‘மெர்சல்’ படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன தெரியுமா?
‘மெர்சல்’ படத்தலைப்பில் நிலவும் பிரச்சினை என்னவென்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜேந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
‘மெர்சலாயிட்டேன்’ என்ற தனது படத்தின் பெயரில் இருந்தே மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு வைத்துள்ளார். எனவே ‘மெர்சல்’ படத்தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று (செப்டம்பர் 22-ம் தேதி) விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
‘மெர்சல்’ படத்தலைப்பில் உள்ள பிரச்சினை என்னவென்று, தயாரிப்பாளர் சங்கத்துக்கு ராஜேந்திரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ஏ.ராஜேந்திரன் என்கிற நான் ‘மெர்சலாயிட்டேன்’, ‘நான் மெர்சலாயிட்டேன்’ என இருபெயரில் திரைப்பட தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். மேலும், ‘மெர்சல்’ என இன்னொரு தலைப்பை பதிவு செய்ய முயலும் பொழுது ‘மெர்சல்’ எனது ‘மெர்சலாயிட்டேன்’ என்ற ஒரே வார்த்தையில் உள்ளதால் அது சேம்பர், கில்டு மூலமாகவோ ‘மெர்சல்’ என்கிற வார்த்தை பதிவு செய்ய முடியாது. தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி இல்லாமல் யாரும் பதிவு செய்ய முடியாது. எனவே, மூன்று தலைப்பை பதிவு செய்ய வேண்டியதில்லை எல்லாமே ஒரே தலைப்புதான் என கூறினீர்கள். சேம்பர், கில்ட் என எல்லோரிடமும் NOC வாங்கி EC Memberகள் கையெழுத்திட்டு எங்களுக்கு தலைப்பை கொடுத்தீர்கள். தற்போது வரை எங்கள் திரைப்படத்தின் தலைப்பிற்காக நான் சந்தா தொகையை கட்டி வருகிறேன். அதன்படி இந்த தலைப்பை 27.01.2018 வரை எங்கள் நிறுவனத்திற்குத்தான் உரிமம் உண்டு.
தமிழ்நாடு திரைப்படம் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த வாக்குறுதியை ‘மெர்சல்’ தலைப்பைக் கேட்டு நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் அவர்கள் 2016 ஆண்டு இந்த தலைப்பை சேம்பரில் பதிவு செய்ய முயலும்பொழுது சேம்பரிலிருந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பம் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் NOC நிராகரிக்கப்பட்டது. அதை எழுத்துப்பூர்வமாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இந்த தலைப்பு AR FILM FACTORY என்கிற நிறுவனத்திற்குத்தான் சொந்தம் என்று கூறியிருக்கிறீர்கள். எங்கள் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக யாருக்கும் ‘மெர்சல்’ தலைப்பை கொடுக்கவில்லை
நடிகர் விக்ரமின் ‘இருமுகன்’ படத்திற்காக ‘மெர்சல்’ தலைப்பைக் கேட்டபொழுது அப்பொழுதும் NOC தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கவில்லை. நிராகரிக்கப்பட்டது. நாங்களூம் கொடுக்கவில்லை நிராகரித்துவிட்டோம்.
தற்போது 20/06/2017 அன்று TSL நிறுவனம், விஜய் நாயகனாக நடிக்க இயக்குநர் அட்லீ ‘மெர்சல்’ என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யவில்லை. சவுத் இந்தியன் சேம்பரில் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து NOC வாங்காமல் TSL நிறுவனம் ‘மெர்சல்’ என்கிற தலைப்பில் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக 21/06/2017 அன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று ஞானவேல்ராஜா அவர்களிடம் என்னுடைய பிரச்சனையை கூறி எங்கள் திரைப்படத்தின் எல்லா விவரங்களையும் ஒப்படைத்தேன். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் எனது புகாரை கொடுத்ததிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகியும் தற்போதுவரை எனக்கு பதில் தரவில்லை. எங்களுக்கு இந்த புகாரின் பெயரில் இதுவரை தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று எழுத்துபூர்வமாக பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
TSL நிறுவனத்திற்கு தலைப்பு சம்பந்தமாக நாங்கள் NOC கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் தற்போது மீண்டும் ‘மெர்சல்’ தலைப்பில் 20.08.2017 அன்று பாடல்களை வெளியிடப்போவதாக எல்லா பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.
மேலும் ‘மெர்சல்’ என்கிற தலைப்பு வைத்தால், என்னுடைய படம் பாதிக்கப்படும் பெரும் பணம் முதலீடு செய்திருப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும். தயாரிப்பாளர் சங்கம் சிறு தயாரிப்பாளர்களின் நியாயத்தை கேட்க வேண்டும். ராமசாமி என்கிற நபர் தங்களது சுயநலத்திற்காக சேம்பர் சங்கத்தை பயன்படுத்திக் கொள்கிறார்களா. தற்போது அவர் சேம்பரில் செயலாளராக உயர்பதவியில் இருக்கிறார். 2016-ல் தியாகராஜனுக்கு தலைப்பைக் கொடுக்காத இதே சேம்பர் TSL தயாரிப்பாளர் ராமசாமி அவர்களுக்கு சேம்பர் தன்னிச்சையாக உரிமை கொடுத்திருக்கிறதா?
நான் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு உறுப்பினராக இருந்து சங்கத்திற்கு நேரில் வந்து புகார் கடிதம் கொடுத்தும் எனது திரைப்படத்தின் தக்க ஆவணங்களை கதிரேசன், ஞானவேல்ராஜா ஆகியோரிடம் ஒப்படைத்து சென்றேன். ஆயினும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் ஒரு தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினருக்கு சங்கத்திலிருந்து யாரும் குரல் எழுப்பவில்லை. தயாரிப்பாளர் சங்கம் இதுவரை TSL நிறுவனத்தின் மீது தன்னிச்சையாக செயல்பட்ட சேம்பர் மீதோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அவர்களுக்கு கனிவான வேண்டுகோள். இதற்கு முன்பு இதுபோல் கில்டில், சேம்பரில் தலைப்பை பதிவு செய்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் நாங்கள் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக ஆகி ஒரு சிறிய முதலீட்டில் படத்தை துவங்கிய பட்சத்தில் 100 திரைப்படம் தயாரித்த பெரிய நிறுவனமான TSL நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் NOC பெறாமல் சேம்பரில் தன்னிச்சையாக செயல்பட்டிருக்கிறது. எங்களது சிறிய படைப்பை காப்பாற்றிக் கொள்ள உங்களைப் போல நியாயத்திற்கு மட்டும் குரல் கொடுக்கிற நீங்கள் எங்களைப் போல வளரும் நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்தப் புகாரை நியாயமான முறையில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து தீர்ப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.