பிரித்தானிய அரச குடும்பத்திற்கு புது வரவு: ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் இளவரசி கேட்!

0
345

இன்று காலை உள்ளூர் நேரப்படி 6 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள St Mary’s மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு 11.01மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை 8lbs 7oz எடை இருப்பதாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் கென்சிங்டன் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ குடும்ப மரபுப்படி குழந்தை பிறந்த செய்தி ராணியாருக்கு தெரிவிக்கப்பட்டபின் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தை His Royal Highness Prince என்ற பட்டத்துடன் அழைக்கப்படும்.

St Mary’s மருத்துவமனையில் Guy Thorpe-Beeston, மற்றும் Alan Farthing ஆகிய மருத்துவர்கள் தலைமையிலான குழு கேட்டிற்கு பிரசவம் பார்த்தது.

கேட்டின் முதல் இரண்டு குழந்தைகளுக்கும் இதே மருத்துவர்கள்தான் பிரசவம் பார்த்தனர்.

சிறந்த அனுபவம் கொண்ட தாதிமார்களும் ஒரு வேளை அறுவை சிகிச்சை ஏதாவது தேவைப்படும் பட்சத்தில் உதவுவதற்காக பல்வேறு துறைகளின் மருத்துவ நிபுணர்களும் தயாராக காத்திருந்தனர்.

கேட்டின் முந்தைய பிரசவத்தின்போது அவருக்கு உதவ 23 மருத்துவக் குழுக்கள் தயாராக இருந்தனர்.

பிரசவத்திற்குப் பின் புதிதாக பிறந்த குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக தனது விடுமுறையை நீட்டித்துக் கொள்ள இருக்கும் கேட் மே 19 அன்று நடைபெற உள்ள இளவரசர் ஹரி, மெர்க்கல் திருமணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இளவரசர் பிறப்பதற்கு சற்றுமுன் பிறந்த இன்னொரு குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள, செய்தி சேகரிப்பதற்காக கூடியிருந்த ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் அவர்களைப் பாராட்டிய ஒரு இனிய சம்பவமும் நடந்தேறியது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: