மகாமசானம் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai Magamasanam!

0

மகாமசானம் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai Magamasanam!

சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும்படியாகப் பட்டணம் மாறி விடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப் போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகிவிட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது.

ஆபீஸிலிருந்து ‘எச்சு’ப் போய் வருகிறவர்கள், இருட்டின் கோலாகலத்தை அநுபவிக்கவரும் அலங்கார உடை தரித்தவர்கள். மோட்டாரில் செல்லுவதற்கு இயலாத அவ்வளவு செயலற்ற அலங்கார வேஷ வௌவால்கள் எல்லாம்  ஏகமேனியாக, ‘எல்லாம் ஒன்றே’ என்று காட்டும் தன்மை பெற்றவர்கள் போல் இடித்துத் தள்ளிக்கொண்டு அவரவர் பாதையில் போவார்கள். அன்றும் அம்மாதிரியே போய்க்கொண்டிருந்தார்கள்.

‘ஒற்றைவழிப் போக்குவரத்து’ என்ற ஸஞ்சார நியதி வந்ததிலிருந்து உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களின் உச்சியின் மேல் நின்று கொண்டு பார்த்தால் அங்கே நாகரிகத்தின் சுழிப்புத் தெரியும். கரையைப் பீறிட்டுக் கொண்டு பாயும் வெள்ளத்தை அணைக்கட்டின்மேல் இருந்து கொண்டு பார்த்தால் எப்படியோ, அப்படி இருக்கும்.

நான் சொல்ல வந்த இடமும் அதுதான். மவுண்ட் ரோட் ரவுண்டாணா. மலைப்பழ மாம்பழக் கூடைக்காரிகளின் வரிசை. அவர்களுக்குப் பின்புறம் எச்சில் மாங்கொட்டையைக் குதப்பித் துப்பிவிட்டு, சீலையில் கையைத் துடைத்துக் கொள்ளும் ‘மெட்ராஸ் பறச்சிங்கோ’, கைத்தடியோடு ‘சிலுமன்’ கொடுத்து உலாவிக்கொண்டிருக்கும் காபூலிவாலா, முகம்மதியப் பிச்சைக்காரன், நொண்டிப் பிச்சைக்காரன், குஷ்டரோகப் பிச்சைக்காரன், ராத்திரித் ‘தொழிலுக்கு’த் தயாராகும் யுவதி – பாதையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு, நிம்மதியாகச் சீவிச் சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் – அப்புறம் நானாவித, “என்ன சார் ரொம்ப நாளாச்சே”, “பஸ் வந்துட்டுது”, “ஏறு” என்கிற பேர்வழிகள் எல்லாம். அவசரம், அவசரம், அவசரம்.

அப்பொழுது அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்துச் சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.

சாவதற்கு நல்ல இடம். சுகமான மர நிழல். வெக்கை தணிந்து அஸ்தமனமாகிவரும் சூரியன். “ஜே ஜே” என்ற ஜன இயக்கம். ராஜ கோலாகலம் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்பொழுது அவன் செத்துக் கொண்டிருந்தான்; சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.

ஜனங்கள் அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது; சிலர் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அவன் கிழட்டுத் துருக்கப் பிச்சைக்காரன். தாடி மிகவும் நரைத்து விட்டது. மேலே அழுக்குப் பிடித்த கந்தை; கையையும் காலையும், மூப்பு போஷணையின்மை இரண்டும் சேர்ந்து சூம்பவைத்துவிட்டன. கால், காய்த்துப் போன கால்.

அவன் பக்கத்தில் தலைமாட்டில் இன்னும் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்து கொண்டிருந்தான். தகரக் குவளையில் தண்ணீரை எடுத்துக் கிழவனுடைய தலையைத் தூக்கி ஒரு மிடறு தண்ணீர் கொடுக்க முயன்றும் முடியாமையால் வாயை மட்டிலும் நனைத்தான். தன்னுடைய கைகளைத் தலைக்குக் கீழ்க் கொடுத்துத் தூக்க முயன்றான்.

படுத்துக் கிடந்த கிழவன், அதாவது செத்துக் கொண்டிருந்த கிழவன், தன் பக்கத்தில் காருண்ய ஸ்தல ஸ்தாபனத்தார் நிதுத்தி வைத்திருந்தார்களே, அந்தத் தகரப் பீப்பாய், அதை, பிடித்தபடியே தலையை நிமிர்த்த முயன்றான். அவன் கண்களில் ஒளி மங்கி விட்டது. அவன் உதடு நீலம் பூத்துவிட்டது. அவன் கதையெல்லாம் இன்னும் சிறிது நேரத்திற்குள் சம்பூர்ணமாகிவிடும்.

ஆனாலும் அவன் அந்தத் தகரப் பீப்பாயைப் பிடித்த பிடிப்பை விடவில்லை. பிடிப்பில் ஓர் ஆறுதல் இருந்தது; பலம் இருந்தது. பக்கத்தில் யாரோ தண்ணீர் கொடுக்கிறார்கள் என்ற பிரக்ஞை இருந்ததாக மட்டும் தெரியவில்லை. தண்ணீர் வந்தது; குடிக்க வேண்டும்; அவ்வளவுதான் அவன் மனதில். அதற்குமேல் நினைக்க விருப்பமில்லை; தேவையில்லை; திராணி இல்லை.

அப்போது டிராம் வண்டி ஏறுவதற்காக இரண்டு பேர் வந்தார்கள். இரண்டு பேரும் நின்றார்கள். ஆனால் டிராம் வரவில்லை. இருவரில் ஒருவர் தகப்பனார்; முப்பது வயசு. இரண்டாவது நபர், சிறு பெண் குழந்தை. நாலைந்து வயசு இருக்கும். அவரைப் பார்த்தால் தம் குடும்பத் தேவைகளைத் திருப்தி செய்துகொள்வதற்குக் கஷ்டப்படுபவராகத் தெரியவில்லை. குழந்தை சாதாரணக் குழந்தை; ஆனால், தாய் சிறிதே கவனமுள்ளவள் என்பது தெரியும்படி, சுத்தமாக, படாடோ பம் இல்லாமல் அலங்கரித்து விடப்பட்டிருந்தது.

குழந்தையும் தகப்பனாரும் டிராமுக்குக் காத்துக் கொண்டு நின்றார்கள். குழந்தை அவருடைய ஆள்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டு நின்றது. நின்று கொண்டிருந்தவர்களுக்கு எதிர்ச் சாரியிலுள்ள கூடைக்காரி வைத்திருந்த மாம்பழம் நல்லதாகத் தெரிந்தது.

“குஞ்சு, நீ இங்கேயே நிக்கணும். அப்பா அந்தப் பக்கமாப் போய் ஒனக்கு மாம்பழம் வாங்கிண்டு வருவாளாம்” என்றார் அவர்.

“ஆகட்டும்” என்றது குழந்தை.

“நீ ரோட்டிலே இறங்கி வரவே படாது, தெரியுமா? வந்தாப் பழமில்லை” என்றார் அவர். ‘குழந்தையைத் தனியே விடக்கூடாது’ என்று அவர் மனசு குறுகுறுத்தது.

“இங்கியே நிக்கறேன் அப்பா” என்று கையடித்துக் கொடுப்பது போல அவரை அந்தப் பக்கம் போகும்படித் தூண்டியது குழந்தை.

மாம்பழ வேட்கையில் அவர் குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு ரஸ்தாவைக் குறுக்காகத் தாண்டி எதிர்ப்புறமாகச் சென்றார்.

குழந்தை தைரியமானது, இதற்கு முன் இவ்வாறு நின்று பழகியது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் பயத்தில் அப்பாவைத் தொடர்ந்த கண்கள் அப்புறம் பராக்குப் பார்ப்பதில் ஒன்றிவிட்டன.

சிவப்பு மோட்டார் ஒன்று அதன் கண்களைக் கவர, அந்தப் பக்கமாகவே பார்த்துக் கொண்டு நின்றது. அவசரப்பட்ட ஜீவன் ஒன்று குழந்தையைக் கவனிக்காமல் நடந்து போகையில் இடித்துவிட – அதன் மனம் எந்த உலகில் ஓடுகிறதோ – குழந்தை தள்ளாடியது. இடிபடாமல் நிற்பதற்காகச் சிவப்பு மோட்டார் பார்க்கும் ஆசையையும் துறந்து நடைபாதை ஓரத்தில் உள்ள சுவர் அருகில்போய் நின்று கொண்டது. சுவரில் ஒன்றி நின்று சாய்ந்து கொண்டு தன்னுடைய பைக்குள் கைபோட்டபடி நாலு திசைகளிலும் சுற்றிப் பார்த்தது.

செத்துக் கொண்டிருக்கும் அக்கிழவனும் அவனுடைய சாவுக்கு உதவி செய்துகொண்டிருக்கும் வேறு ஒருவனும் அதன் கண்ணில்பட, ‘அதென்ன வேடிக்கை?’ என்று பார்க்கத் தயங்கித் தயங்கி அவர்கள் பக்கம் நெருங்கியது.

‘பால் குடிக்க மாட்டேன்’ என்றால் அம்மா தன்னை மட்டும் வற்புறுத்தி டம்ளரில் வைத்துக் கொண்டு தன்னிடம் மல்லுக்கட்டி அதைப் புகட்டுவதும், அப்பா, ‘வேண்டாம்’ என்றால் பேசாதிருந்து விடுவதும் அதற்குத் தெரியும். பெரியவர்களுக்கு ‘வேண்டாம்’ என்று சொல்ல உரிமையுண்டு; அம்மாவானாலும் அவருக்குப் பயப்படுவாள் என்பது அந்தக் குழந்தையின் சித்தாந்தம். அதற்கு அது வேடிக்கையாக இருந்தது. பெரியவர்களுக்கு டம்ளரில் புகட்டுவதா என்று அதற்கு ஆச்சரியம்.

இந்த வேடிக்கையைப் பார்க்க அந்த இரண்டு அநாதைகளின் அருகில் சென்றது குழந்தை. கிழவனுடைய தலைப் பக்கம் நின்றது.

இளைய பிச்சைக்காரன் மறுமுறையும் கிழவன் தொண்டையை நனைக்க முயன்று கொண்டிருந்தான். அவனுக்குக் கைப்பழக்கம் போதாது. அவன் ஊற்ற முயன்றபோது, ஒன்று அதிகமாகக் குபுக்கென்று விழுந்து கழுத்தை நனைத்தது; அல்லது டம்ளரிலிருந்து விழவேயில்லை.

கிழவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான்.

குழந்தை நீரைப் பருகுவதற்கு வாயைக் குவிய வைப்பதுபோல வைத்துக் கொண்டு, தன்னுடைய கையில் உள்ள கற்பனை டம்ளரைப் பிடித்தபடி, “மெதுவா, மெதுவா” என்றது.

தண்ணீர் வார்த்தவன் ஏறிட்டுப் பார்த்தான். “அம்மா, நீ இங்கே நிக்கப்படாது; அப்படிப் போயிரம்மா” என்றான்.

“ஏன்?” எனது குழந்தை.

“இவுரு சாவுறாரு” என்றான் பிச்சைக்காரன்.

“அப்படீன்னா?”

“சாவுறாரு அம்மா, செத்துப்போறாரு” என்று தலையைக் கொளக்கென்று போட்டுக் காண்பித்தான்.

அது குழந்தைக்கு நல்ல வேடிக்கையாகத் தோன்றியது.

“இன்னும் ஒருதரம் அப்படிக் காட்டு” என்றது.

கூட்டம் கூடிவிடக் கூடாது’ என்ற பயத்தில் பிச்சைக்காரன் வாயைப் பொத்திக் கொண்டு கையை மட்டும் காண்பித்தான்.

கிழவனுடைய தலைமாட்டில் அவனுடைய அந்திமக் கிரியைக்காக என்பதைக் குறிக்க இரண்டு தம்படிகள் போடப்பட்டிருந்தன. அவை குழந்தையின் கண்களில் பட்டன.

“பட்டாணி வாங்கிக் குடேன்” என்று படுத்துக் கிடந்தவரைச் சுட்டிக் காட்டியது.

தனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை அதற்கு.

எங்கே பெரியவர் யாராகிலும் வந்து தன் மீது மோசடிக் குற்றம் சாட்டப்போகிறார்களோ என்ற பயத்தில் நாலு பக்கமும் சுற்றிப் பார்த்துக் கொண்டு, “ஒங்கிட்டே துட்டு இருக்கா?” என்று கேட்டான் பிச்சைக்காரன்.

“இந்தா, ஒரு புதுத் துட்டு” என்று குழந்தை அவன் வசம் நீட்டியது.

அவன், குழந்தை கொடுத்ததைச் சட்டென்று வாங்கிக் கொண்டான். அது ஒரு புதுத் தம்படி. கோடீசுவரர்கள் அன்னதான சமாஜம் கட்டிப் பசிப்பிணியைப் போக்கிவிட முயலுவதுபோல், கடலில் காயம் கரைத்து வாசனையேற்றிவிட முயலுவதுபோல் குழந்தையும் தானம் செய்துவிட்டது.

பஞ்சடைந்த கண்ணோடு கிழவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான். ஜனங்கள் போய்க் கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் அவசரமாகப் போய்க்கொண்டிருந்த நபர் ஒருவரின் கையிலிருந்து ஓரணாச் சிதறிக் கீழே விழுந்தது. அது கூட நினைவில்லாமல் அவரும் நடந்து கொண்டு கூட்டத்தில் மறைந்தார். அவ்வளவு அவசரம். உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் அதைக் கவ்வியெடுத்தான். ஒருவரும் பார்க்கவில்லையேயென்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்.

“நீ போம்மா” என்று குழந்தையைப் பார்த்து மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்த்தான்.

குழந்தை, “மாட்டேன்” என்று காலைப் பரப்பிக்கொண்டு நின்றது. முகத்தை வலித்து ‘அழகு’ காட்டியது.

“பாவா, கொஞ்சம் பாலு வாங்கியாறேன்” என்று சொல்லிக் கொண்டு இளம் பிச்சைக்காரன் எழுந்து எதிர்ச்சாரி ஓட்டலை நோக்கி நடந்தான்.

இது கிழவன் காதில் படவில்லை. அவன் தகரப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருந்தான்.

குழந்தைக்கு அவனை நன்றாகப் பார்க்க முடிந்தது. அருகில் போய் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தது. இப்பொழுது விரட்டுவதற்குச் ‘சின்னப் பூச்சாண்டி’ இல்லையல்லவா? தனக்குப் பக்கத்தில் குழந்தை நிற்பது கிழவனுக்குப் பிரக்ஞை இல்லாததால் தெரியவில்லை. அவன் ஓட்டைப் பீப்பாயைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவனும் ஒரு பெரிய “ஓட்டை ஒடசல்” ஜந்துதானே! குழந்தைக்கு அவனுடைய மூஞ்சி, தாடி, அவன் வாயைத் திறப்பது எல்லாம் புதுமை.

அவனுடைய நீலம் பார்த்த உதட்டில் ஓர், ஈ வந்து உட்கார்ந்தது; இரண்டாவது ஈ வந்து உட்கார்ந்தது; அதை ஓட்ட அவன் வாயைத் திறந்து உதட்டைக் கோணுவது குழந்தைக்கு வேடிக்கையாக இருந்தது. என்ன நினைத்ததோ மெதுவாகப் “பாவா” என்று இளம்பிச்சைக்காரனைப் போலக் கூப்பிட்டுப் பார்த்தது. உள்ளுக்குள் பயம், பூச்சாண்டி எழுந்து உட்கார்ந்து கொள்ளுமோ என்று.

படுத்துக் கிடந்தவன் கண்கள் விரியத் திறந்திருந்தன; கண்ணின் மணியின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்து.

“என்னடி, அங்கே போய் நிக்கறே; ஒன்னை எங்கெயெல்லாம் பார்க்கிறது?” என்ற ஓர் அதட்டல் கேட்டது. பேரம் தர்க்கமாகி, தம் கணக்குக்குக் கூடைக்காரியை ஒப்புக் கொள்ளவைத்து இரண்டு மாம்பழங்களை வாங்கி வந்தவரின் நியாயமான கோபம் அது.

“இல்லேப்பா, அது பாவாப் பூச்சாண்டி; பாத்துண்டிருந்தேன்” என்றது குழந்தை ஓடி வந்து கொண்டே.

சிலர் மட்டும் ஏறிட்டுப் பார்த்தார்கள்.

குழந்தையைத் தூக்கிக் கொண்டார் அவர்; அது பழத்தைத் தூக்க முடியாமல் தூக்கி மோந்து, “வாசனையா இருக்கே!” என்று மூக்கருகில் வைத்துத் தேய்த்துக் கொண்டது.

எழுத்தாளர்: புதுமைப்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉணர்ச்சியின் அடிமைகள் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Unarsiyin Adimaikal!
Next articleராமனாதனின் கடிதம் புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Ramanathanin Kaditham!