முதலில் ‘காக்கா வலிப்பு’ என்று சொல்வதே தப்பு. இதற்கும் காகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்படிச் சொல்வதால் ஒருவித வினோத அர்த்தம் வந்துவிடுகிறது. உண்மையில் இந்த வலிப்புக்கு ‘கால்கை வலிப்பு’ என்பதே சரியான பதமாகும்.
மூளையில் திடீரென ஏற்படும் மிகை மின்பாய்ச்சலினால் உருவாகும் உணர்வுக் கொந்தளிப்பு ஏற்படுத்தும் நனவு இழப்புத்தான் இந்த வலிப்பின் காரணியாகிறது. அதிலிருந்து மீள்வதற்காக கை,கால் போன்ற உறுப்புகளின் அசைவுகளை உருவாக்கும் மூளையின் ஒருவிதப் பொறிமுறையே வலிப்பாக வெளிப்படுகிறது.
அரை நிமிடம் முதல் ஒரு நிமிடம் வரை தொடரும் இந்த வலிப்பு மெல்ல மெல்லத் தானாகவே அடங்கிவிடும். அபூர்வமாகச் சில விதிவிலக்குகளும் உண்டு. கால்கை வலிப்பு வரும்போது இரும்பைக் கொடுத்தால் அது நின்றுவிடும் என்பது ஒருவித மூடநம்பிக்கைதான். கொடுக்கவிட்டாலும் நின்றுவிடும் என்பதுதான் உண்மை. சொல்லப் போனால், இரும்பு வகைகளை வலிப்பு வருபவர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதே சிறந்த வழிமுறையும், புத்திசாலித்தனமுமாகும். கொடுப்பதால் அவற்றின் மூலம் தங்களைத் தாங்களே காயப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும்.
உங்களுக்கு அருகில் இருப்பவர் ஒருவருக்கு இப்படியான வலிப்பு வந்தால் முதலில் எந்தப் பதட்டமும் இல்லாமல், அவரைப் பாதுகாப்பான இடத்தில், பாதுகாப்பான வகையில், இடதுபக்கம் சாய்ந்திருக்கும் நிலையில் படுக்க வையுங்கள். சுற்றிவர இருப்பவர்களை விலத்தி, சுத்தமான காற்றைச் சுவாசிக்க வழிசெய்யுங்கள். எந்தக் காரணம் கொண்டும் தண்ணீரை முகத்தில் அடித்து எழுப்ப முயற்சிக்க வேண்டாம். வலிப்புத் தானாகவே நின்று நிதான நிலைக்கு வரும்.
இப்போதெல்லாம் இதற்குச் சிறந்த மருந்துகள் வந்துவிட்டன. அவற்றை மருத்துவர்களின் அறிவுரைப்படி தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதுமானது.