காளி கோவில்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Kaali Kovil!
இருள்.நட்சத்திரங்களும் அற்ற மேக இருள்.வானத்திருளை வெட்டி மடிக்கும் மின்னல்கள்.இருளுடன் இருளாக நகரும் நதி, படிகளில் மோதி எழுப்பும் அலைகளினால் அன்றித் தெரியாது.கரைக்கு வடக்கே ஒரு கோவில், இருள் திரண்டு எழுந்து நின்ற மாதிரி.அதனுள் தீப ஒளி தழுவி விளையாடும் காளி விக்கிரகம். கறுத்த பளிங்கினால் ஆக்கியது.
அந்தச் சிற்பியின் கைவண்ணந்தான் என்ன! கோரத்திலே ஒரு அழகு, ஒரு பெண்மை இருகிய கல்தான். அதில் என்ன எழில்!தீபத்தின் மீது கவிந்து அமுக்குவது போல் இருள் பம்மும் பிரகாரம்.திடீரென்று எங்கும் அந்தகாரம்!நடுநிசி!விக்கிரகத்திலிருந்து மெல்ல நிலவும் ஒளி.தேவியின் கண்களில் ஒரு பிரகாசம். உதடுகளில் உயிர்க் குறியின் புன்சிரிப்பு. மார்பு மேலோங்கி இறங்குகிறது.
தேவி எழுகிறாள்!ஜோதியின் நிலவு தரையைத் தடவ, அந்தக் கறுத்த அழகு மெதுவாகச் சென்று நதியில் முழுகுகிறது.கோவிலில் தீபத்தை அமுக்க முயன்ற அந்தகாரத்தின் வெற்றி.தீபக்கால் திரண்டு வளருகிறது. இருளுக்குள் மைக் கொழுந்தாய் வளரும் ஒரு மனித உருவம். ஒரு சமயம் விம்மி உயர்ந்த விஸ்வரூபம். பனை மரக் கை கால்கள் உயரத்திலே வெள்ளைப் பற்களும், அதற்கு மேல் இரண்டு நட்சத்திர ஒளிகளும் தலை இருக்குமிடத்தைக் குறித்தன. இவ்வளவு சிறிய கோவிலில் முகட்டை மீறும் உருவ ஆகிருதி.
அடுத்த நிமிஷம் ஒன்றரையடி உயரமுள்ள கனிந்த இருள் கொழுந்து. அடுத்த கணம் ஐந்து அடி உயரம். சிகை முழங்கால்வரை விழுந்து ஆடையாக உடலை மறைக்கிறது.பேய்! தேவியின் அடிமை.அது பிரகாரத்தில் ஒரு மூலையில் மறைகிறது.அங்கே அந்த மூலையில் அந்தப் பேய் ஏன் இப்படிக் குனிந்து குனிந்து அசைகிறது?பிரகாரம் முழுவதும் அந்தகாரத்துடன் கலக்கும் ஓர் அற்புதமான பரிமள கந்தம்.
தேவியின் வாசனைச் சாந்து.அரை கல்லின் பின்புறத்திலிருந்து எங்கிருந்தோ இறங்கியது மற்றொரு பேய்.சற்று நேரம் வெகு உத்ஸாகம். சந்தனமரைப்பதைப் பார்ப்பதிலே. வெண்ணெய் போல் குழைந்த வாசனைச் சாந்தைத் தொட்டு முகர ஆசை.தொட்டுவிட்டது!அரைத்த பேயின் முகத்தில், பயங்கரம், கோபம், பரிதாபம் கலந்து விளங்கின.
ஆற்றங்கரையிலே தேவியின் முகத்தில் சடக்கென்று கோப ஒளி அலை போல எழுந்து மறைந்தது. உதட்டில் ஒரு துடிதுடிப்பு!தேவியின் சாந்து! என்ன அபசாரம்!சுவரில் தேய்க்கிறது. கருங்கல் தரையில் தேய்க்கிறது. ஒவ்வொரு நிமிஷமும் வாசனை அதிகமாகிறதே. குற்றந்தான். மறைக்க வழியில்லையா? மருந்ததற்கில்லையா?அரைத்த பேய் சிரிக்கிறது!
ஒரு பயங்கரமான ஏளனச் சிரிப்பு.திருட்டுப் பேய் விலவிலத்து அப்படியே இருந்துவிடுகிறது.எப்படியிருந்தாலும் தோழனல்லவா? உதவி செய்யாமலிருக்க முடியுமா?குற்றம் புரிந்த பேயைப் படித்துறைக்கு அழைத்துச் செல்லுகிறது. போகும் வழியிலெல்லாம் சாந்தின் வாசனை திருட்டுத்தனத்தைப் பட்டவர்த்தனமாகப் பரப்புகிறது.
கரையிலிருந்த மணலைப் போட்டுத் தேய்த்தாகிவிட்டது. பாறையிலுந் தேய்த்தாகிவிட்டது. கைதான் தேய்கிறது. தேய்க்கத் தேய்க்க வாசனைதான் அதிகமாகிறது.தேவி பின்புறத்தில் நிற்கிறாள். அதை அவை அறியவில்லை.சாந்தரைத்த பேய்க்கு ஒரு யுக்தி தோன்றுகிறது! மடியிலிருந்த ஒரு வளைந்த கத்தியை எடுக்கிறது.
குற்றம் புரிந்த விரல்களை இழுத்துப் படிக்கல்லில் வைத்து…பட்!…விரல்களும் இரத்தமும் ஆற்றில் கலந்து மறைகின்றன.என்ன குதூஹலம்!இரண்டும் அண்ணாந்துகொண்டு ஒரு எக்காளச் சிரிப்பு; தேவியின் புன்னகையுடன் கலக்கிறது.“ஐயோ! தேவி”பாதத்தில் மண்ணோடு மண்ணாய் விழுகின்றன. தேவி தன் மலர்க்கைகளால் அருள் புரிகிறாள்.மின்வெட்டுப்போல் தேவி கோவிலுள் மறைகிறாள். குனிந்து வணக்கமாகத் தொடருகின்ற இரண்டு குற்றவாளிகள்…பழைய தீபவொளி தழுவி முயங்கும் கற்சிலை.பழைய கோவில்.பழைய அந்தகாரம்.மணிக்கொடி, 10-06-1934.
எழுத்தாளர்: புதுமைப்பித்தன்