ஆபத்தான ஆயுதங்களை ஈரான் தயாரிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ப் கூறும்போது, ”நவம்பர் 5 முதல் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அனைத்து பொருளாதாரத் தடைகளும் முழு வேகத்தில் செலுத்தப்படும். மேலும் ஈரானின் தவறான அணுகுமுறையால் இன்னும் கூடுதலாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி வழங்கும் ஆபத்தான ஆயுதங்களை ஈரான் உற்பத்தி செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா நீக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஈரானுக்கு எதிரான மிரட்டலை அமெரிக்கா விடுத்து வருகிறது.
முன்னதாக அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.