ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டு பிறகு கஷ்டப்படுவதை விட, தொடக்கத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் பாதுகாப்பான, வசதியான ஹாஸ்டல் கிடைக்கும்தானே? அப்படி நல்ல ஹாஸ்டலைத் தேர்ந்தெடுக்க சில யோசனைகள்!
ஊருவிட்டு ஊருவந்து புதிதாக வேலையில் சேரும் ஒர்க்கிங் வுமன்களே… கல்லூரி முடிந்து கோச்சிங் கிளாஸுக்காக சிட்டிக்கு வந்திருக்கும் டீன்களே… உங்களுக்கான ஹாஸ்டலைத் தேர்ந்தெடுக்க சில யோசனைகள்…
நீங்கள் சேரும் கோச்சிங் கிளாஸ்/ அலுவலகத்தை முதலிலேயே தொடர்புகொண்டு அவர்களிடம் ஹாஸ்டலை ரெஃபர் செய்யச் சொல்லலாம். நாமே தேடுவதை விட, அனுபவம் உள்ளவர்களிடம் கேட்பது நேரத்தை மிச்சப்படுத்தும். அப்படி வழி இல்லையெனில் கூகுளை ஹாஸ்டலின் அட்ரஸ், ஃபோன் நம்பர் எடுக்க மட்டும் பயன்படுத்துங்கள்.
கூகுளை அவர்கள் பதிவுசெய்திருக்கும் படங்களைக் கொண்டு எப்போதும் ஹாஸ்டலைத் தேர்வு செய்யாதீர்கள். சிங்கிள் ரூம், முதல் ஐந்து பேர் ஷேரிங் வரை ஏகப்பட்ட ரகங்களில் உங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தாற் போல ரூம்கள் கிடைக்கும். நீங்கள் இரவு தனியே தூங்க பயப்படுகிறவர் என்றால், நாலைந்து பேர் இருக்கும் ரூமை தேர்ந்தெடுக்கலாம். ஒன்றிரண்டு பேர் ஊருக்கு சென்றால்கூட யாரேனும் துணைக்கு இருக்க இது உதவும்.
உங்களது ரூம்மெட்ஸ் யாரென்றும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் படிக்கும் மாணவி என்றால், மாணவிகள் இருக்கும் அறையை தேர்வு செய்யுங்கள். ஒர்க்கிங் உமன்கள் ரூம்களில் படிப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும். அதேபோலதான் ஒர்க்கிங் உமன்களும்… படிக்கும் மாணவிகள் இருந்தால் இரவு நெடுநேரம் லைட் போட்டுப் படிப்பார்கள்.
ஹாஸ்டல் உரிமையாளரிடம் கேட்டு தெளிவுபெற வேண்டியவை:
ஃப்ரீ wifi உண்டு என்று குறிப்பிட்டிருந்தால் அது நடைமுறையில் உள்ளதா, குடிநீருக்கு நாமே கேன் வாங்கிக்கொள்ள வேண்டுமா, அல்லது அவர்கள் தருவார்களா, சாப்பாடு போடும் நேரம் என்ன, காலையிலேயே மதியத்துக்கான சாப்பாடு கொடுப்பீர்களா, கரண்ட் பில் வாடகையுடன் வருமா, அல்லது தனியே கட்டவேண்டுமா…
இரவு குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்துவிட வேண்டும் என்று வரைமுறை உள்ளதா, அப்படி என்றால் எத்தனை மணி, அதேபோல், காலையில் எத்தனை மணிக்குக் கதவுகளைத் திறப்பீர்கள் (நீங்கள் ஊரில் இருந்து வருவதற்கு இந்த நேரம் மிகவும் அவசியம்) இதில் சிலவற்றை, அவர்களே கூறுவார்கள். அவர் கூறமறந்த விஷங்களை நீங்கள் மறக்காமல் கேட்டு தெளிவு பெறுவது அவசியம்.
நீங்கள் நேரில் பார்த்துத் தெளிவுபெற வேண்டியவை:
ஹாஸ்டலில் உணவின் தரம் எப்படி இருக்கும், உணவு லிமிட்டட் தானா, இந்த இடம் பாதுகாப்பானதுதானா, தண்ணீர் எப்போதும் வருமா, இல்லை குறிப்பிட்ட நேரம்தானா, என்று ஹாஸ்டலில் இருக்கும் மற்றவரிடம் கேளுங்கள். முடிந்தால் யாருடைய நம்பரையாவது பெற்றுக் கொண்டு, பிறகு அனைத்து விஷயங்களையும் கேட்டால் இன்னும் நல்லது.
ஏரியா எப்படி?
நீங்கள் செல்லவிருக்கும் அலுவலகம்/கோச்சிங் செண்டருக்கு அருகிலேயே ஹாஸ்டல் பார்ப்பது நல்லது. அப்படி கிடைக்கவில்லை என்றால், பஸ்ஸ்டாப் அருகில் , ஷேர் ஆட்டோக்கள் வரும் ஏரியாவில் ஹாஸ்டல் பாருங்கள். மளிகைக்கடை, மெடிக்கல் ஷாப்புக்கு அதிகம் அலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல திங்கட்கிழமை காலை ஊரிலிருந்து வருவற்கு ஏற்ற இடமாகப் பாருங்கள்.
பஸ்ஸ்டாப்பில் இருந்து இறங்கி நான்கு தெரு உள்ளே செல்லவேண்டும் என்பது போன்ற இடங்களை தேர்வு செய்யாதீர்கள். பஸ் இல்லையென்றாலும், ஆட்டோவில் விடியற்காலை 4 மணிக்கும் பாதுகாப்பாகச் செல்லலாம் என்பது போல ஏரியா இருக்கவேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு முறை ஊருக்கு சென்று திரும்புவது சிக்கலாகிவிடும். கூடவே அருகில் எங்கே போலீஸ் ஸ்டேஷன், ஹாஸ்பிடல் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
புதிய ஊர், புதிய வேலை, படிப்பு என்று வரும் உங்களுக்கு ஹாஸ்டல் தொல்லையாக இருந்தால் ஹோம் சிக் வந்து, நீங்கள் வந்த விஷயத்தையும் செய்யவிடாமல் தடுத்துவிடும்… ஹாஸ்டலில் சேர்ந்துவிட்டு பிறகு கஷ்டப்படுவதை விட, தொடக்கத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் ஹாஸ்டல் லைஃபும் நல்லா இருக்கும்… !