ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு வகை நோயாகும். இதனால் இருமல், மூச்சிரைப்பு, மார்பகம் இறுக்கமடைதல், சுவாசப் பாதை சுருங்குதல், தடைபடுதல் மற்றும் மூச்சு விட சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த ஆஸ்துமா தொந்தரவு இருக்கும் போது உங்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. தீவிர ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும் மருத்துவமனைக்கு செல்வது நல்லது. இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாகும் சூழ்நிலை ஏற்படலாம்.
அழற்சி நோய்
ஆஸ்துமா என்பது ஒரு அழற்சி நோயாகும். இது சுவாச பாதையில் வீக்கத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே அழற்சியை ஏற்படுத்தும் செயல்களில் இருந்து நீங்கள் தள்ளி இருப்பது நல்லது. அந்த மாதிரி அழற்சி தரும் பொருட்கள் எவை என இப்போது பார்க்கலாம்.
தூசிகள்
தூசிகள் எல்லோர் வீட்டிலும் காணப்படும் ஒரு விஷயம். ஆஸ்துமா பாதிப்புக்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே முடிந்த வரை தூசிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். படுக்கை விரிப்புகள், தலையணை, செல்லப் பிராணிகளின் படுக்கை விரிப்புகள், அறைகள் இப்படி எல்லாவற்றையும் முடிந்த வரை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். இதனால் சுவாச பாதையில் அழற்சி வருவதை தடுக்கலாம்.
செல்லப் பிராணிகள்
சில நேரங்களில் செல்லப் பிராணிகளின் முடிகள் கூட ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதற்கு காரணம் செல்லப் பிராணிகளின் முடிகள், சருமம் மற்றும் சிறுநீர், உமிழ் நீரில் உள்ள புரோட்டீன் காரணமாக அமைகிறது. இந்த புரோட்டீன் நீங்கள் தொடும் போதோ, சுவாசிக்கும் போதோ நமது நோயெதிப்பு மண்டலம் ஹிஸ்டமைன் என்ற அழற்சி பொருளை சுரக்கிறது. இதனால் சுவாச பாதையில் அழற்சியை ஏற்படுத்துகிறது.
பூஞ்சை நாற்றம்
பூட்டிய அறைகளையோ அல்லது வீட்டையோ திறக்கும் போது ஒரு வித பூஞ்சை நாற்றம் ஏற்படும். இதனாலும் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டு அழற்சி ஏற்படுகிறது. இதனால் மூச்சு விட சிரமம், இருமல், சுவாசம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் ஈரப்பதம் தான். ஈரப்பதம் பூஞ்சை வளர காரணமாக அமைகிறது. எனவே அறையில் இருக்கும் ஈரப்பதத்தை வெளியேற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
புகைப் பிடித்தல்
புகைப்பிடித்தல் ஆஸ்துமா நோயை உண்டு பண்ணுகிறது. அதுமட்டுமல்லாமல் புகைப் பிடிப்பவர் பக்கத்தில் இருக்கும் போதும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் புகைப்பிடிக்கும் இடத்தில் இருப்பதை தவிருங்கள்.
கரப்பான் பூச்சி
சமையலறையில் காணப்படும் கரப்பான் பூச்சிகளின் கழிவு கூட ஆஸ்துமா நோயை உண்டு பண்ணுகிறது. எனவே கரப்பான் பூச்சிகள் வரும் இடத்தை 2-3 நாட்களாவது சுத்தம் செய்ய வேண்டும்.
மரக்கட்டையை எரித்தல்
மரக்கட்டையை எரித்தல் மற்றும் புற்களை எரித்தல் போன்ற புகையினால் கூட ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுகிறது. ஏனெனில் இந்த புகைத் துகள்கள் சுவாச பாதையில் அழற்சியை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரி புகை வரும் இடங்களில் முடிந்த வரை நிற்காதீர்கள்.
காற்று மாசுபடுதல்
வாகனப் புகை, தொழிற்சாலை புகை போன்றவற்றில் இருந்து வரும் காற்றால் கூட ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதிரியான பகுதிகளில் இருக்கும் போது மாஸ்க் அணிந்து கொள்வது நல்லது.
சைனஸ் பிரச்சனை
அடிக்கடி சளி பிடித்தல், சுவாச பாதையில் தொற்று போன்றவை கூட ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும். இந்த சளி பிரச்சனைகள் சுவாச பாதையில் அழற்சியை ஏற்படுத்துகிறது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சியும் ஆஸ்துமா பிரச்சினையை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. உடற்பயிற்சி செய்யும் போது மார்பகம் இறுக்கமடைதல், இருமல், மூச்சு விட சிரமம் போன்றவற்றை ஏற்படுத்தி விடும். எனவே ஆஸ்துமா இருப்பவர்கள் 5-15 நிமிடங்கள் ஏரோபிக் உடற்பயிற்சி, 30-60 நிமிடங்கள் நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் போதுமானது.
இதர காரணங்கள்
இன்புலன்ஸா, சளி, வைரஸ் தொற்று, அழற்சி, கெமிக்கல்கள், மருந்துகள், மோசமான பருவநிலை, உணவு சுவையூட்டிகள், நறுமணப் பொருட்கள் போன்றவையும் அழற்சியை ஏற்படுத்தும்.