அதிர்ச்சியில் இருந்த குடும்பத்திற்கு காத்திருந்த அதிஷ்டம்!.. வியப்பில் மூழ்கிய பொலிஸார்!

0
410

அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் ஒன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருமாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் மதுகுமார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை கருவட்டா என்ற இடத்தில் நடக்கும் தனது அண்ணன் மகன் திருமணத்துக்காகக் குடும்பத்துடன் சென்றார்.

போகும் போது வீட்டின் முன் பக்க கதவினை பூட்டாமல் சென்றிருந்தார். திருமணம் முடிந்து இரவு 10.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பிய குடும்பத்தினருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் பின்பக்கக் கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தால், பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தைக் காணவில்லை. யாரோ திருடிச் சென்றுள்ளமை தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த மதுகுமார் குடும்பத்தினர் புதன்கிழமை காலையில் இந்தத் திருட்டு பற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தாங்கள் சந்தேகப்படும் நபர் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தனர். காவல் துறையினர் அந்த சந்தேக நபரை கண்காணிக்கத் தொடங்கி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் கதவைத் திறந்த மதுகுமாருக்கு அதிர்ச்சி. அவர் வீட்டு வாசலில், திருடப்பட்ட தங்க நகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

அருகிலேயே ஒரு கடிதம். மதுகுமார் அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்தார். அது மன்னிப்புக் கடிதம் என்பது தெரிந்தது. மனசாட்சி உறுத்தியதால் திருடிய நகைகளை திரும்ப வைத்தாரா, இல்லை பொலிஸாருக்கு பயந்து அந்த ‘திருடர்’ இப்படி செய்தாரா என்பது தெரியவில்லை.

அதில், ‘என்னை மன்னித்து விடுங்கள். பணக்கஷ்டம் காரணமாக நகைகளைத் திருடிவிட்டேன். இனி இப்படி செய்ய மாட்டேன். தயவுசெய்து எனக்கு எதிராக பொலிஸாரிடம் செல்ல வேண்டாம்’ என்று எழுதியிருந்தது.

இதையடுத்து மதுகுமார் பொலிஸாரிடம் சம்பவத்தை விளக்கி முறைப்பாட்டினை மீளபெற்றுக்கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு இப்படியும் திருடர்கள் இருக்கின்றார்களா என்ற வியப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: