அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease) என்பதை வயதான காலத்தில் ஏற்படும் நினைவிழப்பு மற்றும் சிந்தனைத் திறன் இழத்தல் எனவும் சொல்லலாம். ‘முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய்’ எனலாம். இது பொதுவாக 65க்கு மேற்பட்டவர்களுக்கே வரும் நோயாயினும் இது மூளையில் ஏற்படும் நோயே அன்றி, வழமையான வயது முதிர்வதின் தாக்கம் அல்ல.
இது படிப்படியாக ஆரம்பித்து மூளையை நலிவடையச் செய்து மீளமுடியாத நிலைக்குச் செல்கின்றது. ‘மூளை அசதி நோய்’ எனவும் சொல்கிறார்கள் அதுதான் அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease).
இது வரவர தீவிரமடைந்து செல்கிற நோய். மாற்ற முடியாதது. சிகிச்சைகளினால் அது தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியுமே அன்றி, முற்று முழுதாக நிறுத்த முடியாது. எனவே அல்ஸீமர் நோயை ஆரம்பத்தில் கண்டறிய முயலுங்கள்.
இந்த நோயைக் கண்டுபிடிப்பதற்கு முக்கியமாக அறிகுறிகள் தாம் உதவுகின்றன. ஆனால் ஆரம்ப நிலையிலேயே கண்டு பிடிப்பது மிகவும் சிரமமானது.
அல்ஸீமர் நோயின் அறிகுறிகள்;
அண்மையில் நடந்த சம்பவங்களையும், அறிந்து கொண்ட, கற்றுக் கொண்ட விடயங்களையும் மறந்துவிடுவதுதான் அல்ஸீமர் நோயின் மிக முக்கியமான ஆரம்ப அறிகுறி எனலாம்.
மிக நெருக்கமானவர்களின் திருமண நாள், பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களை மறந்து விடுவதும், மிக முக்கிய சம்பவங்களை நினைவில் காப்பாற்ற முடியாததும் இந்நோயின் ஏனைய அறிகுறிகளாகும்.
பெயர்களை மறப்பதும், செய்ய வேண்டிய முக்கிய வேலைகளையும், நிகழ்வுகளையும் மறப்பது அல்ஸீமர் நோயின் முக்கிய அறிகுறி எனலாம்.
ஒரு சிலருக்கு பார்வைக் கோளாறு மட்டுமே அல்ஸீமர் நோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் சிலருக்கு சிரமம் தோன்றும். சிலருக்கு கண்ணில் படும் உருவங்களுக்கு இடையேயான தூரம், நிறவேறுபாடு ஆகியவற்றை வேறுபடுத்தி நிர்ணயிப்பது கஸ்டமாயிருக்கும்.
மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அதனை புரிந்து கொள்வதிலும் அதில் இணைந்து கொள்வதும் இவர்கள் பலருக்கும் முடியாதிருக்கும். தான் பேசிக்கொண்டிருக்கையில் அதனை எவ்வாறு தொடர்வது எனப் புரியாமல் பேச்சை நிறுத்துவார். அல்லது சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லவும் கூடும்.
மனக்குழப்பம், சந்தேகம், மனச்சோர்வு, பீதி, மனப்பதற்றம் போன்றவை மேலோங்கக் கூடும். மிக அற்பமான விடயங்களுக்கும் நிலை ததும்புவராக மாறுவார்.
இத்தகைய அறிகுறிகளில் ஒரு சிலவாவது உங்கள் உறவினருக்கு இருந்தால் அது அல்ஸிமர் நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஏதற்கும் நீங்களாக முடிவெடுக்காது நல்ல மருத்துவரை அணுகுங்கள்.
இது முற்று முழுதாகக் குணப்படத்த முடியாத நோய் என்ற போதும், அது மேலும் தீவிரமாகி வாழ்வை நாசமாக்காது தடுக்க முடியும்.
இந்த நோயை முதல் முதலாக இனங்கண்டவர் ஒரு ஜேர்மன் மருத்துவர். Dr.Alois Alzheimer என்பது அவர் பெயர். அவரது நோயாளி Frau Augste என்பராவார்.