மருத்துவம் படிப்பதே முதல் குறிக்கோள்! இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்!

0
1966

பெண்களுக்கு படிப்பென்பது தற்போதெல்லாம் சர்வசாதாரணம். ஆனால் 1885களில் பெண்கள் படிப்பு, அதுவும்… மருத்துவ‌ படிப்பென்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. அமெரிக்கா போன்ற படித்த நாடுகளில் கூட, பெண் கல்வி பரவலாக அங்கீகரிக்கப்படாத நேரம் அது. அப்படிபட்ட கடுமையான காலகட்டத்திலும் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து பட்டம் பெற்றார் இந்தியாவைச் சேர்ந்த ஆனந்திபாய் ஜோஸி.

இந்தியாவின் முதல் பெண் டாக்டர். பூனேவில் பிறந்த ஆனந்திபாய். திருமணமானவுடன் தன் கணவர் ஜோஸி, ‘நீ படிக்க வேண்டும்” என்ற சொல்ல‌ ஆச்சரியப்பட்டு போனார் ஆனந்திபாய் ஜோஸி. சமஸ்கிருதம் தான் தாய்மொழி என்றிருந்த அந்த காலத்தில் தன் கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற ஆங்கிலம் கற்க ஆரம்பித்தார் ஆனந்தி. அதே சமயம் தன் இல்லற கடமைகளையும் அவர் தவற விடவில்லை. இல்லத்தரசியாக, தன்னுடைய பத்து வயது மகனுக்கு தாயாக என எல்லா கடமைகளையும் சரிவர நிறைவேற்றிக் கொண்டே கனவுகளை பின் தொடர்ந்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் மருத்துவ வசதி என்பது கிராமத்து மக்களுக்கு அத்தனை எளிதில் கிடைத்துவிடக் கூடியதாக இல்லை என்பதை தன்னுடைய ஒரே மகனின் இழப்பின் மூலம் அவர் உணர்ந்து கொண்டபோது நிலைகுலைந்து போனார்.

எப்போதும் உற்சாகத்துடன் வளைய வரும் தன் மனைவி சோகத்தில் சுருங்கி போனதை கண்டு துடித்து போனார் ஜோஸி. அப்போதிருந்த நிலையில் கல்வி ஒன்றால் மட்டுமே தன் மனைவியை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிய ஜோஸி, ஆனந்திபாய்க்குள் படிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி, அவருடைய ஆசையான மருத்துவ படிப்பை பெற்றுத்தர, அமெரிக்காவைச் சேர்ந்த மிக பிரபலமான தொண்டு நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார் ஜோஸி.

”என் மனைவி ஆனந்திபாய் மருத்துவம் படிக்க விரும்புகிறாள். அவளுக்கு படிக்க உதவுங்கள்” என்று அவர் எழுதிய கடிதத்துக்கு, ‘உங்கள் மனைவி கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறினால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும்” என்று பதில் வந்தது.

இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வெளிவர, ஒரே நாளில் பிரபலமானார் ஆனந்தி. அவருக்கு நிதி உதவி அளிக்க‌ பலரும் முன் வந்தார்கள். இதற்கிடையில் வெஸ்ட் பெங்காலில் உள்ள செரம்பூர் கல்லூரியில் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் ஆனந்தி. அப்போது அவர் நிகழ்த்திய உரைதான் பிரபலம்.

‘இந்தியாவில் மருத்துவரான ஆண்கள், பெண்களுக்கு பிரசவமோ மருத்துவமோ பார்க்க முன்வருவதில்லை. எனவே நிச்சயம் எங்களுக்கு என்று ஒரு பெண் மருத்துவர் தேவையாக இருக்கிறார். அந்த மருத்துவர் நானாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய ஒரே விருப்பம் அமெரிக்கா சென்று மருத்துவம் படிப்பதே” என்று ஓங்கி ஒலித்த ஆனந்திபாயின் குரலுக்கு நிதி உதவி வந்து சேர்ந்து கொண்டே இருந்தது. 1883ல் நியூயார்க் வந்த ஆனந்திபாய், பென்சில்வேனியாவில் உள்ள விமன்ஸ் மெடிக்கல் காலேஜுக்கு தன்னையும் மருத்துவ படிப்பில் சேர்த்துக் கொள்ள சொல்லி கடிதம் எழுதினார். உலகிலேயே பெண்களுக்கான மருத்துவ படிப்பு முதன்முதலில் அங்குதான் துவங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

பலத்த போராட்டத்துக்கு பிறகு தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் மருத்துவ படிப்பை துவங்கிய ஆனந்திபாய் ஜோஸி, 1886-ல் தன்னுடைய எம்.டி படிப்பை நிறைவு செய்து இந்தியாவில் முதல் பெண் டாக்டர் என்ற பெருமையோடு இந்தியா திரும்பினார். அவரை கவுரவிக்கும் விதமாக, கொஹல்பூரில் உள்ள அல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் பிரிவுக்கு இன்சார்ஜாக நியமித்தார் கொஹல்பூர் மகராஜா. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் போதே அங்கு நிலவிய தாளமுடியாத‌ குளிர் மற்றும் உணவுகளால் டி.பிக்கு ஆளாகியிருந்தார் ஆனந்திபாய் ஜோஸி. ‘இந்தியா வந்து சொந்த மருத்துவமனை ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்ற அவரது கனவு நனவாகாமலேயே டி.பி நோய் முற்றி 1887ல் இறந்து போனார் ஆனந்திபாய் ஜோஸி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளைஞரின் நாக்கைக் கடித்து துப்பிய பெண் மருத்துவர்!
Next articleபேஸ்புக் பயன்படுத்தினால் மாத்திரமே இனி அமெரிக்கா செல்ல முடியும்!