இந்த பிரச்சனைகளாலும் நீங்கள் இறக்க வாய்ப்புள்ளது என்பது தெரியுமா?

0
7443

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் மரணம் என்ற ஒன்று நிச்சயம் உள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் நோய்வாய்ப்பட்டு ஒருவர் இறப்பதற்கு காரணம், அவர்களே தான். உலகில் எத்தனையோ வழிகளில் மக்கள் மரணத்தை சந்திக்கிறார்கள். சிலர் பயங்கரமான நோய்களின் தாக்கத்தினாலும், சிலர் விபத்துக்களாலும், இன்னும் சிலர் இயற்கையாகவும் மரணத்தை சந்திக்கிறார்கள்.

ஆனால் சில சமயங்களில் ஒருவரை மரணமானது நாம் எதிர்பார்க்காத சில அதிர்ச்சிகரமான வழியாலும் மரணத்தை சந்திப்பார்கள் என்பது தெரியுமா? அது என்ன அதிர்ச்சிகரமான வழி என்று நீங்கள் கேட்கிறீர்களா? ஆம், ஒருவர் வாய் தொற்றுக்கள், குறட்டை, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு மரணத்தை சந்தித்தால், அது அதிர்ச்சிகரமான வழிகள் தானே!

ஒருவரை மரணம் எப்போது நெருங்கும் என்று நம்மால் சரியாக கணிக்க முடியாது. ஆனால் நம்மால் மரணம் நம்மை எளிதில் நெருக்காமல் தடுக்க முடியும். அதற்கு உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கூர்மையாக கவனித்து, அதற்கு சரியான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தால், ஒருவரை நெருங்கும் மரணத்தைத் தள்ளிப் போடலாம்.

நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொள்பவராயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை சாதாரணமாக எண்ணிவிடாமல், உடனே அதற்கு சரியான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், மரணத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

பல் தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பது

வாய் ஆரோக்கியம் ஒருவரது உயிரைப் பறிக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அந்த எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். வாய் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், அதனால் உடலினுள் தொற்றுக்கள் மிகவும் வேகமாக பரவி, ஆரோக்கியம் பாழாக வாய்ப்புள்ளது. பொதுவாக சொத்தைப் பல் இருந்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் மிகவும் மெதுவாக வளர்ச்சி பெறும். இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் ஈறுகளில் சீழ்க்கட்டி இருந்தால், அப்பகுதியில் அளவுக்கு அதிகமாக பாக்டீரியாக்கள் தேக்கமடைந்து, பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

ஒருவர் பல் தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அதனால் அந்த பாக்டீரியாக்களானது உடலின் ஒவ்வொரு பகுதியையும் தாக்காவிட்டாலும், நிச்சயம் இரத்தத்தின் மூலம் இதயத்தினுள் சென்று ஆபத்தை உண்டாக்கும் வாய்ப்புள்ளது. எனவே வாயில் கடுமையான தொற்றுக்கள் இருப்பது போல் உணர்ந்தால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது

உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, இதயமும் வலிமைப் பெறும். ஆனால் சில சமயங்களில் ஒருவர் மிகவும் கடுமையாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, அதனால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட்டு, சில நேரங்களில் மரணத்தை சந்திக்கக்கூடும். ஒருவர் தினந்தோறும் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், இதயம் வலிமையடைவதோடு, இதய நோயின் அபாயமும் குறையும்.

அதுவே மிகவும் கடுமையான உடற்பயிற்சியில் அதிக நேரம் ஈடுபட்டு வந்தால், அதனால் மாரடைப்பிற்கான அபாயம் அதிகரிப்பதோடு, திடீரென்று இதய செயலிழப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். எனவே மிதமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது

பெரும்பாலானோர் நாள் முழுவதும் உட்கார்ந்தவாறே வேலை செய்ய வேண்டியுள்ளது. இது மட்டும் ஒருவரது உயிரைப் பறிப்பதில்லை. நாள் முழுவதும் பல மணிநேரங்கள் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து, உடலுக்கு சிறு நடைப்பயிற்சி கூட கொடுக்காமல் இருந்தால் தான் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதற்கும், தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்ததில், உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் இரத்த உறைவு, இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயம் அதிகம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் உடலுழைப்பு இல்லாமல், நீண்ட நேரம் உட்கார்ந்தவாறே இருந்து 1.9 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ரிப்போர்ட்டில் தெரிய வந்தது. எனவே நீங்கள் இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்தவாறு வேலை செய்பவராக இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி, ஆரோக்கியமாக இருக்க என்ன செய்வது என்று கேட்டு தெரிந்து பின்பற்றுங்கள்.

சரியான தூக்கமில்லாமை

தற்போது மூன்றில் ஒருவர் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதனால் உயிருக்கு எடுத்ததுமே ஆபத்து ஏற்படுவதில்லை. தூக்கமின்மையால் ஒருவர் இறப்பை சந்திப்பது என்பது அரிதான ஒன்று தான். அதுவும் தூக்கமின்மையால் நீண்ட நாட்கள் ஒருவர் அவஸ்தைப்பட்டு, சரியான சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருந்தால், அதனால் உடலியக்கத்தின் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டு, மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தூக்கத்தை இழந்து உயிரை விடுவதற்கு பதிலாக, நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான வழி என்னவென்று தெரிந்து மேற்கொண்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

குறட்டை

என்ன அதிர்ச்சிகரமாக உள்ளதா? தூங்கும் போது சுவாசிப்பதில் ஏற்படும் தடையினால் எழும் ஒருசப்தம் தான் குறட்டை. சிலருக்கு தூங்கும் போது அருகில் யாரும் படுக்க முடியாத அளவில் குறட்டை மிகுதியான சப்தத்துடன் இருக்கும். இப்படி அதிக சப்தத்துடன் குறட்டை விடுபவர்கள், பகல் நேத்தில் மிகுந்த சோர்வை உணர்வார்கள். அதிக சப்தத்துடன் குறட்டை விடுபவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும். இத்தகைய பிரச்சனை உள்ளவர்களுக்கு, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு திடீரென்று குறையும் போது, இரத்த அழுத்தம் அதிகரித்து, இதயத்திற்கு சிரமத்தை வழங்கும். மேலும் இதன் விளைவாக இத்தகையவர்களுக்கு சில சமயங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயமும் அதிகம் உள்ளது. எனவே குறட்டைப் பிரச்சனை தீவிரமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுகி என்ன செய்வதென்று கேட்டு பின்பற்றுங்கள்.

தண்ணீர் அலர்ஜி

மிகவும் அரிதாக சிலருக்கு தண்ணீர் சருமத்தில் பட்டாலே அலர்ஜி ஏற்படும். இத்தகைய பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் சருமத்தில் பட்டால், சருமத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கும். முக்கியமாக இவர்கள் அழுதால், வியர்த்தால், மழையில் நனைந்தால் என இவர்கள் மீது எப்படி நீர் பட்டாலும், அவர்கள் இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த அலர்ஜி தீவிரமாக இருந்தால், சில சமயங்களில் மூச்சுவிடுவதில் கூட சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இம்மாதிரியான பிரச்சனை உள்ளவர்களுக்கு என்று எவ்வித சிகிச்சைகளும் இதுவரை இல்லை. நல்ல வேளை இம்மாதிரியான பிரச்சனை மிகவும் குறைவு. இருப்பினும் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிகிச்சை ஏதும் இல்லாததால், இப்பிரச்சனை தாங்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.

கண் தொற்றுக்கள்

கண்களில் தொற்றுக்கள் ஏற்பட்டால், அதை உடனடியாக சரிசெய்ய முயற்சிக்க வேண்டியது மிகவும் அவசியம். கண் இமைகளில் சிறு தொற்றுக்கள் ஏற்பட்டு, அதை சரிசெய்யாமல் விட்டுவிட்டால், அந்த தொற்று அப்படியே கண்கள் முழுவதும் வேகமாக பரவ ஆரம்பித்துவிடும். பின் கண்களில் உள்ள நரம்பு திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி, மூளையுடன் இணைப்பைக் கொண்ட நரம்புகள் வழியே மூளையைத் தாக்கி, தொற்றுக்களை தீவிரமாக்கி, சில சமயங்களில் இறப்பை கூட உண்டாக்கலாம். இம்மாதிரியான நிலைமையால் உயிரை இழந்தோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் கண்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றிமையாதது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: