இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் இலங்கை அணிக்கு, முன்னாள் நட்சத்திர வீரரும், ஜம்பவானுமான மஹேல ஜெயவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை அணி விளையாடியுள்ள 5 போட்டிகளில் 1 போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. தற்போது மீதமுள்ள 4 போட்டிகளில் 2 போட்டிகளாவது கட்டாயம் வெற்றிபெற வேண்டும். அதுவும், அடுத்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற அணிகளை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜம்பவான் மஹேல ஜெயவர்தன கூறியதாவது, மத்திய வரிசையில் இரண்டு சிறந்த இணைப்பாட்டங்கள் இருந்திருந்தால், அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். நாம் கடந்த போட்டிகளில் விட்ட தவறினை மத்தியவரிசை வீரர்கள் இந்த போட்டியிலும் செய்திருந்தனர்.
குறித்த போட்டியில் இலங்கை அணியின் மத்தியவரிசை வீரர்கள் அணியின் பழைய துடுப்பாட்ட உத்திகளை கையாண்டிருக்க வேண்டும்.மத்தியவரிசை வீரர்கள் அனுபவம் மிக்க வீரர்கள். அவர்கள் ஓட்டங்களை பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், என்னை பொருத்தவரையில் எமது பழைய துடுப்பாட்ட முறையை கையாண்டால் அவர்களால் மீண்டுவர முடியும் என நினைக்கிறேன் என ஜெயவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.