தாய் ஒருவரின் நெகிழ்ச்சி! இறுதி யுத்தத்தில் இறந்த மகனை உயிரோடு திருப்பி தந்த இராணுவம்!

0
266

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தலையில் படுகாயமடைந்த எனது மகன் இறந்து விட்டார் என்று தான் நினைத்தேன். ஆனால் பல நாட்களின் பின்னர் எனது மகனை இராணுவத்தினர் உயிரோடு திருப்பி தந்துள்ளனர் என்று முள்ளிவாய்க்காலில் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

யுத்த பாதிப்புக்கு உள்ளாகிய மக்களின் நிலை தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே நெகிழ்ச்சியுடன் இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“2009 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி நந்திக்கடல் தெற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் இருந்து தமது பிரதேசத்திற்குள் எங்களை வரும்படி சைகை மூலம் காட்டினார்கள்.

அப்பொழுது நாங்கள் நின்று கொண்டிருந்த பகுதி விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடைப்பட்ட பகுதி.

இந்த நிலையில் ஏற்கனவே படுகாயமடைந்திருந்த எனது கணவரையும் இளைய மகனையும் அழைத்துக் கொண்டு எனது மூத்த மகனுடன் நந்திக்கடலூடாக இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தோம்.

அப்பொழுது வட்டுவாகல் பகுதியில் இருந்தும் நாங்கள் சென்று கொண்டிருந்த பகுதியில் இருந்தும் யுத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது எனது மூத்த மகனுக்கு தலையில் துப்பாக்கி ரவை பாய்ந்தது. எனது இளைய மகனும் மீண்டும் படுகாயமடைந்தார். இருவரும் நந்திக் கடலில் விழுந்தனர்.

எனது கணவரும் படுகாயமடைந்திருந்ததால் என்னால் மூத்த மகனை மட்டும் கரைசேர்க்க முடிந்தது. ஆனாலும் மூத்த மகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அதிகமான குருதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் மூத்த மகனை தொடர்ந்து தூக்கி செல்ல முடியாதவாறு தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

என் ஆண் பிள்ளைகள் இருவரும் இறந்து விட்டார்கள்..? ஆனாலும் நானும் படுகாயமடைந்த எனது கணவரும் அவ்விடத்தில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் செல்ல முடியாதவாறு தவித்தோம். அப்பொழுது இராணுவத்தினர் எம்மை மீட்டனர்.

எமது ஆண் பிள்ளைகள் இருவரும் இறந்து விடடார்கள் என்ற கவலையில் நாம் நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருந்தோம்

பின்னர் பல நாட்கள் சென்ற நிலையில் எனது மூத்த மகனை இராணுவத்தினர் உயிரோடு ஒப்படைத்தனர்.

ஆனாலும் உயிரோடு திரும்பிய மகன் தற்பொழுது வரை உடல் நலக்குறைவாகவே வாழ்ந்து வருகின்றார். எனினும் இறந்ததாக எண்ணிய எனது மகன் திரும்பி வந்ததில் தாம் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: