யாழில் ஒருவர் வெட்டிக் கொலை. மகன் படுகாயம். எங்கே செல்கிறது யாழ்ப்பாணம்.
இளைஞர் கும்பலொன்றால் கடத்திச் செல்லப்பட்டு வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர், சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார். அவரது மகன் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாடுகளை களவாடியமையுடன் தொடர்புடைய பிணக்கொன்றினாலேயே குடும்பத்தலைவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கும் பொலிஸார், இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தந்தை, மகன் உறவுள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினர்.
இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாவலர் சாலையைச் சேர்ந்த செல்வநாயகம் இரட்ணபாலசிங்கம் (வயது – 38) என்பவரே உயிரிழந்தார். அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
யாழ்ப்பாணம் நாவலர் சாலையில் உள்ள குடும்பத் தலைவரின் வீட்டில் சம்பவம் இடம்பெற்றது. நான்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற எட்டுப்பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்களைச் சரமாரியாக தாக்கியது. பின்னர் குடும்பத்தலைவர் மீது வாளால் வெட்டியது. அவரது மகனையும் அந்தக் கும்பல் வெட்டியது.
படுகாயமடைந்த நிலையில் அவரது மகனான இரட்னபாலசிங்கம் ரஜீவன்(வயது – 18) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குடும்பத் தலைவரை வாள்வெட்டுக் கும்பல் காயத்துடன் கடத்திச் சென்றுள்ளது.
நல்லூர் சங்கிலியன் பகுதியில் அவரைப் போட்டுவிட்டு வாள்வெட்டுக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. வெட்டுக்காயங்களுடன் குருதி வெள்ளத்தில் அவர் கிடந்துள்ளார். சாலையில் பயணித்தவர்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அங்கு சென்ற பொலிஸார் சாலையில் பயணித்தவர்களுடன் இணைந்து படுகாயமடைந்து கிடந்தவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்றுக் காலை சேர்த்திருந்தனர்.
சிகிச்சை பலனளிக்காது அவர் சில மணிநேரத்தில் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கொலைச் சந்தேகத்தில் நல்லூரடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் இருவரையும் கைது செய்து செய்துள்ளனர். இருவரும் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். சம்பவ இடத்துக்கு நீதிவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். அத்துடன், யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இறந்தவரின் சடலத்தை பார்வையிட்ட நீதிவான், உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.