தெரிவித்திருந்தனர்.

இதனால் சென்னை விமான நிலையத்திற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பையும் மீறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விமான நிலையத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள்.

விமான நிலையத்தில் விளம்பர பனர் வைக்கும் கம்பத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையம் எதிரே போராட்டம் நடத்திய எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அமீர், பாரதிராஜா உள்ளிட்டோர் விமான நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, பிரதமர் மோடி வருகைக்கு கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கறுப்பு பலூன்களையும் பறக்க விட்டும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9.36 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடி கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

மோடி வருகையை எதிர்த்து தீக்குளித்த ஈரோடு வாலிபர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு அருகே உள்ள சித்தோடு ஆரம்ப சுகாதார நிலைய பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது25). இன்னும் திருமணம் ஆகவில்லை. பொம்மை வியாபாரம் செய்து வந்தார். அம்மா -அப்பா கிடையாது பாட்டி ஆதரவில் வசித்து வருகிறார்.

இவர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் கானுடன் வெளியே வந்தார். தனது வீட்டு சுவரில் “மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர், எடப்பாடி திரு.பழனிசாமி நீங்கள் தமிழனா? இல்லையா? தமிழக மக்களிடம் துணிந்து சொல்லுங்கள் பார்க்கலாம், தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது – பா.தர்மலிங்கம். இவ்வாறு அந்த சுவரில் மஞ்சள் கலர் சாக்பீசால் எழுதி வைத்திருந்தார்.

பிறகு தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடலில் பற்றி எரிந்த தீயால் அவர் அலறினார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் ஓடிவந்தனர். மேலும் அக்கம்பக்கம் உள்ளவர்களும் ஓடிவந்தனர்.

தர்மலிங்கம் உடலில் எரிந்த தீயை அணைத்து உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: