என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது என வியட்நாமிய பெண்ணொருவர் அனுப்பிய குறுஞ்செய்தியை தொடர்ந்து எசெக்ஸ் கொள்கலனிற்குள் வியட்நாமை சேர்ந்தவர்களின் உடல்களும் உள்ளதாக சந்தேகம் வெளியாகியுள்ளது.
தனது 21 வயது மகள் பாம் தி டிரா மையும் கொள்கலனிற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சுவதாக வியட்நாமை சேர்ந்த நபர் ஒருவர் அந்த நாட்டின் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
சீனா பிரான்ஸ் ஊடாக பிரிட்டனிற்கு சென்ற தனது மகள் காணாமல்போயுள்ளார் என தந்தை தெரிவித்துள்ளார்.
பாம் தனது தாய்க்கு குறுஞ்செய்திகளை அனுப்பினார்,இறுதியாக அனுப்பிய குறுஞ்செய்தியில் தன்னால் சுவாசிக்கமுடியாமல் உள்ளது என தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளதுடன் அந்த குறுஞ்செய்தியின் படமும் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட கொள்கலன் பிரிட்டன் துறைமுகத்தில் காணப்பட்டநேரத்திலேயே அவர் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிக்கவேண்டும்,நான் வெளிநாட்டு செல்ல முயன்றவிதம் வெற்றியளிக்கவில்லை நான் உங்களை நேசிக்கின்றேன்,என்னால் சுவாசிக்க முடியாததால் நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் என அவர் தனது குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வியட்நாமை சேர்ந்த பல குடும்பத்தவர்கள் குறிப்பிட்ட கொள்கலனிற்குள் தங்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சிக்குண்டனரா என்பதை அறிவதற்காக பிரிட்டனில் உள்ள தூதரகத்தை தொடர்புகொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.