எண்கள் சொல்லும் பலன்களும் எதிர்காலமும் ! நீங்கள் இப்படிதானா? அல்லது மற்றவர்கள் மட்டும் இப்படியா?

0

நட்சத்திரத்தின் அடிப்படையில் ஆதிக்க எண்ணை கண்டுபிடிக்கலாம். உதாரணமாக, ஒருவர் பரணி நட்சத்திரத்தில் மேஷ ராசியில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ராசியில் மேஷம் 1-வது ராசியாகும். நட்சத்திரத்தில் பரணி 2-வது நட்சத்திரம் ஆகும். ராசியின் எண்ணாகிய 1-ஐயும் நட்சத்திரத்தின் எண்ணாகிய 2-ஐயும் பெருக்கி வரும் எண் 2. எனவே, அவர் 2-ம் எண்ணின் ஆதிக்கத்தில் இருப்பவர் என்று தெரிந்துகொள்ளலாம். ராசி மற்றும் நட்சத்திரம் தெரியாதவர்கள், பிறந்த தேதியின் அடிப்படையில் ஆதிக்க எண்ணை தெரிந்துகொள்ளலாம்.

ஒருவர் எந்த தேதியில் பிறந்தாரோ அந்த தேதி எண்ணே அவருக்கு உரிய ஆதிக்க எண்ணாகும். பிறந்தது 3-ம் தேதியெனில் ஆதிக்க எண் 3. பிறந்த தேதி 12 எனிலும் (1+2) ஆதிக்க எண் 3-ஆக அமையும். இனி, உங்கள் ஆதிக்க எண்ணுக்கு உரிய குணங்களையும், பலன்களையும் அறிவோமா?

எண்களும் பலன்களும்…

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் 1-ஆக அமையப்பெற்றவர்களும் இந்த எண்ணைச் சேர்ந்தவர்களே.

சூரியனால் குறிக்கப்படும் எண் 1 ஆகும். உலக வாழ்க்கைக்கு சூரிய சக்தி எப்படி அவசியமோ அப்படியே எண் 1-ஐ சேர்ந்தவர்களும், அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்த நாட்டுக்குச் சென்றாலும் முக்கியமான இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றனர். வேலை செய்யும் அலுவலகத்தில் இவர்களே முதன்மையான இடத்தைப் பெற்றிருப்பதையும், அனைவராலும் மதிக்கத்தக்கவர்களாக இருப்பதையும் அனுபவத்தில் பார்க்கலாம்.

1-ம் தேதி பிறந்தவர்கள்:

மற்றவர்களுடைய அபிப்ராயங் களைப் பொறுமையுடன் செவிமடுக்க மாட்டார்கள். எதையும் மறுத்தே பேசுவார்கள். மனதில் உள்ளதை உள்ளபடி பேசுவர். இவர்கள், பிறரை அனுசரித்துச் செல்வது கடினம். தன் விருப்பப்படித்தான் எதுவும் நடக்கவேண்டும் என்று விரும்புவார்கள். அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை இவர்களிடம் காணப்படும். வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

10-ம் தேதி பிறந்தவர்கள்:

சாதுவாகக் காணப்படுவர். ரகசியங்களைப் பாதுகாப்பர். சமூகத்தில் பிரபலமான நிலையை அடைவர். மற்றவர்களிடம் அன்பும் பாசமும் கொண்டிருப்பர். இவர்களுடன் பழகுவது மிகவும் இனிய அனுபவமாக இருக்கும் என்பதால், அனைவரும் இவரிடம் நட்பு பாராட்டுவர்.

19-ம் தேதி பிறந்தவர்கள்:

சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள். பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும், காரியத்தில் இறங்கிவிட்டால், எப்படியும் சாதித்துக் காட்டுவார்கள். எந்தக் காரணத்துக்காகவும் தன்னுடைய அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள மட்டார்கள். இலக்கியத்தில் புலமை உண்டு.

28-ம் தேதி பிறப்பவர்கள்:

பார்வைக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் காணப்படுவர். மற்றவர்களுடன் மென்மையாக, சிரித்த முகத்துடன் பேசுவர். இந்த எண்ணில் பிறந்தவர்களிடம் பெண்களின் மென்மையைக் காணமுடியும்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகள் இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான நாள்களாகும். இந்தத் தேதிகளில் சந்தோஷம் தரும் சம்பவங்கள் நடைபெறும். கூடுமானவரை முக்கியமான காரியங்களை 1, 10, 19 ஆகிய தேதிகளில் செய்யத் தொடங்கினால் நல்ல பலன்கள் ஏற்படும்.

28-ம் தேதி தொடங்கும் காரியங்கள் நீடித்து பலன் தரும் என்று சொல்வதற்கில்லை. எனவே, அந்த தேதியில் புதிய முயற்சிகள் எதையும் தொடங்கவேண்டாம்.

தவிர்க்கவேண்டிய தேதிகள்: ஒவ்வொரு மாதமும் 8, 17, 26 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத நாள்களாகும். இந்தத் தேதிகளில் எந்த புதிய முயற்சியையும் தொடங்காமல் இருப்பது நல்லது. வழக்கமான காரியங்களில் மட்டும் ஈடுபடலாம்.

அதிர்ஷ்ட நிறங்கள்: எண் 1-ன் ஆதிக்கத்தில் பிறந்த அன்பர்களுக்கு, மஞ்சள் நிறமே மிகவும் அதிர்ஷ்டம் தரும் நிறமாகும். பொன்னிறம் இவர்களுக்கு மகத்தான வெற்றியைத் தரும். வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர்த்தியான மஞ்சள் நிறம் வரை மஞ்சளின் அனைத்து நிறங்களும் பொருத்தமானதே. கறுப்பு மற்றும் பழுப்பு நிறங்களைத் தவிர்க்கவும். இவை, இவர்களுக்கு ஆகாத நிறங்களாகும்.

அதிர்ஷ்ட ரத்தினம்: மாணிக்கம்

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன், சிவபெருமான்

வழிபடவேண்டிய தலங்கள்: சூரியனார் கோயில், சென்னை- பொன்னேரி அருகிலுள்ள ஞாயிறு திருத்தலம்.

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறக்கிறவர்கள் இந்த எண்ணால் ஆளப்படுகிறார்கள். சிருஷ்டியில் ஒன்றாக இருந்தது, சலனமடைந்து இரண்டாயிற்று. சலனமடைந்து உண்டானபடியால், ஜல தத்துவமாயிற்று. இதிலிருந்து உண்டானது மனம். இது சந்திரனால் ஆளப்படுகிறது. சந்திரனால் இவ்வெண் குறிக்கப்படுவதால் இவர்களைப் பற்றி பொது ஜனங்கள் பேசிய வண்ணம் இருப்பார்கள். சந்திரன் சுப பலம் பெற்று இருந்தால் நல்லவிதமாகவும் சந்திரனின் ஆதிக்கம் குறைந்து காணப்பட்டால் மாறாகவும் பேசப்படுவார்கள்.

2-ம் தேதி பிறந்தவர்கள்:

அதீத கற்பனா சக்தியும், உயர்ந்த லட்சியங்களும் உடையவர் களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் காணப்படுவர். மனோசக்தி மிகுந்தவர்களாதலால், தீவிரமான கற்பனைகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். சமூகத்தை திருத்தி அமைப்பது பற்றிய புரட்சிகரமான எண்ணங்கள் இருக்கும். தன்னுடைய எழுத்துகளாலும் பேச்சுகளாலும் புரட்சியை உண்டாக்குவர். இவர்கள் சுலபத்தில் கோபத்துக்கு ஆட்படமாட்டார்கள்.

11-ம் தேதி பிறந்தவர்கள்:

தெய்வ நம்பிக்கையும் தெய்வ அனுக்ரஹமும் உடையவர்கள். நம்பிக்கையாலேயே எந்தக் காரியத்தையும் மிக எளிதில் சாதித்துவிடுவார்கள். படிப்பு, செல்வம் முதலிய வசதிகள் இல்லாமலிருந்தும், ஆழ்ந்த நம்பிக்கையொன்றையே துணையாகக்கொண்டு மிக எளிய நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலையை அடைவார்கள்.

20-ம் தேதி பிறப்பவர்கள்:

மிதமிஞ்சின கற்பனாசக்தியும், தெய்வ அனுக்ரஹமும் உடையவர்கள். உலகம் இவர்களை வழிகாட்டியாக எண்ணி வழிபடும். சுயநலமின்றி வாழ்ந்தால், மற்றவர்கள் இவரை தெய்வத்துக்கு நிகராகப் போற்றுவார்கள். சுயநலத்துடன் செயல்பட்டால் கஷ்டத்துக்கு ஆளாக நேரும். இவர்களுக்குப் பேராசை இல்லாமல் இருந்துவிட்டால், மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகக் கூடிய கண்ணியமான வாழ்க்கை அமையும்.

29-ம் தேதி பிறந்தவர்கள்:

மற்றவர்களை சிரமப்படுத்துவார்கள். தேவையில்லாமல் சண்டை போடுவார்கள். மற்றவர்கள் தன்னை ஏமாற்றிவிடுவதாகக் கூறுவார்கள். இவர்களிடம் மற்றவர்கள் உதவியை எதிர்பார்க்கமுடியாது. தன்னுடைய காரியத்திலேயே குறியாக இருப்பார்கள். கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் இவர்களுக்குக் கைவந்த கலை. குழந்தைப் பருவத்தில் இருந்தே பெற்றோர்கள் இவர்களைக் கண்காணித்து வளர்க்கவேண்டும். அப்போது இவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: ஒவ்வொரு மாதத்திலும் வரும் 7,16, 25 தேதிகள், 2-ம் எண் காரர்களுக்கு மிக்க அதிர்ஷ்டமான தினங்கள். எதிர்பாராதபடி அநேக நன்மைகள் ஏற்படும். செய்கிற காரியங்களிலும் தகுதிக்கு மேல் ஆதாயம் கிடைக்கும். சந்தோஷகரமான காரியங்கள் நிகழும்.

தவிர்க்கவேண்டிய தேதிகள்: இவர்களுக்கு 8,9,18,26 தேதிகள் அனுகூலம் இல்லாத நாள்கள் ஆகும். இந்நான்கு தினங்களிலும் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மேலும் கூட்டு எண் 8 அல்லது 9 வரும் நாள்களிலும் புது முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கு வெளிர் பச்சை வண்ணமே மிக அதிர்ஷ்டமானது. இந்த எண் காரர்கள், தாங்கள் வசிக்கும் வீட்டின் அறைச் சுவர்கள், மற்றும் சுற்றுப்புறம் மற்றும் உடுத்தும் உடை ஆகியன வெளிர் பச்சை வண்ணத்தில் இருந்தால் உற்சாகமும் அமைதியும் உண்டாகும். கறுப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் ஆகிய வண்ணங்கள் தீமையை ஏற்படுத்தும் என்பதால் இந்த நிறங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட ரத்தினம்: முத்து

வழிபடவேண்டிய தெய்வம்: பாலசந்திர கணபதி, சிவபெருமான்

வழிபடவேண்டிய தலம்: திங்களூர்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 3-ம் எண் காரர்கள். `3′ என்ற எண் சக்தியைக் குறிக்கும். இந்த எண்ணுக்கு உரிய நாட்களில் பிறப்பவர்களில் பெரும்பாலோர் தலைவர்களாகப் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்குக் காரணம், அவர்களுடைய பரோபகார சிந்தையும், தேச முன்னேற்றத்திலுள்ள ஆர்வமுமேயாகும். தியாகி களும், தேசாபிமானிகளும், கப்பற்படை முதலான மிதமிஞ்சின கட்டுப்பாடுடைய ஸ்தாபனங்களின் தலைவர்களும் இவ்வெண் குறிக்கும் தேதிகளில் பிறந்தவர் களாகக் காணப்படுவர். இன்னும் சில அன்பர்கள், வங்கிப் பணியாளர்களாகவும், ஆசிரியராகவும் இருப்பார்கள்.

3-ம் தேதியில் பிறந்தவர்கள்:

நல்ல சிந்தனா சக்திகள் உடையவர்களாக இருப்பர். இவர்கள் தெய்வ பக்தியை வளர்த்துக்கொள்வதுடன், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவேண்டும். கலைகளை ரசிப்பார்கள். வாழ்க்கை கௌரவமாகவும், உயர்வாகவும் அமையும். மத்திம வயதுக்கு மேல் புகழ் உண்டாகும்.

12-ம் தேதியில் பிறப்பவர்கள்:

தன்னலம் இல்லாத உழைப்பினாலும், தியாகத்தாலும் புகழடைவர். வாழ்க்கையே உலக நன்மைக்கான தவமாகத் திகழும். பொதுக் காரியங்களில் ஈடுபட வேண்டும். தியாகிக்கான குணங்களெல்லாம் பிறவிலேயே அமைந்திருக்கும். இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.

21-ம் தேதி பிறந்தவர்கள்:

ஓரளவு சுயநலத்துடன் நடந்துகொள்வார்கள். தாங்கள் செய்யும் தியாகத்துக்குப் பலனை எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பொது அறிவை வளர்த்துக்கொள்கிறார்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். செய்தியாளர் களாகவும், உலகத்தவரின் அபிப்ராயங் களை மாற்றி அமைப்பவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், மன வலிமையால் முன்னேறுவார்கள்.

30-ம் தேதி பிறந்தவர்கள்:

தீர்க்க சிந்தனையுடன், நுட்பமான அறிவும் கொண்டிருப்பார்கள். எதையும் தன் விருப்பப்படியே செய்வார்கள். எதையும் கூர்ந்து கவனிப்பதில் வல்லவர்கள் என்பதால், இவர்கள் பெரும்பாலும் உளவுத் துறைகளில் பணி செய்வார்கள். மிகுந்த துணிச்சலும் நெஞ்சழுத்தமும் கூடிய இவர்கள் தோல்வியைக் கண்டு கலங்கமாட்டார்கள். கலைகளில் சுலபமாகத் தேர்ச்சியடையக் கூடிய இவர்கள், தங்களுடைய ஆற்றலை முழுவதும் பயன்படுத்துவார்கள்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 3,9,12,18,21,27,30 தேதிகள் மிகுந்த நன்மை தரும். முக்கிய மான காரியங்களை இந்தத் தேதிகளிலேயே ஆரம்பிக்கவும். நீடித்து பலன் தர வேண்டிய காரியங்களை தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 3 அல்லது 9 எண் வருவதாக உள்ள தினங்களில் தொடங்கலாம்.

தவிர்க்கவேண்டிய தேதிகள்: 6,15,24 தேதிகள், சில நேரங்களில் சாதகமாகத் தோன்றிப் பின்னர் தீமை விளைவிக்கும். இத்தேதிகள் தடங்கல்களையும், சிரமங்களையும் வாழ்க்கையில் ஏற்படுத்தும். தேதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டினால் 6 வரும் தினங்களில் பெரிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெளிர் சிவப்பு மற்றும் செந்நிறம் இவர்களுக்கு நன்மை தரும். மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த வண்ணங்களும் நன்மை தரும். கருநீலம், கறுப்பு, ஆழ்ந்த பச்சை ஆகியவை தவிர்க்க வேண்டிய நிறங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட ரத்தினம்: புஷ்பராகம்

வழிபடவேண்டிய தெய்வம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தி

வழிபடவேண்டிய தலம்: ஆலங்குடி

4,13,22,31 தேதிகளில் பிறப்பவர்கள், இந்த எண்ணின் பண்புகளை உடையவராவர். முதல் மூன்று எண்களும் அறிவு, மனம், இயக்கம் ஆகியவற்றைக் குறிக்கும் என்று சொன்னால், இந்த மூன்று சக்திகளையும் ஒருநிலைப்படுத்தி சமூகத்தை அமைக்கும் எண்ணாக எண் 4-ஐக் குறிப்பிடலாம்.

இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலரும் வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் புகழ் பெற்றுத் திகழ்வதை அனுபவத்தில் காணமுடிகிறது. மற்றவர்களுடன் வாதம் செய்வதில் இவர்களுக்கு நிகர் இவரே.

4-ம் தேதியில் பிறந்தவர்கள்:

13,22,31 தேதிகளில் பிறப்பவர்களை விட மிகுதியான கண்டிப்பு உடையவர்களாக இருப்பார்கள். நல்ல துணிச்சலும் பலமும் இருக்கும். போர் வீரர் போன்று வாழ்வர். வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து, சோர்வடையாமல் இருக்கவேண்டும். அதற்காகவே இவர்கள் தியானம் செய்வதில் ஈடுபடுவது நன்மை தரும். மற்றவர்களிடம் இனிமையாகவும் மென்மையாகவும் பேசவேண்டும்.

13-ம் தேதி பிறந்தவர்கள்:

திடுக்கிடக் கூடிய சம்பவங்கள் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும். அபாயங்கள் வந்து நீங்கும். சிறு வயதிலேயே குடும்பத்தில் இவர்களைப் பாதிக்கக் கூடிய மாறுதல்கள் ஏற்படும். மிக்க வலிமையுடைய இவர்கள், நேர்மையாகவும் மறைவில்லாமலும் நடந்துகொள்ள வேண்டும். அப்படி வாழ்ந்தால் மிக்க உன்னத நிலையை அடைவர்.

22-ம் தேதி பிறந்தவர்கள்: சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தவறான பாதையில் வழிநடத்தும். அந்த நேரங்களில் இவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். மற்ற மூன்று தேதிகளில் பிறந்தவர்களை விடவும் இவர்கள் எளிதாகப் பணம் சம்பாதிப்பார்கள். போட்டி பந்தயங்களிலும் பணம் சம்பாதிப்பர்.

31-ம் தேதி பிறந்தவர்கள்:

நல்ல தைரியசாலியாகவும், மிதமிஞ்சின மனோசக்திகளும், சூட்சும அறிவும் உடையவராகவும் இருப்பர். புதிதாகப் பழகுகிறவர்கள் கூட சில நிமிடங்களிலேயே, இவர் சாதாரண மனிதர் அல்ல என்று கண்டுபிடித்துவிடலாம். லாப நஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் தன் மனப் போக்கின்படியே செயல்படுவர். ஏகாந்த இடங்களுக்குச் செல்வதிலும், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பர்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 1,10,19,28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தினங்களாகும். இதில் 28-ம் தேதி கிடைக்கும் வெற்றிகள் சீக்கிரமே மறைந்துவிடும். 9,18,27 ஆகிய தேதிகள் சாதகமான பலன்களைத் தரும். 1,10,19,28 தேதிகளிலேயே முக்கிய காரியங்களைச் செய்து வந்தால் அதிர்ஷ்டம் விருத்தியடையும்.

தவிர்க்கவேண்டிய தேதிகள்: இவர்களுக்கு 8,17,26 ஆகிய தேதிகளில் எதிர்பாராத சிரமங்கள் வரும். ஆகவே, இந்தத் தேதிகளில் புதிய முயற்சிகள் துவங்குவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம் அல்லது நீலக்கோடுகள் போட்ட துணிகளே இவர்கள் மனதைக் கவரும். பரிசுத்தமான மனம் உடையவர்களாதலால் நீலத்தையே மிகவும் விரும்புவர். வெளிர்நீல நிற ஆடைகள் மனச்சாந்தி தரும். இவர்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் வண்ணம் மஞ்சள்.

அதிர்ஷ்ட ரத்தினம்: கோமேதகம்

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

வழிபடவேண்டிய தலம்: பட்டீஸ்வரம்

5,14,23 தேதிகளில் பிறந்தோரும், பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 5 எண்ணிக்கை வருவோரும் 5-ம் எண்ணின் ஆதிக்கத்தில் வருவர். மற்றவர்களை வசீகரிக்கும் தன்மை இவர்களுக்கு இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை சாதாரண நிலையில் ஆரம்பித்தாலும், விரைவிலேயே முக்கியப் பிரமுகராகி புகழ் பெறுவர்.

இந்த எண்ணில் பிறந்த அன்பர்களில் பலரும் தொழிலதிபர்களாக பிரகாசிக்கிறார்கள். இவர்களில் சிலர் இளம் வயதிலேயே ஆன்மிகத்தில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு குருவாகத் திகழ்கிறார்கள்.

5-ம் தேதியில் பிறந்தவர்கள்:

இவர்கள் சிறு வயதில் இருந்தே பெரிய லட்சியங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை வசீகரிக்கும்படியான குணங்களும், பிறரை மதிக்கும் பண்பும் இவர்களுக்கு இயல்பிலேயே அமைந்திருக்கும். மற்றவர்களுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்லி வழிநடத்துவார்கள். இவர்களில் சிலருக்கு தெய்விகமான வாழ்க்கை அமைவது உண்டு.

14-ம் தேதியில் பிறந்தவர்கள்:

பயணம் செய்வதிலும், பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஊக்கமும் பிடிவாதமும் சரிசமமாக இவர்களிடம் காணப்படும். பொருள்களைச் சேர்க்கும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. வியாபாரத்தில் பெருத்த லாபம் சம்பாதிப்பர். இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தபடி இருக்கும். எனினும் முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கக் கூடாது.

இந்த எண்ணில் பெயர் அமைந்திருக்கும் வர்த்தக நிறுவனங்கள் விரைவிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்துவிடும். பிறந்த தேதியோ அல்லது பெயர் எண்ணோ 14-ஆக அமையப் பெற்றவர்கள் எளிதில் மற்றவர்களின் அபிமானத்தைப் பெற்றுவிடுவார்கள். முகராசி என்று சொல்லுவார்களே அது இந்த எண்ணைச் சேர்ந்தவர் களுக்கு நிறையவே உண்டு.

23-ம் தேதி பிறந்தவர்கள்:

இவர்களால் சாதிக்க முடியாதது உலகில் ஒன்றுமேயில்லை. மிதமிஞ்சின ராஜ வசியமும், ஜன வசியமும் இருக்கும். இவர்களை விட மேல்நிலையில் இருப்பவர்களும் இவர்களைப் புகழ்வர். இவர்களுடைய பெயர் மட்டும் சரியாக அமைந்து விட்டால், உலகை ஒரு குடையின் கீழ் ஆளலாம். இவர்கள் மேலான பண்புகளையும், நல்ல நடத்தையையும் கொண்டிருந்தால், சரித்திரத்தில் இடம் பெறும் அளவுக்கு சாதனைகள் புரிந்து, பலரும் போற்றும்படி வாழ்வார்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: 5,14,23 தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மற்றபடி தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டினால் 5 என்று வருகிற மற்ற தேதிகளிலும் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு மாதத்திலும் வரும் 5, 9, 14, 18, 23, 27 தேதிகளே அதிர்ஷ்டமான தினங்கள். இந்தத் தேதிகளில் தொடங்கும் காரியங்களில் அபரிமிதமான முன்னேற்றம் காணலாம்.

தவிர்க்கவேண்டிய தேதிகள்: எந்தத் தேதியில் பிறந்தவர்களையும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்பதால், இந்த எண்ணைச் சேர்ந்தவர்களுக்கு எல்லா நாளுமே அதிர்ஷ்டம் தரக்கூடிய நாள்களாகவே அமையும். எனவே, இவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாத நாட்கள் என்று தனியாக ஒரு தேதியையும் குறிப்பிடுவதற்கு இல்லை.

அதிர்ஷ்ட நிறங்கள்: சாம்பல் வண்ணமே அதிர்ஷ்டமானது. பச்சை, கறுப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்களை தவிர்த்துவிடவும். இந்த நிறங்களாலான ஆடைகளையும் ஒரு நாளும் அணியலாகாது.

அதிர்ஷ்ட ரத்தினம்: வைரம்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

வழிபடவேண்டிய தலம்: திருவரங்கம், திருவெண்காடு

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசப்படுத்தி ஆளும் திறமை கொண்டவர்கள். எப்படி மற்றவர்களை வசப்படுத்தி தான் சுகமாக வாழ்வது என்னும் கலையைப் பிறவியிலேயே கற்றவர்கள். சுக்கிரனது ஆதிக்கத்தில் பிறக்கும் இவர்கள் அதிகாரம் வகித்தல், அடக்கி ஆளுதல் ஆகிய திறமைகளைப் பெற்றிருப்பார்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான வாழ்க்கை இவர்களுக்கு அமையும். பிறரை மகிழ்விக்கும் நடிப்பு, நடனம் போன்ற கலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள். இவர்களில் சிலர் ஆன்மிகத் துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தத் துறையில் புகழ் பெற்று விளங்குவார்கள்.

6-ம் தேதி பிறந்தவர்கள்:

இவர்கள், மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவர்களாக இருப்பர். அடக்கமான சுபாவத்துடன் காணப்படும் இவர்களிடம் ஆழ்ந்த கருத்துகளும் இருக்கும். கலைகளில் சுலபமாக தேர்ச்சி ஏற்படும். பொருள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வமிருக்கும். இந்தத் தேதியில் பிறக்கும் ஆண்களிடம் பெண்ணின் மென்மை இழையோடிக் காணப்படும். ஆன்மிகம் சார்ந்த பத்திரிகைகளில் இவர்கள் பெயரும் புகழும் பெறுவார்கள்.

15-ம் தேதியில் பிறந்தவர்கள்:

மிக வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். எல்லோரையும் வெகு எளிதில் வசப்படுத்தக் கூடியவர்கள். ஆதாயம் வந்துகொண்டே இருக்கும். பிரமிக்கத்தக்க பேச்சாற்றலும் கலைகளில் தேர்ச்சியும் உண்டு. இவர்கள் சாதாரணமாகப் பேசுவதே ஒரு பிரசங்கி பேசுவதுபோல் இருக்கும். எப்போதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவார்கள். இவர்கள் தங்களுடைய பேச்சினால் மற்றவர்களை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். நடிப்பு, நடனம் போன்ற கலைகளில் புகழும் பொருளும் ஈட்டுவார்கள். ஒருசிலர், ஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்வதிலும் புகழ்பெற்றுத் திகழ்வார்கள்.

24-ம் தேதியில் பிறந்தவர்கள்:

அடக்கமாகக் காணப்படுவர். மற்றவர்களிடம் நயமாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வதில் சமர்த்தர்கள். சமயோசிதமாகப் பேசுவதில் இவர்களை யாராலும் மிஞ்சமுடியாது. இந்தத் தேதியில் பிறந்தவர்களுக்குத் துணிச்சல் அதிகம் இருக்கும். இவர்களுடைய மண வாழ்க்கை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். அரசாங்கத்திலும் தனியார் நிறுவனங்களிலும் பெரிய பெரிய பதவிகள் இவர்களைத் தேடிவரும். இவர்கள் எந்த இடத்தில் பணி செய்தாலும், தனக்கு மேல் உள்ளவர்களாலும் பெரிதும் விரும்பிப் பாராட்டப்படுவார்கள். பொதுவாக இவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் கஷ்டங்கள் எதுவும் ஏற்படாது என்பதால், இவர்களுடைய வாழ்க்கை சுகமும் சந்தோஷமும் நிறைந்ததாகவே இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: முக்கியமான காரியங்களை 6,15,24 தேதிகளில் துவக்கலாம். இந்த தினங்கள் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் விருத்தியையும் உண்டாக்கும்.

தவிர்க்க வேண்டிய தேதிகள்: 6 என்பது சுக்கிரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட எண் என்பதால், குருவின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட எண்ணைக் கொண்ட 3,12,21,30 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை. இந்த தேதிகளில் முக்கியமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண் காரர்களுக்குக் கரும்பச்சை, கருநீலம், நீலம், பச்சை மற்றும் சிவப்பு கலந்த வண்ணங்கள் அதிர்ஷ்டமானவை. வெள்ளை, மஞ்சள், வெளிர் சிவப்பு நிறங்களைத் தவிர்க்கவேண்டும்.

அதிர்ஷ்ட ரத்தினம்: மரகதம்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி

வழிபடவேண்டிய திருத்தலம்: திருவரங்கம்

7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவால் குறிக்கப்படும் 7-ம் எண்ணின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள்.

மனதுக்கு எட்டாத பொருள்களையும், தெய்விகம் பொருந்தியவற்றையும் நம் முன்னோர் ஏழு பிரிவுகளாகப் பகுத்தனர். வாரநாட்களை ஏழு நாட்களாகவும், இசையை ஏழு ஸ்வரங்களாகவும், ரிஷிகள் சப்த ரிஷிகளாகவும், சமுத்திரங்களை சப்த சாகரங்கள் என்றும், கன்னிகைகளை சப்த கன்னியர் என்றும் உலகங்களை சப்த லோகங்கள் என்றும் பகுத்துள்ளனர். இதிலிருந்து எண் 7-ன் சிறப்பை அறியலாம்.

இந்த எண்ணின் அதிபதி ஞானகாரகனாகிய கேது என்பதால், இந்த எண்ணைச் சேர்ந்த அன்பர்களுக்கு இயல்பிலேயே தெய்வ பக்தியும், ஆன்மிகத்தில் நாட்டமும் இருக்கும். ஆனாலும், இவர்கள் மனதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால் தவறான சேர்க்கையால் பெயரைக் கெடுத்துக்கொள்ளவும்கூடும்.

7-ம் தேதி பிறந்தவர்கள்:

சாந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருப்பர். புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகத் திகழ்வார்கள். தெய்வ வழிபாட்டில் முழுமையான நம்பிக்கையுடன் ஈடுபடுவர். குழந்தை உள்ளம் கொண்ட இவர்களின் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் இருந்தபடி இருக்கும்.

16-ம் தேதி பிறந்தவர்கள்:

7, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை விடவும் விசேஷமான மனோசக்தி உடையவர். இவர்களை சரியானபடி வழிநடத்தினால், இவர்களுடைய அபூர்வ சாமர்த்தியங்களை பிரகாசிக்கச் செய்யலாம். இந்தத் தேதியில் பிறந்தவர்களில் பலர் குழந்தைப் பருவத்திலேயே வித்வான்களாகவும் கவிஞர்களாகவும் கலைஞர்களாகவும் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.

25-ம் தேதி பிறந்தவர்கள்:

மதப்பற்று அதிகம் கொண்டவர்கள். தாங்கள் கடைப்பிடிக்கும் வழிபாடுதான் சரியானது என்று பிடிவாதமாக இருப்பார்கள். இவரைப் பலரும் பின்பற்றுவார்கள். இந்தத் தேதியில் பிறந்தவர்கள் சபைத் தலைவர்களாகவும், நீதிபதிகளாகவும் திகழ்வார்கள்; மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். இவர்களுக்கும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கவே செய்யும்.

பொதுவாக இந்த எண்ணில் பிறந்தவர்களின் மண வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் மனச் சஞ்சலம் இருக்கவே செய்யும். மேலும் இந்தத் தேதியில் திருமணம் செய்வதுகூட, மண வாழ்க்கையில் பிரச்னைகளை ஏற்படுத்தவே செய்யும்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: முக்கியமான காரியங்களை 2, 11, 20, 29 தேதிகளிலேயே செய்துவர வெற்றிகள் கிடைக்கும்.

தவிர்க்கவேண்டிய தேதிகள்: 8, 17, 26 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம் இல்லாத தேதிகள் ஆகும். தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி 8, 7 ஆகிய எண்கள் வரும் தேதிகளும் இவர்களுக்கு ஆகாத தினங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: இந்த எண் காரர்களுக்கு வெள்ளையே அதிர்ஷ்டமான நிறமாகும். இருந்தாலும் வெளிர் மஞ்சள், வெளிர் பச்சை போன்ற நிறங்களையும் பயன்படுத்தலாம். அடர்த்தியான நிறங்களை தவிர்க்கவேண்டும்.

குறிப்பாக சிவப்பு மற்றும் கறுப்பு ஆகிய நிறங்கள் இவர்களுக்கு ஆகாது.

அதிர்ஷ்ட ரத்தினம்: வைடூரியம்

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

வழிபடவேண்டிய தலம்: பிள்ளையார்பட்டி

8, 17, 26 ஆகிய தினங்களில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் 8 வரும் தினங்களில் பிறந்தவர்களும் எண் 8-ன் ஆதிக்கத்தில் வருவார்கள். கடுமையாக உழைப்பார்கள். இவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறார்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் முன்னேறுவார்கள். பொதுவாக இந்த எண்ணை அதிர்ஷ்டம் இல்லாத எண் என்றுதான் சொல்வார்கள். ஆனால், இந்த எண்ணில் பிறந்தவர்களில் பலர் சமூகத்தில் உயர்ந்த நிலைக்குச் சென்றிருக்கிறார்கள். இந்த எண்ணின் அதிபதி சனிபகவான் என்பதால், மற்றவர்களிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்வார்கள்.

அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பிலும், நீதித் துறையிலும் இந்த எண்ணில் பிறந்தவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

8-ம் தேதியில் பிறந்தவர்கள்:

அமைதியான வாழ்க்கையையே எப்போதும் விரும்புவார்கள். பலதரப்பட்ட காரியங்களையும் சாதிக்கத் துடிப்பார்கள். மதம், வேதாந்தம், தெய்வ வழிபாடு போன்றவற்றில் இவர்களின் மனம் ஈடுபடும். இவர்களின் உடல் சுகத்தை விரும்பினால், இவர்களின் உள்ளமோ தியாகத்திலும், ஆசைகளைத் துறப்பதிலும் ஈடுபடும். மற்றவர்களுக்கு ஏதாவது உபகாரம் செய்யவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். கடுமையாக உழைக்கும் இவர்கள், சமூக நன்மைக்காகப் பாடுபடுவார்கள்.

17-ம் தேதி பிறந்தவர்கள்:

வாழ்க்கையின் அடிமட்டத்தில் பிறந்தாலும் எப்படியாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முயற்சி செய்வார்கள். பெரிய அளவில் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். நியாயமான வழியில் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றால், சில தருணங்களில் இவர்களுடைய மனம் தவறான வழிகளில் செல்ல நினைக்கும். அதுபோன்ற நேரங்களில் இவர்கள் மனதைக் கட்டுப்படுத்தவேண்டும். இவர்களுடைய பெயர் எண் மட்டும் அனுகூலமாக அமைந்திருந்தால், ஏராளமான செல்வங்களைச் சேர்த்து வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அனுபவிப்பர்.

26-ம் தேதி பிறந்தவர்கள்:

சுயமாக உழைத்து முன்னேறும் குணம் கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறு வயதிலேயே ஏதேனும் காரணத்தால் பெற்றோரைப் பிரிந்து வாழ நேரிடலாம். இவர்கள் வாழ்க்கையின் தொடக்கத்தில் கஷ்டங்களும் முன்னேற்றத் தடைகளும் ஏற்பட்டபடி இருக்கும். ஆனாலும், இயல்பிலேயே இவர்களிடம் காணப்படும் கற்பனை ஆற்றலும், நகைச்சுவை உணர்வும் இவர்களின் மனதை சோர்வு அடையச் செய்யாமல் வைத்திருக்கும்.

இவர்கள், மனதை தியானத்தில் ஈடுபடுத்துவது மிகவும் அவசியம். வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் இவர்கள் வாழ்க்கையில் செல்வமும் புகழும் சேரும்.

அதிர்ஷ்டம் தரும் தேதிகள்: இந்தத் தேதிகளில் பிறந்தவர்களுக்கு 1,10,19,28 ஆகிய தேதிகள் சிறப்பு தரும். மேலும் தேதி, மாதம், வருடம் போன்றவற்றைக் கூட்டினால் கூட்டுத்தொகை 1 வரும் தினங்களும் அதிர்ஷ்டமான நாட்களாகும்.

தவிர்க்கவேண்டிய தேதிகள்: 8,17,26 தேதிகளில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். இந்த தினங்கள், வீண் விவகாரங்களில் ஈடுபடுத்தி தீமைகளை விளைவிக்கக் கூடும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கரும்பச்சை போன்ற நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். கறுப்பு, பாக்கு நிறம் ஆகியன, 8-ம் எண் காரர்களுக்கு ஆகாத நிறங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட ரத்தினம்: நீலம்

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

வழிபடவேண்டிய தலம்: சுசீந்திரம், நாமக்கல்

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களும் தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டி, 9-ம் எண் வருபவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில் வருவர். எண்களில் மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது இந்த எண்ணே ஆகும். இந்த எண்ணை வேறு எந்த எண்ணால் பெருக்கினாலும் கூட்டுத் தொகை ஒன்பதுதான் வரும். சாதனைகளைச் செய்வதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும்.

செவ்வாயின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு, கோபம் அதிகம் இருக்கும். மற்றவர்களை அடக்கி ஆள நினைத்து அதில் வெற்றியும் காண்பார்கள். இவர்களில் பலரும் காவல், ராணுவம் போன்ற துறைகளில் சாதனைகள் புரிந்து புகழ் அடைவார்கள்.

9-ம் தேதியில் பிறந்தவர்கள்:

செயற்கரிய காரியங்கள் செய்ய ஆர்வம் உடையவர்கள். நுட்பமான அறிவுத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனதில் மேலான லட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் இவர்களுக்கு வளமான வாழ்க்கை அமையும். மிகக் கடுமையான எதிர்ப்புகளையும் சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி பெறுவார்கள். இவர்களுக்கு எதிரிகளாலும் அனுகூலமே உண்டாகும்.

18-ம் தேதி பிறந்தவர்கள்:

இயல்பிலேயே சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுடைய சுயநலத்தைத் தவிர்த்தால்தான், வாழ்க்கையில் முன்னேற்றமும் நன்மையும் உண்டாகும். இவர்கள் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தே எடுக்கவேண்டும். மற்றவர்களுடன் மனக் கசப்பை ஏற்படுத்தும் என்பதால், பழகுவதிலும் பேசுவதிலும் கவனம் தேவை. இயல்பிலேயே கோபமும் பிடிவாதமும் கொண்டிருக்கும் இவர்கள், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால், நன்மை ஏற்படும். பெரும்பாலும் இந்தத் தேதியில் பிறந்தவர்கள் மன அழுத்தம் உள்ளவர்கள் என்றே சொல்லலாம். வெளிப்படையாக எதையும் பேசமாட்டார்கள். இந்தத் தேதியில் பிறந்தவர்களை மற்றவர்கள் அனுசரித்து நடந்துகொண்டால், இவர்களால் ஆதாயம் பெறலாம்.

27-ம் தேதி பிறந்தவர்கள்:

எப்போதும் நல்ல செயல்களையே செய்து, நல்ல பலன்களையே அடைவார்கள். இவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் வெற்றி பெறும். அறிவால் சாதிப்பார்கள். மற்ற இரண்டு தேதிகளில் பிறந்தவர்களை விடவும் இவர்கள் சாந்த குணம் நிரம்பியவர்கள். தீவிர சிந்தனையும், சோர்வில்லாத உழைப்பும் இவர்களை வெற்றியாளர்களாக மாற்றும். பூர்வ புண்ணியத்தின் பயனாக தெய்வ அனுகூலம் இவர்களுக்கு பிறவியிலேயே அமைந்திருக்கும். மற்றவர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் பொறுப்புகள் இவர்களைத் தேடிவரும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், வெகு விரைவில் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடுவார்கள்.

சில தருணங்களில் மென்மையான அணுகுமுறை இவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே, நேரத்துக்குத் தக்கபடி திட்டமிட்டுச் செயலாற்றினால், எதிலும் எப்போதும் வெற்றியே!

அதிர்ஷ்டம் தரும் தினங்கள்: 9 என்ற எண்ணின் கீழ் பிறந்தோருக்கு 5, 14, 23, 9, 18, 6, 15, 24, 21, 30 ஆகிய தேதிகள், இந்த அன்பர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் தினங்கள் ஆகும். முக்கியமான காரியங்களையும், புதுத் தொழில்கள் துவங்குவதையும் இந்தத் தேதிகளில் மேற்கொண்டால் வெற்றியும், லாபமும் உண்டாகும்.

தவிர்க்கவேண்டிய தினங்கள்: 2,11,20,29 ஆகிய தேதிகள், 9-ம் எண் காரர்களுக்கு அதிர்ஷ்டமில்லாத தினங்கள் ஆகும்.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, கருஞ்சிவப்பு, நீலம் ஆகியவை. வெளிர் பச்சை மற்றும் வெண்மை நிறங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட ரத்தினம்: பவளம்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

வழிபடவேண்டிய தலம்: வைத்தீஸ்வரன்கோவில்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article9ம் எண் காரர்களே பேராசை வேண்டாம்! சனி உங்களை குறி வைத்திருக்கிறார்? சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020 !
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 09.10.2019