அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும்
சென்னை : அரசு பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தங்களின் அடையாள அட்டையை தவறாது அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே தமிழக அரசின் அடிப்படை விதிமுறைகளில் உள்ளது. இருப்பினும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்கள் யாரும் தங்களது அடையாள அட்டையை முறையாக அணிவதில்லை.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில் அரசுச் செயலர் வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அலுவலக நேரங்களில் அடையாள அட்டையை ஊழியர்கள் அணிய வேண்டும் என்ற விதிமுறை உள்ள போதிலும், ஊழியர்கள் யாரும் அடையாள அட்டையை அணிவதில்லை என்ற புகார் தொடர்ந்து அரசுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அவர்களது நிழற்பட அடையாள அட்டையினைத் தவறாமல் அணிய வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்களது பெயர் மற்றும் பதவி ஆகியவை அதில் குறிப்பிடப்பட வேண்டும். உரிய அடையாள அட்டைகளை துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.