கொலையானதாக கருதப்படும் ஜமாலின் மகனை அரண்மனைக்கு அழைத்து சவுதி இளவரசர் ஆறுதல் கூறிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொலை புகாருக்கு ஆளாகியுள்ள இளவரசர், ஜமாலின் மகனை அழைத்து ஆறுதல் கூறியதை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்தவர் ஜமால். குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை கடுமையாக விமர்சித் எழுதி வந்தார். துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
அங்கு அவர் கொலை செய்யப்பட்டதாக துருக்கி புகார் கூறி வருகிறது. இதுதொடர்பாக சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்தது எனக் கூறி அதற்கான ஆதாரங்களை அடுத்தடுத்து துருக்கி வெளியிட்டு வருகிறது. இதனால் சவுதி அரேபியாவுக்கும், அதன் இளவரசர் சல்மானுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சவுதி அரசு மீதும், சல்மான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜமாலின் மகன் சலாவை ரியாத் அரண்மனைக்கு வரவழைத்து மன்னரும், இளவரசரும் ஆறுதல் தெரிவித்தனர். மேலும், சலா மற்றும் அவரது சகோதரர் சாஹலுடன் கைகுலுக்கும் புகைப்படத்தையும் சவுதி அரண்மனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.
ஜமால் சவுதியை விமர்சித்து கட்டுரை எழுதி வந்ததால் அவரது மகன் சலா வெளியே செல்ல சவுதி அனுமதி வழங்கவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையல் ஜமால் கொலையால் கடும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் சலாவ நேரில் அழைத்து சல்மான் ஆறுதல் கூறியதை பலரும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
ஜமால் கொலை புகாருக்கு ஆளாகியுள்ள சவுதி இளவரசருடன் கைகுலுக்கும் நிலையில் சலா இருப்பதாக சிலர் கூறியுள்ளனர்.
சவுதி அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் சகிக்க முடியாதவை என வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.
தந்தையை கொன்ற புகாருக்கு ஆளாகிய நிலையில் அவரது மகனுடன் கைகுலுக்கும் உங்களுக்கு இரங்கமில்லையா என சிலர் பதிவிட்டுள்ளனர்.
தந்தையை கொனறருடன் கைகுலுக்க அவருக்கு எந்த அளவுக்கு வேதனை இருக்கும் என சிலர் கூறியுள்ளனர்.
கொலையானவரின் மகனுக்கு கொலை செய்தவரே சம்மன் அனுப்பி ஆறுதல் கூறுவது விநோதம் என வேறு ஒருவர் தெரிவித்துள்ளார்.