முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தும், தமிழக அரசினது சமூக நலத்திட்டங்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையிலான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ள காரணத்தினால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் அதிமுகவினர்.
தமிழகம் முழுவதும் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டிருந்த திரையரங்குகள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், விஜய் பேனர்களை சேதப்படுத்தியதுடன் சில இடங்களில் திரையரங்குகளையும் அடித்து நொறுக்கினர். கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சர்கார் படத்திலுள்ள சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டு மீண்டும் சென்சார் செய்யப்பட்டுள்ளது சர்கார் திரைப்படம்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது விஜய் ரசிகர்கள் அரிவாளுடன் அதிமுக அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் காட்சி. குறிப்பிட்ட காணொளியில் பேசியுள்ள இரு விஜய் ரசிகர்கள், அதிமுகவினரின் உயிர் விஜயின் கைகளில் இருப்பதாகவும், அவர் கண் அசைத்தால் அதிமுகவினரை தொலைத்துவிடுவோம் எனவும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த காட்சி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.