ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அவரது குடும்பத்தினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் விசேட பேச்சுவார்த்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அந்த பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உத்தியோகபூர்வ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், இதனை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும் எந்த சந்தர்ப்பத்தில் அப்படியான தீர்மானங்களை எடுக்க வேண்டாம் எனவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டால், நாட்டு மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் ஐக்கிய தேசிய முன்னணி உட்பட ஜனநாயகத்திற்காக போராடும் தரப்பினர் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த நேரத்திலும் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் நடக்கும் அரசியலமைப்பு விரோதமான நடவடிக்கைகள் மட்டுமல்லாது ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தலைவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சில தீர்மானங்களை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு பொறுப்பானவர்களின் சொத்துக்களை தடை செய்தல், பயணத் தடை விதித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த விடயங்களை பரிந்துரை செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.