பெண்களின் அணிகலன்களில், கொலுசுக்கு முக்கியத்துவம் உண்டு. சொல்லப்போனால், குழந்தை பிறந்ததும் அது ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ… அந்தக் குழந்தைக்கு வெள்ளியில் காப்பு, வெள்ளியில் கொலுசு என அணிவித்து மகிழ்வோம்.
ஆனால் சமீபகாலங்களில், தங்கத்தில் கொலுசு அணிவது அதிகரித்து வருகிறது. வெள்ளியில் கொலுசு அணிபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் கூட, தங்கத்தில் கொலுசு அணியும் பெண்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள் என்றாகிவிட்டது, இப்போது!
உண்மையில், தங்கத்தில் கொலுசு செய்து அணிந்துகொள்வது கூடாது என்றே சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. மேலும் ஜோதிட நூல்களும் இதையே வலியுறுத்துகின்றன.
நம், அங்கத்தின் அவயங்களை நவக்கிரக ரீதியாக இணைத்துப் பார்க்கச் சொல்லி வலியுறுத்துகிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது நவக்கிரகங்களில் ஒன்றான சூரியனை, நம் கண்ணுக்கு இணையாகச் சொல்கிறார்கள். சந்திரன் மூச்சு விடக்கூடிய மூக்குப்பகுதி என்கிறார்கள். முகமும் முகத்தில் வாய் என்ற பாகமும் இருப்பதால், செவ்வாய்க்கிரகத்தை இணையாகச் சொல்கிறார்கள்.
நம் உடலின் நரம்புகள் புதன் கிரகம். வயிறு சம்பந்தப்பட்ட பாகங்களை குருவாகச் சொல்லுகிறார்கள். இடுப்பிலிருந்து தொடை வரை இருக்கக்கூடிய பாகங்களை சுக்கிரனுக்கான இடம் என்கிறார்கள்.
தொடையிலிருந்து காலின் பாதப் பகுதி வரை சனி கிரகத்துக்குரிய இடம் என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆக நம்முடைய பாதம் என்பது சனியின் அம்சம்.
தங்கம் என்பது குருவின் அம்சம். அதனால்தான் ஒரு குந்துமணி நகை வாங்குவதாக இருந்தாலும் குரு ஹோரையில் வாங்கச் சொல்லி வலியுறுத்துகின்றன ஜோதிட நூல்கள். அப்படி குருவுக்கு உரிய தங்க நகைகளை, தங்கக் காசுகளை, குருவின் ஹோரையில் வாங்கினால், குருவின் பூரண அருளும் ஆசியும் கிடைக்கப்பெறலாம். தங்க ஆபரணச் சேர்க்கை நிகழும் என்பது ஐதீகம்.
அதனால்தான், குருவின் அம்சமான தங்கத்தை, குரு ஹோரையில் வாங்குவதுடன் குரு ஹோரை நேரத்தில், முதன்முதலாக நகையை வாங்கி அணிந்துகொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.
திருமணத்துக்கு, திருமாங்கல்யம் வாங்கும் போதோ அல்லது திருமாங்கல்யத்தைச் செய்வதற்கு பொன்னுருக்கிக் கொடுக்கும்போதோ, குரு ஹோரையில், குரு பார்க்கக் கூடிய லக்னத்தில் அவற்றைச் செய்யத் தொடங்குவது வழக்கம்.
நம் உடலில் வயிறு மற்றும் அதன் தொடர்பான பகுதியை குருவுக்கான இடம் என்று சொல்லுகிறோம். தங்கம் குருவின் ஆதிக்கத்தில் உள்ள ஆபரணம். அதனால்தான், குருவுக்கு உரிய இடத்தைத் தொடும்படி, குருவின் ஆதிக்கம் நிறைந்த, தங்கத்தாலி, தங்கச் செயின், தங்க டாலர் முதலானவற்றையும் வயிற்றுடன் இணைத்து அணியும் ஒட்டியாணம் முதலானவற்றையும் அணிந்துகொள்ள வலியுறுத்தியுள்ளனர். அணிந்துள்ளனர்.
குருவின் ஆதிக்கம் நிறைந்த தங்கம் என்பது மகாலக்ஷ்மியின் அம்சம். தங்கத்தை அணிவதன் மூலம், சிந்தனையிலும் செயலிலும் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். நேர்மறைச் செயல்கள் அதிகரிக்கும். அதாவது பாஸிட்டீவ் எனர்ஜியைக் கொடுக்கும்.
ஆகவே, குருவின் ஆதிக்கம் நிறைந்த தங்கத்தை, மகாலக்ஷ்மியின் அம்சமான தங்கத்தை, இடுப்புக்குக் கீழே அணிவதைத் தவிர்க்கச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.
நாம் ஒருவரிடம் ஒரு பொருளை வாங்கினாலோ அல்லது கொடுத்தாலோ இடது கையைப் பயன்படுத்தமாட்டோம். வலது கையில் வாங்கி, வலது கையில் கொடுத்து என்பதுதானே வழக்கம். இடது கையில் கொடுப்பது எதிரில் உள்ள மனிதரையும் பொருளையும் மதிக்காததற்குச் சமம் என அறிவுறுத்தியுள்ளனர். அதேபோலத்தான்,
குருவாகத் திகழும் தங்கத்தை, மகாலக்ஷ்மியின் அம்சமான தங்கத்தை காலில் அணிவது மகாபாபம் என்கின்றனர் சாஸ்திர வல்லுநர்கள். இது, இவர்களையும் சரி, தங்கத்தையும் சரி… அலட்சியப்படுத்துவதற்குச் சமம்!
தங்கத்தை கொலுசாக அணிந்துகொள்ளும் போது, இன்னொரு விஷயம். தங்கத்தின் நேர்மறை எண்ணங்கள், அப்படியே உல்டாவாகிவிடுகின்றன. அதாவது எதிர்மறை எண்ணங்கள், நமக்குள் தோன்றத் தொடங்கிவிடுகின்றன. தங்கக் கொலுசு அணிவதால், நன்மையை விட தீமையே அதிகம்.
இன்னொரு விஷயம்… குருவும் சனியும் சமகிரகங்கள்தான். ஆனாலும் பகைக் கிரகங்கள். அதனால்தான், சனியின் வீடான மகர ராசியில் குரு பகவான் நீசம் பெறுகிறார், இதையொட்டிதான், கால்களில் வெள்ளி அணிகலன்களைச் சேர்ப்பது நன்மையைக் கொடுக்கும் என்றார்கள் முன்னோர்கள். கால்விரலில் வெள்ளியாலான மெட்டி அணிவதும் வெள்ளிக்கொலுசு அணிவதும், இதையொட்டியே அமைந்தது.
தவிர, தங்கத்துக்கு தோஷம் உண்டு. ஆனால் வெள்ளிக்கு தோஷம் இல்லை. தங்கம் குரு என்றால், வெள்ளி சுக்கிரன். சுக்கிரனும் புதனும் எல்லா இடங்களிலும் நட்பு கொண்டிருப்பவர்கள். ஆகவே, வெள்ளியில் அணிவது மிக மிக நல்லது. முக்கியமாக கொலுசு அணிவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
எவ்வளவு காசுபணம் இருந்தாலும், எதுஎதை எதில் செய்ய வேண்டும், எது எதை எங்கே அணிந்துகொள்ளவேண்டும் என ஓர் வரையறை இருக்கிறது. ‘தங்க ஊசி என்றால் கண்ணில் குத்திக்கொள்ளமுடியுமா?’ என்பது போலத்தான், தங்கம் வாங்கக் காசு இருக்கிறது, வசதி இருக்கிறது என்கிற காரணத்தால், தங்கத்தில் மெட்டி செய்து, தங்கத்தில் கொலுசு செய்து காலில் அணிந்துகொள்வதும் என்று ஆச்சார்யப் பெருமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆகவே, தங்கக் கொலுசு, தங்க மெட்டி என்பவை ஒருபோதும் அணிந்துகொள்ளக்கூடாது.