வயல் நிலங்களில் காணப்படும் சிறிய செடியே, பழம்பாசி. இதை நிலத்துத்தி என்றும் முன்னோர் அழைத்தார்கள். இந்தச்செடி, சிறிய இலைகளுடன் அடர் மஞ்சள் மலர்களின் மேல்புறம் முட்கள் போன்ற முடிகளுடன் காணப்படும்.
பழம்பாசி மூலிகையின் செடி முழுவதுமே மருத்துவப் பலன்கள் மிக்கது என்றாலும், இலைகள் மற்றும் வேர்கள் சிறந்த மருத்துவ நன்மைகள் மிக்கவை, உடல் உறுப்புகளின் உட்சூட்டைக் குறைக்கும், மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சி, வலிப்பு வியாதிகளை குணமாக்கும், இரத்த அழுத்த பாதிப்புகளை விலக்கும், இரத்த சோகைக்கு சிறந்த மருந்தாகும். ஜுரம் மற்றும் மூச்சு பாதிப்புகளை சரியாக்கும், உடல் எடையைக் குறைக்கவைக்கும். உடல் சூட்டு கட்டிகள், மூல பாதிப்புகளை குணமாக்கும் தன்மை வாய்ந்தது. பெண்களின் வெள்ளைப்படுதல் பாதிப்புக்கு சிறந்த தீர்வாகிறது.
மூல நோய்
பழம்பாசி, ஆண்களையும் பெண்களையும் பாதிக்கும் மூலவியாதியின் பாதிப்புகளை சரிசெய்யும் ஆற்றல்மிக்கது. மூலவியாதி உடல் சோர்வையும், மலச்சிக்கலையும் ஏற்படுத்தி, அன்றாட வாழ்வின் அமைதியை, நிம்மதியை பாதித்துவிடும்.
உள்ளங்கையளவு பழம்பாசி இலைகளை நன்கு அலசி, பாலில் சூடாக்கி, வடிகட்டி, அந்தப்பாலில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து, தினமும் இருவேளை குடித்துவர, மூலச்சூடு குணமாகும்.
கட்டிகள்
சிலருக்கு உடல் சூட்டால் அல்லது தொற்று பாதிப்பால், உடலில் கட்டிகள் ஏற்படும். இந்தக் கட்டிகளை குணமாக்க, பழம்பாசி இலைகளை அரைத்து, அரிசி மாவுடன் கலந்து ஆலக்கரண்டியில் இட்டு சிறிது நீர் ஊற்றி, நல்ல மாவுப்பதத்தில் திரண்டு வந்ததும், ஆறவைத்து பொறுக்கும் சூட்டில், கட்டிகளின் மேல் வைத்து பருத்தித் துணியால் கட்டி இரவில் உறங்கிவர, வலி கொடுத்த கட்டிகள், உடைந்துவிடும்.
வயிற்றுப்போக்கு
உடல்சூட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்கும் பழம்பாசி.
பழம்பாசி இலையை பாலில் கலந்து சூடாக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு சில துளிகள் மற்றும் தேன் கலந்து பிள்ளைகளுக்கு, தினமும் இருவேளை கொடுத்துவர, உடல் சூட்டால் ஏற்பட்ட வயிற்றுக்கழிச்சல், தீரும்.
உடல் சூடு
உடல் உள் உறுப்புகளின் சூடு காரணமாக சிலருக்கு, தாகம், தடுமாற்றம், சோர்வு ஏற்படும். பழம்பாசி இலைகளை தூளாக்கி, அத்துடன் சீரகத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலந்து, தினமும் இதில் தேக்கரண்டியளவு எடுத்து, மோரில் அல்லது நீரில் கலந்து சாப்பிட்டுவர, உடல் உறுப்பு சூடு குணமாகி, உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். இதுவே, உடல் சூட்டினால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலுக்கும் மருந்தாகிறது. உடல் சூட்டினால் கருத்தரிக்க முடியாமல் இருந்த பெண்களின் பாதிப்புகளையும் குணமாக்கவல்லது.
தாது விருத்தி
உடல் சூட்டால் சில ஆண்களுக்கு, சிறுநீர் கழிக்கும்போது அல்லது தூக்கத்தில் உயிரணுக்கள் வெளியேறிவிடும். இதனால் உடலில் தளர்ச்சி, மனதில் அச்சம் ஏற்பட்டு மன அழுத்தத்துடனே, வேலைகளில் கவனமின்றி இருந்து வருவார்கள்.
இதற்கு நல்ல தீர்வை பழம்பாசி அளிக்கும். பழம்பாசி இலைகளை உலர்த்திப் பொடியாக்கி, அத்துடன் வறுத்து இடித்த ஜீரகம் மற்றும் வெந்தயம் இவற்றை ஒன்றாக்கி வைத்துகொண்டு, தினமும் காலையும் மதியமும் ஒரு தேக்கரண்டி அளவு இந்தப் பொடியை எடுத்து மோரில் கலந்து குடித்துவர, நாளடைவில், சிறுநீர் இயல்பாகக்கழியும். உடல்நலம் தேறி, மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.
ஊளைச்சதை
பழம்பாசியை உலர்த்தி இடித்து தூளாக்கி, அதை தினமும் நீரில் அல்லது மோரில் கலந்து இருவேளை சாப்பிட்டுவர, தொங்கும் ஊளைச்சதை கரைந்து,
இரத்த அழுத்த பாதிப்புகளை விலக்கி, இரத்த சோகையையும் குணமாக்கும். நரம்புத்தளர்ச்சி மற்றும் சுவாச கோளாறுகளையும் சரிசெய்யும் தன்மைமிக்கது, பழம்பாசி மூலிகைப்பொடி.
குளியல் பொடி.
உடல் சூட்டினால் சிலருக்கு முகத்தில் தளர்ச்சி தோன்றி, முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். சிலருக்கு தாங்க முடியாத உடல் சூட்டினால், தலைவலி ஏற்பட்டு இன்னல் தரும்.
பழம்பாசி இலைகளை நீர்விட்டு அரைத்து, கெட்டியான திரவப்பதத்தில், தலையில் நன்கு அழுத்தி தேய்த்து ஊறவைத்து, சற்று நேரம் கழித்து குளித்துவர, உடலில் இருந்த சூடு நீங்கி, உடலில் புத்துணர்ச்சி தோன்றும். முகத்தில் இருந்த அசதி, களைப்பு சுருக்கங்கள் நீங்கி, முகம் புத்தெழில் பெறும். அத்துடன் தீராமல் இருந்த தலைவலியும் மறைந்துவிடும்.
புண்கள்
புண்களை ஆற்றும் பழம்பாசி வேர் எண்ணெய் பயன்படுகிறது.
பழம்பாசி மூலிகை வேர்களை சேகரித்து, விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணையில் சூடாக்கி, அந்த எண்ணையை, ஆறாத புண்களில் தடவிவர, புண்கள் விரைவில் ஆறிவிடும்.