கெட்டு போன சிறுநீரகம், கல்லீரலை கூட இந்த கீரை புத்துயிர் அளிக்கும் தெரியுமா!

0
7898

தமிழகச் சிற்றூர்களில் ‘களவாங்கீரை’ என்று பல கீரைகளை ஒன்றாகச் சேர்த்து தெருவில் கூவி விற்பது வழக்கம். அந்தக் கலவையில் முக்கியமாக மூக்கிரட்டை கீரையும் ஒன்றாக இடம் பெற்றிருக்கும். இது நம் இந்திய மண்ணில் புல்வெளிகளிலும், நிலங்களிலும் தாரளமாகப் படர்ந்து வளரும் கொடி இனத்தைச் சார்ந்த கீரையாகும். Boerhaavia diffusa என்று தாவரவியலில் அழைக்கப்படுகிறது.

மூக்கிரட்டை என்று குறிக்கையில் அது சிறிய வட்டமான இலைகளையும் சிவந்த பூக்களையும் கொண்டு தரையில் படரும் பூண்டு வகை ஆகும். இதைப் போலவே உருவம் கொண்டு சற்று பெரிய இலைகளையும் தடிமனான, வட்டமான வடிவத்தையும் வெண்மையான பூக்களையும் கொண்டு விளங்குவது ‘மூக்கனாச் சாரணை’ என்று பெயர் பெறும். இரண்டுமே மருத்துவக் குணங்களை உள்ளடக்கிய மகத்துவம் பொருந்திய மூலிகைகள் ஆகும்.

சிவப்பு பூக்கள் கொண்ட வகையை புனர்னவா என்றும், வெள்ளைப் பூக்கள் கொண்ட ‘சத்திச் சாரணை’யை ‘ஸ்வேத புனர்னவா’ என்றும் வடமொழியில் குறிப்பர். மூக்கிரட்டையை ‘ரத்த புனர்னவா’ என்றும் ‘சோபாக்கினி’ என்றும் வடமொழி கூறும்.

மூக்கிரட்டையை பற்றிய அகத்தியர் குணபாடம் :

‘சீத மகற்றுந் தினவடக்குங் காந்திதரும்
வாத வினையை மடிக்குங்காண் பேதி
கொடுக்குமதை உண்டாக்காற் கோமளமே! பித்தம்
அடுக்குமே மூக்கிரட்டையாய்..’

மேற்கண்ட பாடலின்படி மூக்கிரட்டை சீதள நோய்களை அகற்றும், தினவு என்கிற நமைச்சலைப் போக்கும். உடலுக்கு அழகைக் கூட்டும், வாதத்தால்(காற்றால்) விளைந்த நோய்களை வேரோடு சாய்க்கும் என்பது புரிய வருகிறது. புகழ்வதுடன் மூக்கிரட்டையின் பக்கவிளைவையும் மறக்காமல் அகத்தியர் சுட்டிக் காட்டுகிறார். மூக்கிரட்டையை அதிகமாக உண்பதால் வயிற்றுப் போக்கும், பித்தமும் உண்டாகும் என்பதால் அளவோடு உண்பதே நலம் பயக்கும் என்பதும் விளங்க வருகிறது.

மூக்கிரட்டை கண்களின் பார்வைத் திறனை அதிகப்படுத்தக் கூடியது. சிறுநீரகச் செயல்பாட்டைச் சீர்படுத்தக் கூடியது. ரத்தத்தில் தேங்கும் பொட்டாசியம் எனும் உப்பின் அளவைக் குறைக்கவல்லது. தொழுநோய், பெருநோய் என்று சொல்லப்படுகிற குட்ட நோயையும் குணப்படுத்தக்கூடியது. மேலும் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம் வலி ஆகியவற்றுடன் ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களையும் குணப்படுத்தக் கூடியது என்று பரிந்துரைக்கின்றன சில ஆயுர்வேத நூல்கள்.

சிறிது கசப்பும் வறட்டுத் தன்மையும் வாய்ந்தது, கபத்தை அழிக்கக் கூடியது, இரண்டு திசுக்களின் இடையே உள்ள தடையை அல்லது அடைப்பைப் போக்கவல்லது, உடல் வலியையும் போக்கக் கூடியது மூக்கிரட்டை ஆகும் என்றும் குறிப்பிடுகிறது. அகத்தியர் கூறுவதைப் போலவே உஷ்ணத்தை உண்டாக்கும் மூலிகை என்பதை ஆயுர்வேதமும்
அளவோடு பயன்படுத்த அறிவுறுத்துகிறது.

மூக்கிரட்டையின் கீரையைப் போலவே வேரும் மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும். வேரைச் சேகரித்து சுத்தப்படுத்திப் பொடித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு தேவைப்படும்போது பயன்படுத்தலாம். மூக்கிரட்டை நீண்ட ஆயுளைத் தருகிற கற்ப மூலிகையாகவும் மதிக்கப்படுகிறது. இதனாலேயே இதற்கு ‘புனர்னவா’ எனும் பெயர் வடமொழியில் தரப்பட்டது. ‘புனர்’ என்பதற்கு மீண்டும் என்றும் ‘நவா’ என்பதற்கு புதிது என்றும் பொருள் உரைக்கப்படும்.

மூக்கிரட்டையை உணவாகவோ மருந்தாகவோ பயன்படுத்துவதால் உடலின் செயலிழந்து போன உள்ளுறுப்புகள், நாளங்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மீண்டும் புத்துயிர் பெற்று செயல்படத் துவங்குகிறது. இந்த உண்மையை உறுதி செய்த பிறகுதான் நம் முன்னோர்கள் ‘புனர்னவா’ என்று அழைத்ததில் தவறேதும் இல்லைதான்.

மூக்கிரட்டையில் உள்ள மருத்துவப் பொருட்கள் :

மூக்கிரட்டைக் கீரையில் Rotenoids, Flavanoids, Steroids ஆகிய வேதிப் பொருட்கள் மிகுதியாக உள்ளன என்றும், இவை இனப்பெருக்க உறுப்புகள், சீரான உறுப்புகள், சுவாச உறுப்புகள், சிறுநீரகம், ஈரல் மற்றும் அது தொடர்பான மஞ்சள் காமாலை, இதயம் மற்றும் இதய நாளங்கள் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு மருந்தாகின்றன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் மூக்கிரட்டை கீரையில் சத்தூட்டப் பொருட்களான 15 விதமான அமினோ அமிலங்கள் அடங்கியிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதேபோல, வேரில் 14 அமினோ அமிலங்கள், நீர்மைப்பட்ட கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் சி, வைட்டமின் B3, மற்றும் வைட்டமின் B2, கால்சியம் போன்றவையும் அடங்கியுள்ளன.

மூக்கிரட்டையின் மருத்துவ குணங்கள் :

மூக்கிரட்டைப் புத்துணர்வையும் சுறுசுறுப்பையும் அளிக்கவல்லது, ஈரலை பலப்படுத்தவல்லது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது, வலிப்பைப் போக்கக் கூடியது, எவ்வித வீக்கத்தையும் கரைக்கக்கூடியது, ஒட்டுண்ணிகளுக்கு எதிரானது, தொற்றுநோய்க் கிருமிகளுக்கு எதிரானது, ஆஸ்துமாவைப் போக்கக் கூடியது, வயிற்றுப் போக்கைத் தணிக்கவல்லது, குடற் புழுக்களை விரட்ட வல்லது, நுண்கிருமிகளுக்கு எதிரானது, உயர் ரத்த அழுத்தத்தைத் தணிக்கவல்லது, புண்களை ஆற்றக்கூடியது, ரத்தத்தை சுத்திகரிப்பது, குடல் வாயுவை போக்கக் கூடியது, கல்லீரலைப் பாதுகாப்பது, மாதவிடாயைத் தூண்டக் கூடியது, வலி நிவாரணியாவது, சுவாச நாளங்களைச் சுத்தப்படுத்தக் கூடியது, உடல் நச்சுக்களை முறிக்கவல்லது, இதயத்துக்கு பலம் அளிப்பது, செரிமானத்தை சீர்படுத்துவது, பாலைச் சுரக்க வைப்பது, புற்றுநோய் செல்களைத் தடுக்கக் கூடியது என ஒரு நீண்ட பட்டியலே மூக்கிரட்டைக்கு உண்டு.

மூக்கிரட்டைக் கீரையின் மருத்துவப் பயன்கள் :

மூக்கிரட்டைக் கீரையைச் சுத்தம் செய்து சமைத்தோ அல்லது சமூலத்தை (இலை, கொடி, வேர், காய் அனைத்தும்) சுத்திகரித்து நிழலில் உணர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 3 முதல் 5 கிராம் வரை அந்தி சந்தி என இருவேளை ஒரு மண்டலம் சாப்பிடுவதால் மூக்கை அடிப்படையாகக் கொண்ட சுவாசப் பிணிகள் அகலும். மூக்கிரட்டைச் சமூலத்தை தினம் இருவேளை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் முற்றிலும் நீங்கி உடல் அழகும் இளமையும் பெறும்.

மூக்கிரட்டை வேரைக் குடிநீராக்கிக் குடிப்பதால் (5 கிராம் முதல் 10 கிராம் வரை) கீல் வாதம்(ஆர்த்ரைட்டிஸ்), இரைப்பு நோய், காமாலை, நீர்க்கட்டு, பெருவயிறு ஆகியன குணமாகும். மூக்கிரட்டை கீரையின் வேரைச் சிதைத்து சிற்றிமணக்கு எண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிக்கட்டி வைத்துக் கொண்டு வெறும் வயிற்றில் உள்ளுக்குக் கொடுக்க கழிச்சலை உண்டாக்கும்.

இதனால் உடலில் தேங்கிக் கிடக்கும் நச்சுக்கள் மலத்துடன் வெளியேறுவதால் உடலில் ஏற்படும் தோல் நோய்கள், நமைச்சல், வாத நோய்கள் அத்தனையும் போக்கும்.இதை உள்ளுக்குக் கொடுக்கும்போது வயது, எடை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உபயோகிப்பது நலம். முதலில் சோதனைக்காக சிறிதளவு கொடுத்துப் பின் அளவைத் தீர்மானிக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்கள் முக்கியமாக பார்க்கவும் ! உடலுறவுக்கு முன்பு சிறுநீர் கழிக்க கூடாது !
Next articleதமிழ் புத்தாண்டு பலன்!12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்!