கும்பம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !

0

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
வெள்ளை உள்ளமும், நெறி தவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த விகாரி ஆண்டு உங்களுக்கு நற்பலனை ஏற்படுத்தும் ஆண்டாகவே அமையும். ஆண்டின் முற்பாதியில் குரு 10-ல் சஞ்சரித்தாலும் சனி, கேது லாபஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். திருக்கணிதப்படி வரும் ஐப்பசி மாதம் 19-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் 05-11-2019 (வாக்கியப்படி ஜப்பசி 12-ஆம் தேதி) முதல் குரு பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது.

திருமண வயதை அடைந்தவர்களுக்கு எதிர்பார்த்த வரன்கள் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன் பொருள் சேர்க்கையும் அமையும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தொட்டதெல்லாம் துலங்கும். தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தி பெருகும். புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை நிலவும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சி அளிக்கும். எதிர்பார்க்கும் உயர்பதவிகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுகவாழ்வு சொகுசு வாழ்வுக்கு பஞ்சம் ஏற்படாது.

குடும்ப பொருளாதார நிலை
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

உத்தியோகம்
பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும்.

தொழில் வியாபாரம்
பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். புதிய கிளைகளை நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சினைகளும் தீர்வடையும். இதுவரை இருந்து வந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளால் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.

அரசியல்
பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறுசிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் மறைமுக வருவாய்களும் பெருகும். பத்திரிக்கை நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிட்டும். கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும்.

பெண்கள்
உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும்.

மாணவ- மாணவிகள்
மாணவ- மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

மாதப்பலன்

சித்திரை
மாதகோளான சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் நினைத்தது நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலர் அசையும், அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். முருகப் பெருமானை வழிபடவும்.

வைகாசி
லாப ஸ்தானமான 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 4-ல் சூரியன் சஞ்சா£ரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்துக் கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூமி, நிலம், வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உற்றார் உறவினர்கள் தேவையற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சற்று வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். முருகனை வழிபடுவது நல்லது.

ஆனி
ராசிக்கு 4-ல் சுக்கிரன், 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனை உண்டாக்கும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். குடும்பத்தில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆடி
ஜென்ம ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய், 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வது அனுகூலமான அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடையே இருந்து வந்த பகைமை விலகி ஒற்றுமை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

ஆவணி
ராசிக்கு 11-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியம் நடைபெறுவதில் சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்தால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். சிவனை வழிபடவும்.

புரட்டாசி
ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் 11-ல் சனி, கேது சஞ்சாரம் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப்பின் நல்ல வரன்கள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அசையும் அசையா சொத்துகளில் உள்ள வம்பு வழக்குகள் சற்று இழுபறி நிலையில் இருக்கும். சிவனை வழிபடவும்.

ஐப்பசி
ஜென்ம ராசிக்கு 9, 10-ல் புதன், சுக்கிரன் 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் கிட்டும். கூட்டாளிகளும் அனுசரணையாக இருப்பார்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். 19-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

கார்த்திகை
உங்கள் ராசிக்கு 11-ல் குரு, சனி, கேது 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துகள் சேரும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலர் நினைத்தவரை கைப்பிடிப்பர். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

மார்கழி
ராசிக்கு 11-ல் குரு, சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் மிகவும் அற்புதமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களின் உடல் நலமும் சிறப்படையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எல்லா வகையிலும் மேன்மையும் உயர்வும் உண்டாகி மனமகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்கள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

தை
லாப ஸ்தானமான 11-ல் குரு, கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் சுபிட்சமான நிலையிருக்கும். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த திருமண சுபகாரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் எல்லா விதமான தேவைகளும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். அசையும் அசையா சொத்துகளும் வாங்குவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் தடையின்றி கிட்டும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்யவும்.

மாசி
ராசிக்கு 2-ல் சுக்கிரன் 11-ல் குரு, செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் எதிலும் முன்னேற்றமான நிலை ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் எல்லாத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுபகாரியங்களும் சிறப்பாக கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் வரவேண்டிய ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி வந்து சேரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெற முடியும். பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் நல்லது.

பங்குனி
லாப ஸ்தானமான 11-ல் குரு, செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் உறவினர்களால் சாதகப் பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உடன் பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 5,6,7,8,
கிழமை – வெள்ளி, சனி
திசை – மேற்கு
நிறம் – வெள்ளை, நீலம்
கல் – நீலக்கல்
தெய்வம் – ஐயப்பன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சி பாலியல் வழக்கு! 5வது குற்றவாளியும் கைது! சிபிசிஐடி அதிரடி விசாரணை!
Next articleமீனம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !